"விஷால்-34" படப்பிடிப்பு அதிரடியாகத் தொடங்கியது
ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இனிதே துவங்கியது.
'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் இந்த புதிய படத்தினை, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணைந்து பெரும் பொருட்செலவில், பிரமாண்டமாகத் தயாரிக்கின்றனர்.
இது விஷாலின் 34வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் தற்போதைக்கு "விஷால்-34" என அழைக்கப்பட்டு வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் முதல்முறையாக விஷால் ஜோடியாக இணைகிறார்.
தனது முதல் படமான தமிழ் படம் துவங்கி, அனைத்து படங்களிலும் நல்ல கதையம்சம், உறவுமுறை, காமெடி, விறுவிறுப்பான ஆக்ஷன் என ரசிகர்களுக்கு தொடர்ந்து விருந்து படைத்து வரும், இயக்குநர் ஹரி, இப்படத்தில் அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில், அனைவரும் தாங்கள் வாழ்வில் தங்களைப் பாதித்த, கடந்து வந்த சம்பவங்களை நினைவு கொள்ளும் வகையில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.
இப்படம் குறித்து ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் கூறியதாவது...
தமிழ் திரையுலகில் தொடர்ந்து தனித்துவமாகவும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலும் படங்களைத் தயாரித்து வரும் எங்கள் நிறுவனம் மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணியில், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜன் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்.
படம் குறித்து நடிகர் விஷால் கூறியதாவது..
என் திரை வாழ்க்கையில் திருப்புமுனை தந்தவர் இயக்குநர் ஹரி. அவருடன் இணைந்த தாமிரபரணி மற்றும் பூஜை படங்களைப்போல இந்தப்படமும் அழுத்தமான கதை, உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகளுடன், ஆக்சனும் கலந்து அனைவரும் ரசிக்கும் படி இருக்கும். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இப்படம் அமையும்.
இசையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, புஷ்பா படம் மூலம் 5 மொழிகளிலும் ஹிட் தந்த இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், "ஆறு வேங்கை, சாமி, சிங்கம்1,2, ஆறு படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஹரியுடன் மீண்டும் இணைகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பையனூரில் உள்ள பெப்ஸிக்கு சொந்தமான அரங்கில், ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயனின் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் துவங்கியது. மேலும் சென்னையை அடுத்து, தமிழ்நாட்டின் தென் பகுதிகள் தூத்துக்குடி, காரைக்குடி வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படமாக்கப்படவுள்ளது.
படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் படம் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
தொழில் நுட்ப குழு விபரம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஹரி
இசை - தேவி ஶ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு - M சுகுமார்
கலை - காளி பிரேம்குமார்
படத்தொகுப்பு - T S ஜெய்
ஸ்டண்ட் - திலீப் சுப்பராயன்
பாடல்கள் - விவேகா
இணை தயாரிப்பு - அலங்கார் பாண்டியன் , கல்யாண் சுப்பிரமணியன்
தயாரிப்பு - கார்த்திகேயன் சந்தானம் , ஜீ ஸ்டூடியோஸ்
மக்கள் தொடர்பு - நிகில் முருகன்