Sunday, April 24, 2022

கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர் ஓடினாலும் லாபம் தராது" மெய்ப்பட செய் " இசை வெியீட்டு விழாவில் நடிகர் இயக்குநர் ராஜ்கபூர் பேச்சு...

கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர் ஓடினாலும் லாபம் தராது
" மெய்ப்பட செய் " இசை வெியீட்டு விழாவில் நடிகர் இயக்குநர் ராஜ்கபூர் பேச்சு...

மற்ற மொழி படங்கள் ஓடுகிறது என்று காழ்ப்புணர்ச்சியில் பேசாதீர்கள்  " மெய்ப்பட செய் " இசை வெளியீட்டு விழாவில்  இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு...


எஸ்.ஆர்.ஹர்ஷித்  பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து,  பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு, பிரபலங்கள்,  படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.  

தயாரிப்பாளர் நடிகர் P.R. தமிழ் செல்வம் பேசியதாவது….
புதுமுகங்கள் நடித்து தயாரித்த படமாக இருந்தாலும் திரையுலக பிரபலங்கள் ராஜன் சார் உதயகுமார் சார் வந்து வாழ்த்தியதற்கும் ஆதரவு தருவதற்கும் நன்றி. 

நடன அமைப்பாளர் தீனா பேசியதாவது.. 
ஒரு சின்ன கதையை வைத்து மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநர் முழு உழைப்பை தந்துள்ளார். பரணி சார் எந்த காம்ப்ரமைஸும்  செய்ய மாட்டார். அற்புதமாக பாடல் தருவார் பாடலின் நீளத்தை குறைக்க நாங்கள் தான் மிகவும் கஷ்டப்படுவோம். படத்தில் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளார்கள், இப்படத்திற்கு இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றி. 


இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது… 
தமிழ் சினிமாவின் கண்டண்ட் திலகம் ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அவர் தான் சிறு படங்களை வாழவைத்துகொண்டுள்ளார். தமிழ் சினிமா எப்படி இருக்கிறது என்பது அவர் பேச்சில் தான் விவாதிக்கப்படுகிறது. இப்படத்தின் எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ்க்கு முதலில் வாழ்த்துக்கள். இயக்குநர் வேலன் படத்தை நன்றாக எடுத்துள்ளார் மிகவும் பணிவாக உள்ளார். எங்களிடம் இருந்த பணிவை அவரிடம் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது பணிவு தான் எங்களை இந்த இடத்தில் வைத்துள்ளது. இயக்குநர் படத்தை மிக தெளிவாக தரமாக எடுத்துள்ளார். பாடல் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. பாடலில் நாயகி தலையனையை பிய்த்து பறக்க விடுவதெல்லாம் நிஜ வாழ்வில் அனுபவத்துடன் செய்வது போல் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள். நம்ம தமிழ் படங்களை விட மற்ற மொழி படங்கள் ஓடுகிறது என காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழை பார்த்து தான் பாலிவுட்டிலேயே படத்தை காப்பி அடித்து எடுத்தார்கள் தமிழ் சினிமா ஆண்ட மொழி ஆளும் மொழி. ரசிகர்கள் எல்லோரும் நல்லவர்கள், நம் படங்கள் அங்கு ஓடும் போது நாம் சந்தோசப்படுகிறோம் அல்லவா அது போல் இப்போதும் சந்தோசப்படுவோம். இப்போது கதைகளில் பஞ்சம் இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும். இப்போது இயக்குநர் சங்கத்தில் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல கதைகள் வைத்துள்ள இயக்குநர்களை தேர்ந்தெடுத்து அக்கதைகளை தயாரிக்கவுள்ளோம்.எங்கள் சங்கத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தது ஆனால்  இந்த கோரோனா காலத்தில் பல உதவிகளை பெற்று தந்தது எங்கள் சங்கம் தான் என்று சொல்லிக்கொள்கிறேன். தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளை கேட்டு தயாரியுங்கள். இப்படத்தை மிக சிறப்பாக எடுத்துள்ளார்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  




தயாரிப்பாளர் நடிகர் ஜெயம் எஸ் கே கோபி பேசியதாவது… 
இன்றைய தமிழ் சினிமாவின் நிலைமை எல்லோருக்கும் தெரியும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு படைப்பை எடுத்ததற்கு எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நன்றி.  இளையராஜா ஒரு கருத்து தெரிவித்தபோது இளையராஜாவாவது மயிறாவது என்றார்கள் அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சினிமாவில் யாருமே மறுப்பு தெரிவிக்கவில்லை, ராஜன் அண்ணனை மேடையில் வைத்தே இதை சொல்கிறேன். சினிமாவில் யாரும் ஒன்றாக இல்லாததால் தான் இந்த நிலைமை இருக்கிறது. இப்படியே விட்டால் எல்லோரும் நாளை யாரை வேண்டுமானாலும் திட்டுவார்கள். பீஸ்ட் ஓடவில்லை என்கிறார்கள் அதற்கு காரணம் யூடுயுபர்கள் தான் எல்லோரும் சேனல் வைத்துள்ளார்கள் அவர்கள் படம் முடிந்ததும்
எப்படி என  கேட்டு படத்தை தோற்கடிக்கிறார்கள் இதெல்லாம் மாற வேண்டும். இங்கு ஒரு அஜண்டா இருக்கிறது மத்திய அரசை திட்ட வேண்டும், ஒரு கட்சிக்கெதிராக பேச வேண்டும் என அதிலேயே படம் செய்கிறார்கள் இதையெல்லாம் விடுத்து கதைகளில் கவனம் செலுத்த வேண்டும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 


தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசியதாவது….
சின்ன படம் பெரிய படம் எதுவும் இல்லை பெரிய ஹீரோ படத்திற்கு ஆகும் செலவை தான் இப்படத்திற்கும் செய்து எடுத்துள்ளார்கள். மைனா படமெல்லாம் பல கோடி வருமானம் தந்தது. ஆனால் எங்கு தவறு உள்ளது என்றால் படத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியதில் தான் தவறு இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். அதற்கு சங்கங்கள் உதவி செய்ய வேண்டும். இப்படம் விஷுவல் பார்க்க அவ்வளவு பிடித்துள்ளது. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 

ரேகா பிலிம்ஸ் சக்ரவர்த்தி பேசியதாவது… 
மெய்யப்பட செய் படம் பார்க்க அனைத்துமே நன்றாக உள்ளது, ஒளிப்பதிவு இயக்கம் எல்லாம் அருமையாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப்படத்தை பற்றி உங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தால் அது படக்குழுவினருக்கு உறுதுணையாக இருக்கும் அதை செய்யுங்கள் நன்றி 


நாயகி மதுநிக்கா பேசியதாவது…
ரொம்ப சந்தோசமாக இருக்கிறது இது எனது முதல் படம். செல்வம் சார் அவர்கள் தான் இந்தப்படத்தை இங்கு கொண்டு வர கஷ்டப்பட்டார். வேலன் சார் எல்லாத்தையும் பொறுமையாக சொல்லி தருவார். அவருக்கு நன்றி. ஆதவ் பாலாஜி சார் ஹீரோ, மிக நன்றாக நடித்துள்ளார். பரணி சார் இசை மிக அருமையாக வந்துள்ளது. பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது. ஃபைட் மாஸ்டர்ஸ் ரொம்ப அருமையாக எடுத்துள்ளார்கள் நான் நிறைய அடி வாங்கியிருக்கிறேன். என்னை எல்லோரும் நன்றாக பார்த்து கொண்டார்கள் எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


இசையமைப்பாளர் பரணி பேசியதாவது… 
ஒரு மியூசிக் டைரக்டர் ஆசை என்னவாக இருக்கும் கம்பேக் தரவேண்டும், அவ்வளவு தான் இப்படத்தில் மிக உண்மையாக உழைத்துள்ளோம்  ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகர் ராஜ்கபூர் பேசியதாவது….
இந்தப்படத்த மிக அருமையாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் பரணி பாடலில் அசத்தியுள்ளார் இப்போதெல்லாம் இப்படி பாடல் கேட்பது அரிதாகிவிட்டது. இந்தப்படம் நடிக்கும் போது மாயாண்டி குடும்பத்தார் படம் ஞாபகம் வந்தது. இயக்குநர் ஒரு நாளில் ஒரு சீன் தான் எடுப்பார். ரசிச்சு எடுப்பார். கேஜிஎஃப் ஓடுச்சு, ஆர் ஆர் ஆர் ஓடுச்சு என்கிறார்கள் ஆனால் அது ஓடி என்ன பயன். அதை நாலு வருடம் எடுத்தார்கள் அதெல்லாம் லாபமே தராது. மைனா 2 கோடியில் எடுத்து பல கோடி லாபம் பார்த்தது அது தான் படம். ஓடுது ஓடுது என சொல்லும்  படத்தில் கதை கேளுங்கள் இருக்காது. ஜெய்பீம் எல்லாம் சின்ன பட்ஜெட்டில் எடுத்து உலகத்தையே மிரட்டியது அது மாதிரி இந்தப்படமும் வெற்றி பெறும். வாழ்த்துக்கள். 


நாயகன் ஆதவ் பாலாஜி கூறியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி.  நடன இயக்குனர், இசையமைப்பாளர், படதொகுப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் நன்றி. இது எனது முதல் படம், இந்த படம் புது ஹீரோ என்பதால் பலர் குறை சொன்னார்கள். என்னால் இந்த படம் தோற்க கூடாது என்று நினைத்தேன். இந்த படம் ஜெயித்தால், இன்னும் பல புதுமுகத்திற்கு வாய்ப்பு கிடைக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி 


இயக்குனர் வேலன் கூறியாதாவது..,
இந்த கதை எப்படி ஜெயிக்குமா என்ற சந்தேகம் வந்த போது, தயாரிப்பாளர் என்னை முழுதாய் நம்பினார். இது என்னை விட இயக்குநருக்கு முக்கியமான படம்  இந்த படம் ஹிட் கொடுக்கும் என்று நம்பினார். இசையமைப்பாளர் பரணி சார் வேகமாக பணியாற்றினார். இசையமைப்பாளர் பரணி அவர்களுடைய பார்வை ஒன்றே போதுமே, படம் பார்த்த பின்னர் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற நினைத்தேன். அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் வேல் அவர்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளார். அவரது திரைப்பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும். நான் கேட்பதை அப்படியே கொடுத்தார் ஆக்‌ஷன் இயக்குனர். நடன இயக்குனரும் எனக்காக பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர்.  நடிகர், நடிகையர் நன்றாக நடித்துள்ளனர். ராஜ்கபூர் சிறப்பாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கபட்டது அல்ல. எல்லோருக்கும் நன்றி


தயாரிப்பாளர்  கே ராஜன் பேசியதாவது…

இயக்குனர் ராஜ்கபூர் தயாரிப்பாளர் நலனுக்காக படம் எடுத்தவர். ஆர் வி உதயகுமார் நல்ல படங்களாக எடுத்தவர்.  இப்படத்தில் இசை மற்றும் பாடல்வரிகள் அற்புதமாக இருந்தது. அதிக சம்பளம் வாங்கி கெடுப்பவர்கள், அதிகம் செலவு செய்பவர்கள் தான் கீழே போக வேண்டும். தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும், தமிழ் படங்கள் ஜெயிக்க வேண்டும். தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகையர்கள் ஜெயிக்க வேண்டும். இப்படத்தில் ஹீரோயின் அழகாக இருக்கிறார் இப்பொதெல்லாம் நாயகியகள் ஆடியோ விழாவிற்கு வருவதில்லை.   நயன்தாரா ஆடியோ லாஞ்ச் வருவதில்லை. அவர்கள் வந்து  படம் ஓடாவிட்டால் அவர்களுக்கு கெட்ட பெயராம்.. அதற்காகவா  ஆறு கோடி வாங்குகிறார்.  நடிகர், நடிகையர்களை தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அவர்கள் தான் படத்தை ஓடவைக்க வேண்டும். கதாநாயகர்களுக்கு செலவு செய்வதற்கு பதில், கதைக்கு செலவழிக்க வேண்டும். தயாரிப்பாளருக்காக படம் பண்ண வேண்டும். பிரபாஸ், ராம்சரண். போயபட்டி ஶ்ரீனு பட போன்ற தெலுங்கு பிரபலங்கள் தோல்வியில் பங்குகொள்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி இல்லை. நடிகர்கள் 100 கோடி வாங்கினால், எப்படி படம் எடுப்பது. எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் குறைவான சம்பளத்திற்கு நடித்தனர். நடிகர்கள் போனிகபூருக்கும், தெலுங்கு தயாரிப்பாளருக்கும் படம் கொடுக்கின்றனர். கஷ்டப்படும் தமிழ் தயாரிப்பாளர்களை கண்டுகொள்வதில்லை. இந்த படத்தின் பாடல்கள் அருமையாக உள்ளது. இம்மாதிரி சின்ன படங்கள் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி


இயக்குநர் பேரரசு பேசியதாவது…
ராஜன் சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும் இந்த வயதிலும் சளைக்காமல் வந்து அனைவரையும் பாராட்டுவது பெரிய விசயம் நலிந்த தயாரிப்பாளர்களின் வலியால் தான் இவ்வாறு பேசுகிறார் அது எனக்கு தெரியும். இப்படத்தில் பரணி மிக அருமையாக இசையமைத்துள்ளார். மெய்ப்பட செய் தயாரிப்பாளருக்கு முதல் படம் இப்படம் வெற்றி பெற்று அவருக்கு லாபம் தர வேண்டும். படத்தில் ஒரு முக்கியமான விசயத்தை சொல்ல வந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. இயக்குநர் வேலன் வெற்றிவேலனாக வர வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 



இப்படத்தில் பி.ஆர்.தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், ஞானபிரகாசம், சிவா, அட்டு முத்து, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ், பயில்வான் ரங்கநாதன், ராகுல் தாத்தா, பெஞ்சமின், அனீஸ், எமில் கணபதி, ராகவமூர்த்தி, திண்டுக்கல் தனம், காஞ்சனா, தீபா, யமுனா உள்பட பலர் நடித்துள்ளனர்.


‘பார்வை ஒன்றே போதும்’ புகழ் பரணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். அவரது அற்புத இசையில் உமாதேவி, பரணி, வேலன் ஆகியோரின் வரிகளில் 4 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. அனைவரையும் பிரமிக்க செய்யும் வகையில் மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். ‘மிருதன்’ பட புகழ் கே.ஜே.வெங்கட்ரமணன் படத்தொகுப்பு செய்துள்ளார். அனைத்து பாடல்களையும் ரசிக்கும் விதத்தில் நடனம் அமைத்துள்ளார் தீனா. படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!!

*விவசாயத்தின் பெருமையை, தமிழனின் பண்பாடான உறவுகளின் ஆழத்தையும் அர்த்தத்தையும் பேசும் அருமையான படம் “பூர்வீகம்” !! *தமிழனின் வர...