இயக்குநர் பேரரசு 'கலகல' பேச்சு
அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் 'டேக் டைவர்ஷன்'
புதிய முயற்சிகளுக்கு தமிழ்த் திரை உலகில் எப்போதும் ஆதரவு உண்டு !
இயக்குநர் பேரரசு அதிரடி பேச்சு.
“புதிய முயற்சிகளுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் ஆதரவு உண்டு” என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு:
ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார்.
'கார்கில்' படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார்.விரைவில் வெளியாகவிருக்கும் 'டேக் டைவர்ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர் பேரரசு, இயக்குநர் 'எத்தன்' சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் பேரரசு பேசுகையில்,
'' இப்படத்தின் கதாநாயகன் சிவக்குமார், தமிழ் சினிமாவின் 'என்றும் மார்க்கண்டேயன்' ஆன சிவகுமாரைப் போல் இவரும் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். நாயகன் சிவக்குமார் பேசும்போது, 'என்னுடைய தாயார் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார்' எனக் குறிப்பிட்டார். இந்த உலகத்தில் எதையும் எதிர்பார்க்காத ஒரு ஜீவன் என்றால் அது தாய் தான். அவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், 'தன் பிள்ளை நன்றாக பெயரெடுக்க வேண்டும். தன் பிள்ளை வெற்றி பெற வேண்டும். நன்றாகச் சம்பாதிக்க வேண்டும்' என்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் மகனிடமிருந்து ஒன்றையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள்தான் தாய்.
இப்படத்தின் நாயகன் சிவகுமார் மேடையில் பேசும்போது தன்னுடைய குருவிற்கு நன்றிகள் தெரிவித்த பிறகுதான் தாய்க்கு நன்றி தெரிவித்தார். இப்போதே அவர் கலைஞராகிவிட்டார். ஒரு கலைஞனுக்கு முதலில் குரு தான் அனைத்தும். அதன்பிறகுதான் தாய் உள்ளிட்ட பலர்.
அண்மைக்காலமாக தமிழைக் காப்பாற்ற வேண்டும். இந்தி எதிர்ப்பு.. இந்தி திணிப்பு ...என குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் தமிழ் அழியாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறேன். முன்பெல்லாம் விழாக்களில் கலந்து கொள்ளும் கதாநாயகிகள், ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை பேசிவிட்டு அமர்ந்து விடுவார்கள். அண்மைக்காலமாக நான் கலந்து கொள்ளும் விழாக்களில் கதாநாயகிகள் தமிழில் பேசுகிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகி பெயர் பாடினி. அருமையான இலக்கியத் தமிழ்ப் பெயர். அவர்கள் தமிழில் பேசுவதே அழகு. அழகான பெண் தமிழில் பேசினால் அதைவிட அழகு. அதனால் இனிமேல் அழகான பெண்கள் தமிழில் பேசி, தமிழைக் காப்பாற்ற வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரை எல்லாருக்கும் டேக் டைவர்ஷன் தான். ஒரு கிலோ மீட்டருக்கு செல்லவேண்டிய தூரத்திற்கு, ஆறு கிலோமீட்டர் வரை டேக் டைவர்ஷன் எடுத்துச் செல்வோம். தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள்.. சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 'டேக் டைவர்ஷன்' என்பது இயல்பான. பழகிப்போன, ஒரு பொருத்தமான தலைப்பு.
இன்றைய தேதியில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால், அதில் பெரிய ஹீரோ நடித்திருக்க வேண்டும் அல்லது கதை ஹீரோவாக இருக்க வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருகிறார்கள். அந்தவகையில் டேக் டைவர்ஷனில் கதை தான் ஹீரோ.
இயக்குநர் ஷிவானி செந்தில் ஏற்கெனவே 'கார்கில்' என்ற ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படத்தை இயக்கியவர். அந்தப் படத்திலும் ஒரு புது முயற்சியை மேற்கொண்டவர். தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சிக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படத்திற்கு ஆதரவு கிடைத்தது போல், அவரது 'இரவின் நிழல்' என்ற புதிய முயற்சிக்கும் ஆதரவு கிடைக்கும். அந்தப் படத்தை பார்த்து விட்டேன். பார்த்திபனின் புதிய முயற்சிக்குப் பாராட்டுகள். அவர் ஒரு தமிழ் இயக்குநர் என்பதால் நானும் பெருமிதம் அடைகிறேன்.
டேக் டைவர்ஷன் பலருக்கு நல்ல வழியை காட்டி விடும். இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிகராக வெற்றி பெறுவதற்காகத்தான் திரை உலகிற்கு வந்தார். ஆனால் அவர் டேக் டைவர்ஷன் எடுத்து இயக்குநராகி, பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். ஒரு கிராமவாசி திரை உலகில் நுழைந்து வெற்றிகரமான இயக்குநராக முடியும் என்பதை அவர் நிரூபித்தார். இதனால் நூற்றுக்கணக்கான கிராமத்து வாசிகள் இயக்குநர் கனவோடு தமிழ் திரையுலகில் படையெடுத்து வருகிறார்கள். அவர் வெற்றி அடைய வில்லை என்றால், இன்று பேரரசு உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் திரையுலகில் அறிமுகமாகி இருக்க மாட்டார்கள். அதனால் பல தருணங்களில் டேக் டைவர்ஷன் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஷிவானி செந்தில் இயக்கியிருக்கும் டேக் டைவர்ஷன் அவருக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, ஏற்றத்தை அளிக்க வேண்டும் .
திரையுலகைப் பொறுத்தவரை புதிய முயற்சிகள் தான் கவனத்தை கவர்ந்து வெற்றி பெற்று வரலாறாகும். என்னைப் பொறுத்தவரை பெரிய நடிகர்களை வைத்து வெற்றிப்படத்தை அளிக்கும் இயக்குநர்களை விட, புதுமுகங்களை வைத்து பெரிய வெற்றியை வழங்குபவர்கள் தான் சிறந்த இயக்குநர்கள். அதுபோன்றதொரு வெற்றியை இயக்குநர் ஷிவானி செந்தில் பெறுவார். நான் இன்னும் முழுமையான இயக்குநராக வெற்றி பெறவில்லை. நான் எப்போது புதுமுகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி பெறுகிறேனோ அப்போதுதான் முழுமையான இயக்குநராவேன். 'திருப்பாச்சி', 'சிவகாசி', 'திருப்பதி' இந்தப் படங்கள் எல்லாம் பெற்ற வெற்றி ஒரு மாய வெற்றிதான். இந்த மாதிரியான வெற்றி ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு நிறைவைத் தந்தாலும், புதுமுகங்களை வைத்து படம் இயக்கி அந்தப் படம் வெற்றி பெறும் போது தான் ஒட்டுமொத்த திரையுலகமும் ஆரோக்கியமாகப் பயணிக்கும். அந்தப் பயணத்தில் டேக் டைவர்ஷன் படமும் இடம் பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.
இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில்,
'' நேராகப் பயணிக்க வேண்டிய பயணத்தில் டேக் டைவர்ஷன் இருந்தால் ஒரு மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டியிருக்கும். முதலில் தயக்கம் இருந்தாலும், டென்ஷன் ஏற்பட்டாலும், பயணித்தால்... சென்றடைய வேண்டிய இலக்கு நல்லதாகவே இருக்கும். இந்தத் திரைப்படத்தில் உங்களுக்கு டேக் டைவர்ஷன் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் டென்ஷனைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பதை மையப்படுத்தி இருக்கிறேன். வாழ்க்கையே ஒரு டேக் டைவர்ஷன் தான். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டதைப் போல் டேக் டைவர்ஷனால் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் ஏராளம். இந்தப்படத்திலும் டென்ஷனை ஏற்றுக்கொண்டு டேக் டைவர்ஷனில் பயணித்தால் நமக்கும் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்பதைச் சுவராசியமாக சொல்லி இருக்கிறேன்.
ஒரே நாளில் நடைபெறும் கதை. அதிலும் பயணம் தொடர்பான கதை என்பதால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகளுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சினிமாவில் சாதிக்க ஆசைப்படுவேன். அதனை கடவுள் வெவ்வேறு நண்பர்களின் ரூபத்தில் நிறைவேற்றி வைப்பார்; வைத்திருக்கிறார். இந்தப்படத்தின் ட்ரெய்லரை நாயகன் சிவகுமார் மூலமாக கே ஜி எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களும் இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது எனப் பாராட்டினார். இது போன்ற பாராட்டுகள் என்னை உற்சாகமடைய வைத்திருக்கின்றன.
என்னைப்பொறுத்தவரை ஒரு கனவு நனவாக வேண்டும் என்றால், உழைப்பு மட்டும் போதாது. மக்களின் கைகளில்தான் இருக்கிறது. டேக் டைவர்ஷன் படைப்பை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். என்னுடைய கனவிற்கும் நிஜத்திற்கும் இடையில் இருப்பவர்கள் மக்கள். அதனால் அவர்களின் ஆதரவை வேண்டுகிறேன்.'' என்றார்.
இந்நிகழ்வில் படத்தின் நாயகன் சிவக்குமார், நடிகர் ராம்ஸ், நடிகை பாடினி குமார், ஒளிப்பதிவாளர் ஈஸ்வரன் தங்கவேல், படத்தொகுப்பாளர் விது விஷ்வா, இசை அமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் தயாரிப்பாளர் சுபா செந்தில் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.