*சூர்யா வழங்கும் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் ரசிகர்கள் முன்பு நடந்தது. விழாவிற்கு வருகைப் புரிந்த அப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது :*
*#விருமன் பட விழாவில்..*
*நடிகர் சூர்யா பேசும்போது,*
உங்களை 5 மணியிலிருந்து கட்டி வைத்திருந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முக்கியமானவர்கள் பேச வேண்டியிருந்ததால் உங்களை அமைதியாக இருக்க சொன்னேன். ஆனால், இப்பொழுது உங்களுடைய முழு அன்பையும் நான் எடுத்துக் கொள்கிறேன். இது இன்று நேற்று உறவல்ல; 25 கால உறவுகள்! அதில் போட்ட ஒரு சில பேரை நான் நான் கூற முடியும். மற்றவர்கள் தவறாக நினைக்கக் கூடாது. ஜோதிமுத்து, மனோஜ் போன்ற அனைவரும் 25 ஆண்டுகாலமாக இந்த உறவை கட்டிக் காப்பாற்றி இருப்பதை வார்த்தைகள் கூறி விட முடியாது. இந்த அன்பிற்கும் உறவிற்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
ராஜாவுடைய சொந்த ஊர் இதுதான். பள்ளிக்காலத்தில் கோயம்புத்தூருக்கு விடுமுறையில் செல்வது போல இங்கும் வந்திருக்கிறேன். அப்போது நான் நடிகன் கிடையாது. ஆனால், சித்தி பையன், பெரியம்மா பையன், மாமா பையன் என்று ராஜாவுக்குத் கொடுக்கும் அதே உறவை, எனக்கும் கொடுத்தார்கள். அதை நான் ஆச்சரியம் உடன் பார்த்திருக்கிறேன். எதையும் எதிர்பாராமல் அவர்கள் கொடுக்கும் அன்பு, சாப்பாடு, பல நாட்கள் இங்கு சுற்றியது என்னால் மறக்கவே முடியாது. அவையும் அதற்கு இணையான அனுபவம் இங்கும் இருக்கிறது.
தென் தமிழ்நாட்டின் வாசல் மதுரை. மதுரை என்றாலே அழகர், வாடிவாசல், மீனாட்சி அம்மன் என்று கூறுவது போல, அச்சு அசலாக மக்களின் அன்பு கிடைப்பது எங்களுக்கு ஒரு வரம். அந்த வரத்தை அளித்த அனைவருக்கும் நன்றி.
மதுரையில் பல கதைகள் இருக்கிறது. கற்பனை கதையல்ல, நிஜத்தில் நடந்த கதையை சுவாரசியமாக கூறுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்த இயக்குனர் இமயம் ஆக முடியும் என்று பாரதிராஜா அங்கிள் எடுத்துக் காட்டியிருக்கிறார். அவர் நமக்கு மிகப்பெரிய அடையாளம். அது மட்டுமே அவருடைய சாதனை அல்ல. அவரைப் போன்று கிராமத்திலிருந்து வந்த ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையாக இருந்திருக்கிறார். அவர்களுக்கு கை கொடுத்து உயர்த்தியிருக்கிறார். இன்னும் பலருக்கு உதாரணமாக இருக்கிறார். அவர் வீட்டில் விளையாடுவதற்கும், அவர் பையன் மனோஜ் உடன் விளையாடுவதற்கும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் அழைத்ததற்காக இங்கு வந்திருக்கிறார். அதை நான் மிகவும் உயர்வாக பார்க்கிறேன். எந்த விஷயமாக இருந்தாலும் நான் இருக்கிறேன் என்று கூறுவார். அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் வேண்டும்.
ஆயுத எழுத்து படத்தில் நான் உங்களுக்கு நடிக்க சொல்லித் தரவில்லை. என்னை நிறைய புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள். ஸ்கிரீன் டெஸ்ட் செய்திருக்கிறீர்கள். ஆனாலும் என்னை நடிக்க வைக்கவில்லை. உங்களுடைய வெளிச்சத்திலிருந்து தான் நான் வந்திருக்கிறேன். நீங்கள் ஒரு ஆலமரம். உங்களுடைய ஆசீர்வாதம் தான் உங்களை வழிநடத்துகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளத்தைக் கொடுத்து விடுவார்கள். ஆனால், நான் எந்த வட்டத்திற்குள்ளும் மாட்ட மாட்டேன் என்று தன்னுடைய உயரம், புகழ், பெயரை மீண்டும் மீண்டும் மறுவரையறைப் படுத்திக் கொண்டே இருப்பவர் ஷங்கர் சார் தான். அப்போதே பான் இந்தியா படத்தை கொண்டு வந்தவர் இவர். 30 வருட காலமாக தொடர்ந்து சாதனைப் புரிவது சாதாரணமானது அல்ல. இப்பொழுது இந்தியன் 2 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
அதிதி நீ ஜொலிக்கிறாய். நம்மை சுற்றியுள்ள உலகத்தை நாம் தான் உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. நீங்கள் உங்களைச் சுற்றி அழகான உலகத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். 2D அலுவலகத்திற்கு நீங்கள் வந்த நாள் முதல் அனைவருக்குமே உங்களைப் பிடித்து விட்டது. அனைவரையும் பெயர் சொல்லி அழைத்தீர்கள். உங்களை தண்ணீர் குடிக்கிறீர்களா? சாப்பிட்டீங்களா? என்று அனைவரையும் கேட்க வைத்தீர்கள். நீங்கள் ஒரு ஆற்றலின் மூட்டை. உங்கள் வரவு நல்வரவாகுக! உங்களுக்கான மரியாதையை இந்த சினிமா உலகம் கொடுக்கும். எங்கள் குடும்பம் சார்பாக உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறோம். அப்பா அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும். இந்த துறையில் உங்களுக்கு முக்கியமான இடம் உள்ளது.
காவல் கோட்டம், வேல்பாரி நம் தமிழர்களுடைய முக்கியமான அடையாளம். எல்லோரிடமும் எடுத்துச் சென்ற மிகச்சிறந்த படைப்பு. நண்பன் என்று கூறுவதா அல்லது ஒரு என்று கூறுவதா தெரியவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு வெங்கடேசன் அவர்கள் இங்கு வந்தது எங்களுக்கு கூடுதல் மதிப்பு. மதுரை மக்களின் குரல், தமிழ் மக்களின் குரல் எங்கு, எப்போது, எப்படி பதிவு செய்ய வேண்டுமோ! அதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவருடன் சுவாரவசியமான பயணத்தை ஆரம்பித்துவிட்டோம். அது முக்கியமான பதிவாக இருக்கும். அது என்னவென்று இன்னொரு மேடையில் கூடிய விரைவில் கூறுகிறேன்.
பாரதிராஜா அங்கிள்,
கடலோர கவிதைகள், வேதம் புதிது, முதல் மரியாதை போன்ற பல படங்களில் பல கேள்விகள் கேட்டு இருக்கிறார். நம் முன்னாடி இருக்கும் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள், அதை நாம் சந்திக்கும் விதங்கள் இவற்றை நாம் அனுபவத்தில் வாழ்ந்து இக்கட்டான சூழ்நிலையில் கற்றுக் கொள்ள முடியாது. ஆனால், ஒரு நல்ல படம் பார்க்கும்போது இப்படித்தான் வாழவேண்டும், உறவுகளே இப்படி தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவருடைய ஒவ்வொரு படங்களிலும் பதிவு செய்திருக்கிறார். தேவன் என்பது என்ன பட்டமா? என்று அனைவரையும் உலுக்கிப் போட்ட ஒரு கேள்வி, அதேபோல இப்படத்தில் இறுதி காட்சியில் வசனங்கள் இருக்கிறது. முத்தையாவின் வசனங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் இந்த படத்தை எடுத்தோம். அந்த வசனங்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும். உங்களுக்கு ஒழுக்கம் எங்கிருந்து வந்ததென்று இப்போதுதான் தெரிகிறது. நீங்கள் டீ காப்பி கூட குடிக்க மாட்டீர்கள் என்று அலுவலகத்தில் கூறினார்கள். அதற்கான காரணத்தை இப்போது உங்கள் அப்பா அம்மா கூறிய பிறகுதான் அதை ஏன் பின்பற்றுகிறீர்கள் என்று தெரிந்தது. அதைக் கேட்ட பிறகு உங்கள் மீதான மதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.
பாலா மற்றும் அமீரின் பெயரைக் கூறாமல் இந்த மேடையை விட்டு இறங்க முடியாது. எனக்கும் கார்த்திக்கும் அவர்களால் தான் அடையாளம் கிடைத்திருக்கிறது.
இந்த ஊரை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார் செல்வா. இயக்குனருடன் சேர்ந்து கதை கூறும் முக்கியமான பொறுப்பு அவருக்கு இருந்திருக்கிறது. ஜாக்கி ஒரு நாடோடி. ஒரு படம் முடிந்ததும் பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விடுவார். பைக் பயணத்தில் அலாதி பிரியம் கொண்டவர். மிகச் சிறந்த பாடகரும் கூட. எங்கள் இருவரிடமும் அவருடைய பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இப்போது வாடிவாசல்- இல் பயணிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். வையாபுரி அண்ணனுக்கு நன்றி. பிதாமகன் படத்தில் பாதி நடிப்பை சொல்லிக் கொடுத்தது சிங்கம்புலி அவர்கள்தான். பேரழகன் படத்திலும் சின்னாவாக நடிக்க முடிந்ததற்கு சிங்கம்புலி அண்ணா தான் காரணம். அவரைப் பார்த்துதான் சின்னாவாக நடிக்க கற்றுக் கொண்டேன்.
இளவரசு அண்ணனுடன் என் ஜி கே வில் பயணித்தது மறக்க முடியாதது. கெட்டப்பில் மீசை தாடி மாற்றாமல் அப்படியே தான் இருப்பார். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விடுவார்.
எங்கள் 2D நிறுவனம் உங்களை எப்படி நடத்தியது என்று நீங்கள் வேறு ஒருவருக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜை நான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் திருப்தியான, நெகிழ்வான தருணமாக இருந்தது. அதற்காக வடிவுக்கரசி அம்மாவிற்கு நன்றி.
அனல் அரசின் சண்டைக் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. சுந்தர் அருமையாக நடித்திருக்கிறார். டப்பிங்-லும் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றக் கூடிய வல்லமை சூரிக்கு இருக்கிறது. தனக்குள் இருக்கும் திறமை முழுவதையும் கொடுத்துவிடுவார். இப்படத்திலும் அதை பார்க்க முடிந்தது. வெற்றிமாறனின் இயக்கத்தில் அவர் நடிக்கும் விடுதலை படத்தை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். கருணாஸ் மாமாவிற்கு நன்றி.
இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் கொரோனா காலக்கட்டத்தில் நடந்தது. படப்பிடிப்பிற்கு எந்த இடையூறும் கொடுக்காமல் அந்த ஊர் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மதுரை மக்களுக்கும் தேனி மக்களுக்கும் மிக்க நன்றி.
சரியாக நடிக்க தெரியாத போது, சென்னோரீட்டா பாடலில் என்னை ஓட விட்டவர் யுவன். சகோதரன் மாதிரி தான் நாங்கள் பழகி வருகிறோம். பருத்திவீரன் படத்தில் கதையே இசையும் பிரிக்க முடியாத அளவிற்கு கதையோடு இணைந்து இசையமைத்திருந்தார் யுவன். அவருடைய பயணம் இன்னும் தொடர வேண்டும்.
ரசிகர்களாகிய உங்களால் கமல் சார் எனக்கு கொடுத்த பரிசு இதோ இந்த ரோலக்ஸ் வாட்ச்.
கார்த்திக்கு முன்பே நான் நடிக்க வந்து இருந்தாலும், என்னை விட அதிகமாக சினிமாவைப் பற்றி பேசுவதும், செயல்படுவதும் கார்த்தி தான் என்று வெளிப்படையாக எந்த மேடையிலும் கூறுவேன். சினிமாவிற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்னை விட அதிகம் சிந்திப்பது கார்த்தி தான். என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி. யுவன் கார்த்தி இருவருமே என்னுடைய தம்பிகள். அவர்கள் இருவரும் சினிமாவிற்கு செய்த பதிவை யாராலும் மறக்க முடியாது. என்னை விட பல மடங்கு அவர்களை கொண்டாடுவார்கள். பல விருதுகளை பெறுவார்கள்.
என் மகளுடைய படிப்பிற்காக 40 நாட்கள் நான் நியூயார்க்கில் இருந்தேன். அப்போது தேசிய விருது கிடைத்ததை நான் தெரித்துக் கொள்ள மூன்று மணி நேரம் ஆனது. அதற்குள்ளேயே நீங்கள் கொண்டாடினீர்கள். அதை உங்களுடைய விருதாக பார்த்தீர்கள். கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடக்கூடிய ஊர் மதுரை. இந்த ஊரில் உங்கள் முன்பு விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கொண்டாடுவதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். எப்போதும் உங்களுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும்.
டெல்லியும் ரோலெக்ஸும் என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.