இளையராஜாவின் 1417வது படம்:
ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன் - மனிஷா யாதவ் நடிக்கும்
"நினைவெல்லாம் நீயடா" படப்பிடிப்பு நிறைவு!!
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் படம் "நினைவெல்லாம் நீயடா". இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வரும் இதில் பிரஜன் நாயகனாக நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகம் ஆகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோகித்-யுவலட்சுமி ஜோடி அறிமுகமாகிறது.
இவர்களுடன் முக்கிய இடத்தில் ரெட்டின் கிங்ஸ்லி காமெடியில் கலக்கியிருக்கிறார். மற்றும் மனோபாலா முத்துராமன் மதுமிதா ரஞ்சன் குமார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தமிழ்செல்வி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். மனநல மருத்துவராக முக்கிய வேடத்தில் பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் முத்திரை பதித்திருக்கிறார்.
ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவை கையாள ஆசிஸ் ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரதீப் தினேஷ் மாஸ்டர் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கலையை முனிகிருஷ்ணா கவனிக்க பாடல்களை பழனி பாரதி, சினேகன் எழுதியிருக்கிறார்கள். "இதயமே... இதயமே" என்று தொடங்கும் ஒரு பாடலை இளையராஜா எழுதி கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார்.
மாஸ்டர்கள் தினேஷ், தினா ஆகியோர் நடன காட்சிகளை ரசனையாக வடிவமைத்திருக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகம்: இளங்கோ.
பள்ளிப் பருவத்தில் தோன்றும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தை சென்னை கொடைக்கானல் திருப்போரூர் திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் 41 நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் ஆதிராஜன். இதற்காக தயாரிப்பாளர் ராயல் பாபு இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இறுதி நாள் படப்பிடிப்பு சென்னையை அடுத்த ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்றது. கொட்டும் மழையில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி மற்றும் மாணவியர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. மாலையில் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
தற்போது படத்தின் டப்பிங் நடந்து வருகிறது. படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.