சென்னையில் நடைபெற்று வரும் த்ரீ எக்ஸ் த்ரீ தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு ஆடவர் மற்றும் பெண்கள் அணியினர் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தேசிய அளவிலான த்ரீ எக்ஸ் த்ரீ கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் இணைந்து நடத்தும் இந்த தொடரில், ஓபன் ஆடவர் பிரிவில் ரயில்வே அணி உட்பட 30 மாநில அணிகளும் மகளிர் பிரிவில் 26 மாநில அணிகளும் பங்கேற்றுள்ளன. இதில் போட்டிகளை நடத்திவரும் தமிழ்நாடு அணியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவினர் தொடர் வெற்றியை குவித்து வருகின்றனர். முதல் நாள் போட்டிகளில் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி உத்ரகாண்ட், பீகார் மற்றும் கேரளா அணிகளை வீழ்த்தியது. மகளிர் பிரிவில் தமிழ்நாடு அணி பீகார், குஜராத் அணிகளை வீழ்த்தியது.
இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. அதில் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி ரயில்வே அணியை 19 க்கு 11 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியை தொடர்ந்தது. கேரள அணி, உத்திரபிரதேச அணியை 17 க்கு 16 என்ற கணக்கிலும், பஞ்சாப் அணி, மஹாராஷ்டிர அணியை 21 க்கு 10 என்கிற கணக்கிலும் வென்றது. மத்திய பிரதேச அணி, மேகாலயா அணியை 10க்கு 7 என்கிற கணக்கிலும் மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா அணியை மத்திய பிரதேச அணி 9 க்கு 14 என்கிற கணக்கிலும் தோற்கடித்தது.
பெண்கள் பிரிவில் உத்திர பிரதேச அணியை தமிழ்நாடு அணி 16க்கு 21 என்ற கணக்கில் தோற்கடித்தது. மேலும் டெல்லி அணி 21 க்கு 6 என்கிற கணக்கில் பீகார் அணியையும், தெலங்கான அணி பஞ்சாப் அணியை 21 க்கு 15 என்கிற கணக்கிலும் , கேரள அணி அஸ்ஸாம் அணியை 21 க்கு 13 என்கிற கணக்கிலும் வென்றது.
இறுதி நாளான நாளை நடைபெற உள்ள காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்றுள்ள 16 அணிகள் மோத உள்ளன.