Monday, September 25, 2023

எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் அனல் பறந்த விவாதம்*

*சின்ன படங்கள் எடுக்க நினைப்போர் வரவேண்டாம் என விஷால் கூறியது சரியா..? ;  ‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் அனல் பறந்த விவாதம்*

*“யார் படங்களை எடுக்கவேண்டும் என கூற யாருக்கும் உரிமையில்லை” ; ‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் சூடான தயாரிப்பாளர் கார்த்திக்*

*“விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” ; எனக்கு என்டே கிடையாது தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி*

*பெரிய படங்களில் நடிக்க போய்விட்டதால் ‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவை புறக்கணித்த கதாநாயகி*

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். 

தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2, யாத்திசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் ஓம் பிரகாஷ் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். படத்தொகுப்பை வேல்முகனும் கலை வடிவமைப்பை சூர்யாவும் கவனித்துள்ளார். 

அக்டோபர் 6 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் ரியாக்சன் சார்பில் ஜெனிஷ் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.   இதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் என யாருமே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்காமல் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கார்த்திக் பேசும்போது, “அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் பயிற்சி எடுத்தேன். கடந்த ஏழு வருட தவமாக தற்போது இந்த படத்தை தயாரித்துள்ளேன். இந்த ஏழு வருடங்களில் ஒவ்வொரு முறையும் இந்த படத்தை துவங்க முயற்சிக்கும்போது சில தடங்கல்கள் ஏற்பட்டு முயற்சி தள்ளிப்போனது. ஆனாலும் ‘எனக்கு என்டே கிடையாது’ என்கிற எங்கள் படத்தின் டைட்டிலை எனக்கு நானே சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டேன்.

விக்ரம் ரமேஷ் என்னை சந்தித்து சொன்ன கதை தனித்துவமாக இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பாக சில விஷயங்களில் தீர்மானமாக இருந்தேன். படப்பிடிப்பில் யாரும் யாரையும் திட்டக்கூடாது. கோபத்தைக் காட்டக் கூடாது. படப்பிடிப்பில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அன்றைய தின ஊதியத்தை அவர்கள் கேட்காமலேயே தேடிச்சென்று கொடுத்து விட வேண்டும்.. எல்லோருக்கும் சரிசமமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தென்.. படப்பிடிப்பு நடந்த 35 நாட்களிலும் அதை இடைவிடாமல் கடைபிடித்து முதல் படத்திலேயே இதை சாதித்தும் விட்டேன்.

இந்த படத்தில் மூன்று பேருக்கு இடையே ஏற்படும் ஒரு சிறிய போராட்டம் ஒன்று இருக்கிறது. இதற்கு ஸ்டண்ட் மாஸ்டரை வைத்து படமாக்கினால் நன்றாக இருக்கும் என்பதால் ஓம் பிரகாஷை அழைத்தோம். அவர் அதை ஒரு பிரமாதமான சண்டைக் காட்சியாகவே அமைத்துக் கொடுத்தார். யாத்திசை போன்ற படத்தில் 300 பேருக்கு மேல் வைத்து சண்டை காட்சிகளை உருவாக்கியவர் வெறும் மூன்று பேருக்கான சண்டைக் காட்சியையும் அழகாக வடிவமைத்து கொடுத்தார்.

சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். இதுவே ஒரு விதமான சனாதானம் தான்.. இப்படி சொல்ல யாருக்குமே உரிமை இல்லை” என்று கூறினார்.

தயாரிப்பாளர் கார்த்திக்கின் வழிகாட்டியாக அவருக்கு பக்கபலமாக துணை நிற்கும் சக்தி என்பவர் பேசும்போது, “எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. விக்ரம் ரமேஷ் முதல் பட இயக்குநர் மாதிரியே இல்லை.. தயாரிப்பாளர் கார்த்திக்கை பொறுத்தவரை, தான் இருக்கும் இடங்களில் யாரும் மோசமான வார்த்தைகள் பேசுவதை விரும்ப மாட்டார். யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டார். முக்கியமாக தனிநபராக இல்லாமல் எல்லோரும் கூட்டாக சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என விரும்புபவர். இந்த படத்தின் இசையமைப்பாளர் கலாசரணின் திறமையை பார்க்கும்போது இத்தனை நாளாக இவர் எப்படி வெளியே தெரியாமல் இருந்தார் என்கிற ஆச்சர்யம் ஏற்பட்டது” என்று கூறினார்.

இப்படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றுள்ள விநியோகஸ்தார் ஜெனிஷ் பேசும்போது, “சமீபத்திய நிகழ்வில் நடிகர் விஷால் சின்ன படங்களை எடுப்பவர்கள் தயவு செய்து சினிமாவுக்கு வர வேண்டாம் அதற்கு பதிலாக அந்த காசில் சொத்து வாங்கி போடுங்கள் என்று கூறியதை அவர் சொன்ன ஒரு அறிவுரையாக தான் நான் பார்க்கிறேன். அவர் ஒரு தயாரிப்பாளராக தனது கடந்தகால அனுபவத்திலிருந்து அப்படி கூறியுள்ளார். அவர் சொன்னது போல இன்று சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதிலும் ஓடிடி தளங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதிலும் நிறைய சிரமங்கள் இருக்கிறது. லட்சங்களில் எடுக்கப்பட்ட படங்களை விநியோகித்து கூட நல்ல லாபம் பார்த்தேன். அதேசமயம் சமீபத்தில் ஒரு ஐந்து கோடி பட்ஜெட்தில் எடுக்கப்பட்டு வெளியான படம் வெறும் பத்து லட்சம் தான் வசூலித்தது. டாடா, குட் நைட் போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வசூல் செய்தன என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம் பேசும்போது, “சமீப காலமாக நிறைய திரில்லர் படங்கள் வருகின்றன. இதில் என்ன புதிதாக பண்ண முடியும் என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்படும். ஆனால் இந்த படத்தில் திரைக்கதை புதிதாக இருக்கும். படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக்கின் குணாதிசயத்துக்காகவே இந்த படத்தில் அனைவரும் இருமடங்காக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம். படத்தை எடுத்து முடித்த பின்பு அதை இசையமைப்பாளரும் எடிட்டரும் சேர்ந்து இன்னும் வேறு விதமாக மாற்றி விட்டார்கள்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் கலாசரண் பேசும்போது, “இந்தப் படத்தில் கடைசி டெக்னீசியனாக இணைந்தது நான்தான்.. சொல்லப்போனால் மொத்த படத்தையும் எடுத்து முடித்துவிட்டுத் தான் என்னிடம் வந்தார்கள்.. பாடல்களுக்கு கூட மாண்டேஜ் காட்சிகளை முன்கூட்டியே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து அதற்கு பாடல்களை உருவாக்க சொன்னார்கள். அதே சமயம் எனக்கு வேண்டிய சுதந்திரத்தையும் கொடுத்தார்கள்.

இந்த படத்தில் இரண்டு பாடல்களை பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர். அபிஷேக் ராஜா என் இசையில்  ஏற்கனவே சில சுயாதீன பாடல்களை பாடியுள்ளார்” என்றார். 

கலை இயக்குநர் சூர்யா பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பில் எங்களை தேடி வந்து சம்பளத்தை கொடுத்தார்கள். சொன்ன மாதிரியே 35 நாட்களில் படத்தை முடித்து விட்டார்கள். தயாரிப்பு நிறுவனம் என சொல்வதை விட அது வானத்தைப் போல குடும்பம் என்று சொன்னால் சரியாக இருக்கும்” என்று கூறினார்.

நடிகர் சிவகுமார் ராஜு பேசும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கே முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால் என்னை ஊக்கப்படுத்தி உற்சாகம் கொடுத்து நடிக்க வைத்தனர். முதன்முறையாக சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. ரிகர்சல் பண்ணும்போது தான் சினிமா என்பது விளையாட்டு கிடையாது என்பதை உணர்ந்தேன்” என்று கூறினார். 

இயக்குநர் விக்ரம் ரமேஷ் பேசும்போது, “ நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இது ஒளிவு மறைவில்லாத ஒரு நிறுவனம். கதையை சொல்வதற்கு முன்பாகவே, இதுதான் பட்ஜெட்.. நான் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறேன். என்னுடைய நண்பர்களும் இதில் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என முதலிலேயே கூறிவிட்டேன். தயாரிப்பாளரும் எந்த நிபந்தனையும் விதிக்காமல் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்ல ரொம்பவும் தாமதப்படுத்தாமல் கதை சொன்ன ஒரு வாரத்திலேயே படத்தையும் துவங்கி விட்டார்கள். 

இந்த படத்தில் மஸ்தான் கதாபாத்திரத்தில் சிவகுமார் ராஜு நடித்துள்ளார். இவர் நிறைய குறும்படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் இவருக்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் பிரபலமான இன்னொரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம் ஆனால் கடைசி நேரத்தில் இவரே நடிக்கட்டும் என முடிவெறுத்தோம்.  இந்த படத்திற்கு பாடல்கள் சிச்சுவேஷன் சொல்வதற்கு பதிலாக முழு படத்தின் கதையும் சொன்னேன். பாடலாசிரியர் ஸ்ரீனி அதற்கு ஏற்றார்போல அருமையான பாடல்களை எழுதிக் கொடுத்தார். 

ஒரு படத்துக்கு தேவை நல்ல கதை.. ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனம்.. இவை இரண்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். இந்த படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் வெளியே வரும்போது படம் நல்லா இருக்கு என்று மட்டுமே சொல்வார்கள்.  இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி ஏன் கலந்து கொள்ளவில்லை என்றால், அவரை எங்களால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இந்தியன் 2, கேப்டன் மில்லர் என பெரிய படங்களில் அவர் பிசியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.. ஒருவேளை இனி பெரிய படங்களில் தான் நடிப்பார் போல தெரிகிறது.  

இந்த படத்தில் நடித்துள்ள சேகர் என்கிற கதாபாத்திரம் ஒரே நாளில் பலவிதமான பிரச்சனைகள சந்திக்கும்... அவரது வாழ்க்கையும் இந்த படத்தின் கதையும் முடிந்து விடும் என நினைக்கும் நேரத்தில் மீண்டும் புதிதாக இன்னொரு விஷயம் தொடரும். அதனால் தான் எனக்கு எண்டு கார்டே இல்லை என்கிற டைட்டிலை இந்த படத்திற்கு வைத்தோம்: என்று கூறினார்.

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...