அரண்மனை பிரான்சைஸ் சுந்தர் சி.க்கு எப்பொழுதுமே கை கொடுக்கின்றது. தன் படங்கள் ஓடவில்லை என்றால் அரண்மனை படத்தை இயக்கி வெற்றி பெறுகிறார். அரண்மனை முதல் பாகம் வெளியான பிறகு ஆம்பள படம் ரிலீஸாகி கேலிக்கு ஆளானது. உடனே அரண்மனை 2 படத்தை இயக்கினார். வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்ஷன் ஆகிய தோல்வி படங்களை அடுத்து அரண்மனை 3 படம் ரிலீஸாகியிருக்கிறது.
அரண்மனை பிரான்சைஸ் படங்கள் பயமுறுத்துகின்றன, குழந்தைகளுக்கு ஜாலியாக இருக்கிறது, பெரியவர்கள் டென்ஷனை மறந்து சிரிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அதை பற்றி எப்படி குறை சொல்ல?. சுந்தர் சி.யின் முடிவு மிகவும் தெளிவு.
முதல் பாகத்தை போன்று ஒரு பேய் பழிவாங்கும் கதை தான் அரண்மனை 3. ஒரு அரண்மனை, அங்கு ஒரு பேய், சில வித்தியாசமான கதாபாத்திரங்கள்( பேயை முதல் ஆளாக கண்டுபிடிக்கும் ஒரு குழந்தை கண்டிப்பாக இருக்கும்), அழகான ஹீரோயின்கள், பார்க்க நன்றாக இருக்கும் ஹீரோக்கள், ஆபத்பாண்டவனாக சுந்தர் சி, சாமியார்கள், கிளைமாக்ஸில் ஒரு சாமி பாட்டு, விஷுவல் எஃபெக்ட்ஸ், காமெடி பாடல், அந்த சீசனில் உச்சத்தில் இருக்கும் காமெடியன்.
2014ம் ஆண்டு சந்தானம் நடித்தார். அவர் ஹீரோவாகிவிட்டதால் 2016ம் ஆண்டு சூரி நடித்தார். தற்போது யோகி பாபு. மேலும் விவேக்கும் நடித்திருக்கிறார்.
ஜமீன்தார் ராஜசேகரால்(சம்பத்) பாதிக்கப்படும் ஈஸ்வரி(ஆண்ட்ரியா) அவரையும், அவரின் மகள் ஜோதியையும்(ராஷி கன்னா) பழிவாங்க பேயாக வருகிறார். அந்த பேய் ஏன் தங்கள் குடும்பத்தை குறி வைக்கிறது என்று ஜமீந்தாரின் மருகமனான சுந்தர் சி. கண்டுபிடிக்க முயற்சி செய்யும்போது அரண்மனையை ரிப்பேர் செய்கிறேன் என்கிற சாக்கில் அங்கு வந்திருக்கும் ஜோதியின் காதலரான சரவணன்(ஆர்யா) உடம்பிற்குள் அது சென்றுவிடுகிறது.
மூன்றாம் பாகம் என்பதால் இரண்டு ஸ்டார் காமெடியன்கள், ஒன்றுக்கு 3 பேய்கள், பிரமாண்டமான செட்டுகள், பயங்கரமான கிளைமாக்ஸ் வைத்திருக்கிறார் சுந்தர் சி. படத்தை பார்ப்பவர்கள் பயப்படுகிறார்கள், காமெடி இருக்கிறது(முதல் பாகத்தை போன்று காமெடியாக இல்லை). படத்தின் பெரும்பாலான பகுதியில் ஆர்யாவை காணவில்லை.
ராஷி கன்னா அழகாக இருக்கிறார். சுந்தர் சி. நம்பிக்கையுடன் பேயை எதிர்கொள்கிறார். யோகி பாபு வழக்கம் போன்று அடுத்தவரை அசிங்கப்படுத்தி காமெடி செய்கிறார். ஆனால் எல்லாமே கணிக்கும்படி இருக்கிறது. அதனால் படம் முடியும்போது பெரிதாக ஆனந்தமோ அதே சமயம் ஏமாற்றமோ இல்லை. அது தான் சுந்தர் சி.யின் வெற்றி. எளிதில் மறக்கக்கூடிய படத்தை கொடுத்து நம்மை திருப்தி அடைய வைத்திருக்கிறார்.