*பிரபுதேவாவின் ‘முசாசி' அப்டேட்*
*கோடை விடுமுறையில் வெளியாகும் பிரபுதேவாவின் 'முசாசி'.*
*முதன்முறையாக இணைந்திருக்கும் பிரபுதேவா - அந்தோணி தாசன் கூட்டணி*
'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'முசாசி' திரைப்படம், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் "முசாசி" ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
'முசாசி' என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது. இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி இசையமைப்பில், பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கும் இந்த பாடலுக்கு, நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்திருக்கிறார்.
இதனிடையே பிரபுதேவாவிற்கு முதன்முறையாக ஃபோக் மார்லி பாடகர் அந்தோணி தாசன் பின்னணி குரல் கொடுத்திருப்பதால் இந்த பாடலுக்கும், பாடலுக்கான காணொளிக்கும் பெரும் எதிர்பார்ப்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.