Sunday, August 28, 2022

மூன்றாம் பாகம் நிச்சயம்” ; ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத் உறுதி*

*“கர்மாவை உணர்ந்த அந்த தருணம்” ; ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத் சிலிர்ப்பு*

*“மூன்றாம் பாகம் நிச்சயம்” ; ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத் உறுதி*

*அடுத்த படம் விஷ்ணு விஷாலுடனா..? ; ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத் விளக்கம்*

*நாயகனின் தந்தை என்ன சொல்வாரோ..? ; பயந்த ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத்* 
 
கடந்த 2019ல் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமல்ல, விமர்சிகளிடமும் கூட அருமையான படம் என பெயர் வாங்கிய படம் ‘ஜீவி’. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரை போல நேர்த்தியாக படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் V.J.கோபிநாத்.  

இந்தநிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜீவி 2’ என்கிற பெயரில் உருவாகி கடந்த ஆகஸ்ட்-19ல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.. முதல் பாகத்தில் இடம்பெற்ற நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா உள்ளிட்ட அனைவரும் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர் இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த ‘ஜீவி 2’ உருவாக்கம் குறித்து சில புதிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் V.J.கோபிநாத் 

“ஜீவி முதல் பாகம் வெளியான மறுநாளே நடிகர் விஷ்ணு விஷாலின் படத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டேன். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. வேறு ஒரு படம் கூட இயக்கி விட்டு வந்து விடுங்களேன் என அவர் கூறிய சமயத்தில், தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் கார்த்திக் தான், நீங்கள் ஏன் ‘ஜீவி 2’வை உருவாக்க கூடாது என இரண்டாம் பாகத்திற்கான விதையை போட்டார்.

இப்போது இரண்டாம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்ததாக விஷ்ணு விஷால் படத்தை தான் இயக்குவீர்களா? எனப் பலரும் கேட்கிறார்கள்.. இப்போதும் அவருடன்  தொடர்பில் தான் இருக்கிறேன். 

அதேசமயம் அவர் முடிக்க வேண்டிய படங்களும் தாமதமாகி, இப்போதுதான் அந்த படங்களின் படபிடிப்பில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.. அதனால்  அடுத்த படம் பற்றி எந்த யோசனையும் இல்லை.  

அதேசமயம் அடுத்தடுத்த படங்களுக்கான சில கதைகள் தயாராக இருக்கின்றன. அவற்றுக்கு பொருத்தமான நடிகர்களும் தயாரிப்பாளரும் கிடைக்கும்போது அதைத் துவங்கி விடுவேன். ஜீவி படம் வெளியானபோது, ‘ஜீவி 2’ உருவாகும் என கனவில் கூட நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. 

ஆனால் இந்த ‘ஜீவி 2’ படத்தின் பல காட்சிகளில் மூன்றாம் பாகத்திற்கான லீட் வைத்து தான் கதையை உருவாக்கி இருக்கிறேன்.  மூன்றாம் பாகத்திற்கான தேவையை சூழல்தான் தீர்மானிக்கும். .

ஜீவி படத்திற்காக நாயகன் வெற்றியை நான் ஒப்பந்தம் செய்தபோது அப்போதுதான் 'எட்டு தோட்டாக்கள்' என்கிற ஹிட் படத்தில் நடித்திருந்தார் வெற்றி. 

அதனால் அடுத்த படத்தை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டிய சூழலில் என்னை நம்பி அந்த படத்தை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டார். 

ஆனால் ஒரு ஹிட் படத்தில் நடித்து விட்டோமே என்று நினைக்காமல் எனக்கு இந்த படத்திற்கான ஆடிசன் வையுங்கள் என தானாகவே கேட்டு ஜீவி படத்திற்காக தயாரானார். 

ஏற்கனவே நடிகர் மைம் கோபியின் நடிப்பு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றிருந்த அவர், இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிக்குமான ரிகர்சலில் கலந்துகொண்டு ஜீவி படத்தில் மெருகேற்றப்பட்ட நடிப்பை வழங்கினார்.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் இது எதுவுமே அவருக்கு தேவைப்படவில்லை. காரணம் இந்த இரண்டு வருட இடைவெளியில் அவர் இன்னும் சில படங்களில் நடித்து முடித்து பிசியான நடிகராக மாறிவிட்டார். 

சொல்லப்போனால் ஜீவி 2 படத்தில் நடிக்க வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வேறு ஒரு படத்தில் நடித்துவிட்டு வந்தார்.. இந்த படத்தை முடித்ததும் அடுத்ததாக இன்னொரு படத்தில் நடிக்கக் கிளம்பி விட்டார்.. 

அந்த படங்களில் நடித்த அனுபவத்தால் ஒவ்வொரு காட்சியிலும் சிங்கிள் டேக்கில் ஓகே செய்தார் வெற்றி.. சில காட்சிகளில் இரண்டாம் முறையோ மூன்றாம் முறையோ டேக் போயிருக்கும் என்றால் அது அவராகவே, நான் இன்னும் கொஞ்சம் பெட்டராக பண்ணுகிறேனே எனக்கூறி அந்த காட்சியை இன்னும் இம்ப்ரூவ் செய்து நடிப்பதற்காக மட்டுமே தான் இருந்திருக்கும். 

இல்லையென்றால் 22 நாட்களில் இந்த படத்தை அவ்வளவு விரைவாக முடித்திருக்க முடியாது. குறிப்பாக ஒவ்வொரு ஷாட்டிலும் கன்டினியுட்டி விஷயத்தில் அவர் அவ்வளவு கவனம் செலுத்தியதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது..

ஜீவி படத்திற்கு இயக்குநராக நான் ஒப்பந்தம் ஆனபோது ஒரு தயாரிப்பாளராக எனக்கு அட்வான்ஸ் கொடுத்தவர் நடிகர் வெற்றி தான். 

அதேபோல ஜீவி 2 படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் என்றாலும் நடிகர் வெற்றிக்கு இந்த படத்தில் நடிப்பதற்கான அட்வான்ஸ் தொகையை என் கைகளாலேயே வழங்கும் சூழல் யதேச்சையாக அமைந்தது. 

ஜீவி படத்தில் கர்மா குறித்து சொல்லப்பட்டிருந்தது போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்பதை நிஜத்திலும் உணர முடிந்தது.

கதாநாயகி அஸ்வினிக்கு முதல் பாகத்தில் வேலை குறைவு தான்.. சொல்லப்போனால் அவருக்கு ஒரு பாடல் காட்சி கூட இல்லை என்கிற குறை இருந்தது. ஆனால் இந்த ஜீவி 2 முதல் காட்சியே அவரை வைத்து தான் துவங்குகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரில், இரண்டாம் பாகத்தில் இன்னும் இம்ப்ரூவ் செய்து நடித்துள்ளார். குறிப்பாக அவருக்கும் வெற்றிக்குமான மிக நெருக்கமான காட்சிகளில் கூட எந்த சங்கடத்தையும் வெளிக்காட்டாமல் வெகு இயல்பாக நடித்தார். 

அவரிடம் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி சொல்லும்போதே பார்வையற்ற பெண் என்றாலும் அவளுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, அவளுக்குள்ளும் ஆசாபாசங்கள், காதல் உணர்வுகள் இருக்கும் என்பதையும் அதை அவள் வெளிப்படுத்தித் தான் ஆகவேண்டும் என்பதையும் விளக்கமாக கூறியிருந்தேன்.. அவரும் அதை உணர்ந்து நடித்திருந்தார். 

அதேசமயம் நாயகன் வெற்றியின் தந்தையான தயாரிப்பாளர் வெள்ளப்பாண்டி, இந்த காட்சிகளை பார்த்துவிட்டு என்ன சொல்வாரோ என்கிற பயம் மட்டும் இருந்தது.. ஆனால் இந்த பாடலை பார்த்துவிட்டு மிகவும் அழகாக, கவித்துவமாக எடுத்திருப்பதாக அவர் பாராட்டியபோது ரொம்பவே ரிலாக்ஸாக உணர்ந்தேன்.

படத்தில் நடித்த மைம் கோபி, ரோகிணி என அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் எனது வேலையை இன்னும் எளிதாக்கி விட்டார்கள். அதிலும் ஒவ்வொரு காட்சி இடைவெளியின் போதும் ஒரு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் ரோகிணி மேடம், ஷாட் ரெடி என்றவுடன் அந்த காட்சிக்குள் அப்படியே நுழைந்து விதவிதமான பாவணைகளுடன்  அந்த கதாபாத்திரமாகவே மாறுவார் பாருங்கள்.. அது ஒரு மேஜிக் என்று சொல்லலாம்.

சுரேஷ் காமாட்சி சார் இந்த படத்தை தயாரிக்கிறார் என முடிவானதும், பட்ஜெட்டைப் பற்றி கவலைப்படாதீர்கள்.. படத்திற்கு இன்னும் பிரபல தொழில்நுட்பக் கலைஞர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் நான் அவரிடம் முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கலைஞர்கள் மட்டுமே போதும் என்று கூறி விட்டேன். அதற்கு அவரும் பெருந்தன்மையாக சம்மதித்து விட்டார்..

மொத்த படம் முடிந்ததும் சுரேஷ் காமாட்சி சார், தனது நண்பர்கள் மற்றும் சில விமர்சகர்கள் ஆகியோருடன் சேர்ந்து படத்தை பார்த்தார்.

 பொதுவாக இந்த காட்சிகளில் எப்படி இருந்திருக்கலாம், அதை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது போன்று கருத்துக்கள் சொல்வது தான் வழக்கம். ஆனால் இந்த படத்தை பார்த்துவிட்டு எல்லோருமே எந்தவித கரெக்சனும் சொல்லாமல் பாராட்டினார்கள்.

இந்த படம் ஓடிடியில் தான் வெளியாகிறது என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் வந்ததும், நேரடியாக தியேட்டரில் வெளியாகாதே என்கிற வருத்தம் ஏற்பட்டது உண்மைதான். ஆனாலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் அளித்து தியேட்டரில் வெளியிட முடியாததன் காரணத்தை விளக்கினார். தியேட்டர்களில் இந்த படம் வெளியானால் ஒரு இயக்குநராக நான் ஜெயித்து விடுவேன்.  ஆனால் பெரிய பெரிய படங்கள் வெளியாகும் இந்த சூழலில் ஒரு தயாரிப்பாளராக சுரேஷ் காமாட்சி சாருக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருந்தது. அதனால் ரிலீஸ் விஷயத்தில் மனநிறையுடன் சமரசம் செய்து கொண்டேன். அந்தவகையில் ஆஹாவில் வெளியாகியுள்ள 
ஜீவி-2 படம் இன்று அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 

 இந்த இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்த ரசிகர்களும் சரி, தயாரிப்பாளரும் சரி இருவருமே சந்தோஷப்படும் விதமாக அமைந்துவிட்டது.” என்கிறார் இயக்குநர் V.J.கோபிநாத்

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...