Wednesday, October 18, 2023

திரையின் மறுபக்கம் - திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் உள்ள கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் இப்படத்திற்காக தானே பார்த்திருக்கிறார் நிதின் சாம்சன்.


படம் எடுத்து அதை திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு, அதை எடுக்க தயாரிப்பாளர் மட்டுமல்லாது, ஹீரோ உட்பட அனைவரும் எப்படி உழைக்கிறார்கள்.? எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள்.?? என்பதை அறியாமல் தான் இருப்பார்கள். அப்படியாக திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை கூற வரும் படமாக உருவாகியிருக்கிறது இந்த “திரையின் மறுபக்கம்”.



சினிமாவின் தீவிர ரசிகரான சத்தியமூர்த்தி சினிமா மீதுள்ள ஆர்வத்தில் கிராமத்தில் இருந்து புறப்பட்டு சென்னை வருகிறார். அங்கு சினிமா இயக்குனர் என்ற படம் எடுக்கத் தெரியாத போலி இயக்குனரான செந்திலை சந்திக்கிறார் சத்தியமூர்த்தி.


தான் படம் இயக்கவிருப்பதாகவும், நீங்கள் தயாரிப்பாளராக இருங்கள் என்று சத்தியமூர்த்தியை தனது வலையில் சிக்க வைக்கிறார் செந்தில்.


ஊரில் இருக்கும் வீடு, விவசாய நிலங்களை விற்று தனது குடும்பத்துடன் சென்னையில் வீடு வாங்கி செட்டில் ஆகிறார் சத்தியமூர்த்தி. மேலும், மீதமிருக்கும் பணத்தை வைத்து செந்திலை இயக்குனராக கொண்டு புதுமுக நடிகர்களை வைத்து படத்தை தயாரிக்கிறார் சத்தியமூர்த்தி.


இருந்த பணத்தில் சிறிய போர்ஷனை மட்டுமே எடுக்க முடிந்தது செந்திலால். மிகப்பெரும் பைனான்சியரான அன்பரசு என்பவரிடம் தனது சென்னை வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்குகிறார் சத்தியமூர்த்தி.


படம் முடிந்து கைக்கு வந்த பிறகு, படத்தினை விநியோகஸ்தரர்களிடம் விற்க முற்படுகிறார் சத்தியமூர்த்தி. படம் பார்க்கும் விநியோகஸ்தரர்கள் அனுபவமுள்ள நல்ல தெரிந்த நடிகர்களை வைத்து ஒரு சில காட்சிகளை மீண்டும் படமாக்கும்படி கூறுகிறார்கள்.


இதனை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர், நண்பர்களிடம் கடனை பெற்றுக் கொண்டு உதவி இயக்குனர்களை வைத்து அந்த காட்சிகளை படமாக்கி விடுகிறார்.


படத்தினை விநோயகஸ்தரர்கள் வாங்க முற்படும்போது கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று பிரதமர் மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்து விடுகிறார். இதனால் விநியோகஸ்தரர்கள் படத்தை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.


செய்வதறியாது விழித்துக் கொண்டு நிற்கிறார் சத்தியமூர்த்தி. பணம் கொடுத்த அன்பரசு சத்தியமூர்த்தியிடம் பணத்தை தருமாறு வட்டி அசலும் உடன் கேட்கிறார்..


அதன்பிறகு சத்தியமூர்த்தி என்ன முடிவெடுத்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.


படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான கேரக்டர்களை துல்லியமாக செய்து முடித்திருக்கிறார்கள். அதிலும் இயக்குனராக வரும் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்தவர், அந்த கதாபாத்திரமாகவே மாறி களத்தில் இறங்கி விளையாடியிருக்கிறார்.


ஆனாலும், இயக்குனர்களை இந்த அளவிற்கு டேமேஜ் செய்திருக்க வேண்டாம். அவர்களும் படைப்பாளிகள் தானே. அவர்களுக்கான மரியாதையை கொஞ்சமாவது கொடுத்திருந்திருக்கலாம்.


சினிமாவை பற்றி எதுவும் அறியாமல், தெரியாமல் சினிமா எடுக்கவரும் தயாரிப்பாளர்கள் எப்படி தங்களது பணத்தை வீணடிக்கிறார்கள், எப்படி திறனற்ற ஒரு இயக்குனரை வைத்து படமெடுக்க முன்வருகிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறார்கள்.


சினிமா எப்படி எடுக்க வேண்டும் என்று இந்த படத்தை பார்த்து விழித்துக் கொள்ளுங்கள் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு படமாகத்தான் இப்படத்தை பார்க்கத் தோன்றுகிறது.


பணம் கொடுக்கும் பைனான்சியராக நடித்திருக்கும் அன்பரசன் கேரக்டர், தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் பிரபல சினிமா பைனான்சியர் ஒருவரை கார்னர் செய்து எடுக்கப்பட்டது தான் என்பது வெளிச்சமாக தெரிகிறது.


என் சி அனில் இசையில், பாடல்கள் பெரிதாக இல்லை ரித்திக் மாதவன் பின்னணி இசை ஓகே ரகம். 


இயக்குனர் போர்வையில் சுற்றித் திரியும் செந்தில், வாய்ப்பு தேடி தவறான வழியில் செல்லவிருந்த ஒரு பெண்ணை நேர்வழிப்படுத்தும் காட்சி கைதட்ட வைத்தது.


சில பல குறைகள் எட்டிப் பார்த்தாலும், சினிமா எடுப்பவர்கள் படும் இன்னல்களை கண்முன்னே கொண்டுவந்ததற்காக இயக்குனர் நிதின் சாம்சனை பாராட்டலாம்.


திரையின் மறுபக்கம் – சினிமா எடுப்பவர்களின் வலி.


ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

 

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட  'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்! 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகரா...