Saturday, October 29, 2022

100 ஏக்கர் பொட்டல் நிலம் கொடுங்க! - பிக் பாஸ் குழுவுக்கு ஐடியா சொல்லும் மன்சூர் அலிகான்

100 ஏக்கர் பொட்டல் நிலம் கொடுங்க! - பிக் பாஸ் குழுவுக்கு ஐடியா சொல்லும் மன்சூர் அலிகான்!

அதிகம் பேர் பார்க்க கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற பெருமையோடு ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது 6 வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சரியான போட்டியாளர்கள் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி வைராகி வருவதால் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடம், காமெடி என்று அனைத்திலும் தன்னை நிரூபித்த மன்சூர் அலிகான், நடிகர் மட்டும் இன்றி இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக சினிமாவில் வலம் வருவதோடு, சமூக பிரச்சனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

இப்பபடி பல தளங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மன்சூர் அலிகான், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தால் அவருடைய அதிரடியான செயல்கள் அந்நிகழ்ச்சிக்கு பெரிய பலம் சேர்க்கும் என்பதால், தொடர்ந்து அவரை பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு குழு அணுகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனால், பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகர் மன்சூர் அலிகான் வருவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்க, இந்த சர்ச்சைக்கு மன்சூர் அலிகானே தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க மாட்டேன், என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆனால், திரும்ப திரும்ப நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் சிறப்பாக நடத்தி பேரும், புகழும் பெற்றிருக்கிறார், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. 

ஆனால், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன், என்பதை தெளிவாக சொல்லிவிட்டேன். அவர்கள் என்னை அணுகிய போது கூட அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டேன். ஆனால், நான் பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது, இதனால் மக்களும் என்னை தொடர்புகொண்டு அதுபற்றி கேட்டு வருகிறார்கள்.

நான் தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறேன். கதையின் நாயகனாக சில படங்களிலும், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன். எனவே 6 மாதத்திற்கு என்னிடம் தேதிகள் இல்லை. அதனால், என்னால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது, என்று சொல்லிவிட்டேன். அதே சமயம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொண்டால் நான் தான் பிக் பாஸாக இருப்பேன், என்பதையும் தெரிவித்துவிட்டேன்.

நான் பிக் பாஸாக இருந்து நிகழ்ச்சியை நடத்தினால், 100 ஏக்கர் பொட்டல் நிலம் அதாவது வானத்தை பார்த்த நிலத்தை என்னிடம் கொடுங்கள். அதில் கோவணம் கட்டிக்கொண்டு விவசாயம் செய்ய வேண்டும். அந்த பொட்டல் நிலத்தில் உழவு செய்து விளைச்சலை கொண்டு வர வேண்டும். ஏர் பூட்டி, மண்ணை தன்மைப்படுத்தி, பாறைகளை அகற்றி விவசாயம் செய்ய வேண்டும், செயற்கை உரம் இல்லாமல், இயற்கை விவசாயம் செய்து, அதில் நான்கு மாதத்தில் என்னவெல்லாம் விளைவிக்காலாம், என்ற ரீதியில் போட்டியை நடத்தினால் , இப்போது நடத்தும் போட்டியை விட சுவாரஸ்யமாக இருப்பதோடு, உலகத்தின் முதன்மை நிகழ்ச்சியாகவும் இருக்கும், என்பதை நான் பிக் பாஸ் தயாரிப்பு குழுவிடம் தெரிவித்து விட்டேன்.

மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கிறேன் நான் பிக் பாஸ் போட்டியில் எந்த நேரத்தில் கலந்துக்கொள்ள மாட்டேன். எனவே, நான் பிக் பாஸ் போட்டியில் கலந்துகொள்வதாக வரும் செய்திகள் உண்மையில்லை.

இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்!

PRO_கோவிந்தராஜ் 
@GovindarajPro

FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal*

*FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal* FICCI FLO Chennai, the women’s wing of the Feder...