*சந்தீப் கிஷன் - 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு.*
நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், திவ்யன்ஷா கௌஷிக், வரலட்சுமி சரத்குமார், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். திரிபுரனேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதா மணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து வசனம் எழுதியிருக்கும் இந்த திரைப்படத்தை கரண் சி புரொடக்ஷன்ஸ் எல் எல் பி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் பரத் சவுத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை நாராயணதாஸ் கே நரங் வழங்குகிறார். பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னோட்டத்தில் கதையின் நாயகனான சந்தீப் கிஷனின் தோற்றம், அவரது நடிப்பு, சண்டை காட்சிகள், கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட கடும் உழைப்பு... ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. முன்னோட்டத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும், பின்னணியையும் விளக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக காதலிக்கும் பெண்களைப் பற்றி கௌதம் மேனன் எச்சரிக்கும் வசனங்களும், அதற்கு சந்தீப் கிஷன் பதிலளிக்கும் வசனங்களும் உணர்வுபூர்வமாகவும், வலிமையானதாகவும் இடம் பிடித்திருக்கிறது. கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை திவ்யன்ஷா கௌஷிக்கின் திரை தோன்றல் ரசிகர்களை காந்தம் போல் கவர்ந்திருக்கிறது. மேலும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் மிரட்டும் வகையிலான தோற்றமும் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது. இள வயதில் தோன்றும் சந்தீப் கிஷன், ஒருவரை துப்பாக்கியால் நேருக்கு நேர் சுடுவதுடன் முன்னோட்டம் நிறைவடைகிறது.
ஒரு அழகான காதல் கதையை ஸ்டைலிஷான காட்சி அமைப்புகளுடன் ரத்தம் தோய்ந்த ஆக்சன் என்டர்டெய்னர் போல் முன்னோட்டம் இருப்பதால், வழக்கமான கேங்ஸ்டர் படங்களை விட கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இயக்குநர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், பிரத்யேகமான முயற்சி எடுத்து, திரைக்கதை அமைத்து அதனை திரையில் காட்சிப்படுத்தியிருப்பதால் அவரது முயற்சி வெற்றியை தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மைக்கேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தீப் கிஷன், காதலி மீது காட்டும் அன்பும், எதிரிகள் மீது அவர் நடந்து கொள்ளும் விதமும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் இந்த முன்னோட்டத்தை கொண்டாடி வருகிறார்கள். 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் , அனுசுயா பரத்வாஜ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒவ்வொருவரும் வலுவான கதாபாத்திரத்தில் தோன்றுவதால், 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டம், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. https://youtu.be/HBTaKskrt9w