Wednesday, May 1, 2024

சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம்


 சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் !! 


தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ்,  தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செய்ல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது . இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்களும் இணைந்து செயல்படவுள்ளார். 

இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா அவர்கள் இணைந்து செயல்படவுள்ளனர். 

சேவையே கடவுள் எனும் அறக்கட்டளை அமைப்பின் பெயரில்  மாற்றம் செயல்பாடுகள்  இன்று முதல் ஆரம்பமானது. 

இந்த அறக்கட்டளை மூலம், தமிழக மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் தன்னார்வலர்கள் மூலம் செய்து தரப்படவுள்ளது.  இன்று முதற்கட்டமாக விவாசாயிகளுக்கு பயன்படும் வகையில், 10 டிராக்டர் 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு இந்த டிராக்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த அறக்கட்டளை துவக்க விழாவில், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா கலந்துகொள்ள, இவர்களுடன் ராகவா லாரன்ஸின் தாய்  கண்மணி அம்மா அவர்களும்,  கலந்துகொண்டார். மாற்றம் அமைப்பின் துவக்க விழா பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாகத் துவங்கியது. 

இவ்விழாவினில் 

மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது… 

பத்திரிக்கை ஊடக நண்பர்கள், நான் வளர்த்த குழந்தைகள், என் தாய்,  எஸ் ஜே சூர்யா என் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். 2 மாதம் முன்பு எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கோவிலுக்கு போய் வந்த நாள்,  ஒரு கனவு அதை நினைத்து கண்களில் தானாக கண்ணீர் வந்தது. அது தான் இந்த மாற்றத்தின் துவக்கம். நான் அதைச் செய்யப்போகிறேன். இதைச் செய்யப்போகிறேன் அதைச் செய்யப் போகிறேன்  என சொல்ல மாட்டேன்,  செய்துவிட்டு சொல்கிறேன். இன்று மாற்றம் துவங்குவது மிகுந்த மகிழ்ச்சி. செஃப் வினோத் மாற்றம் மூலம் என்ன செய்யப்போகிறீர்கள் என்றார்,  மக்களைத் தேடிப்போய் குறைகள் கேட்டு வரப்போகிறேன் என்றேன். நீங்கள் போகும் போது சொல்லுங்கள் அதற்கான சாப்பாட்டை நான் கவனித்து கொள்கிறேன். என்றார் அவருக்கு கடவுள் மனது. அறந்தாங்கி நிஷா உங்களால் முடிந்த சின்ன அளவில், பல உதவிகளை செய்து வருகிறீர்கள் மகிழ்ச்சி. இணைந்து பணியாற்றுவோம் என்றார். என் சமீபத்திய நண்பர் எஸ் ஜே சூர்யா, அவர் ஒரு நாள் போன் செய்தார். எங்கு பார்த்தாலும் மாற்றம் என்று பார்க்கிறேன் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். நான் மாற்றம் பற்றி சொன்னேன், உடனே நானும் மாற்றத்தில் இணைகிறேன் என்றார். அவர் இதைச் சொல்வார் என நினைக்கவில்லை. சினிமாவில் மட்டுமல்ல மாற்றத்திலும் என்னுடன் இணைந்துள்ளார். இது கடவுளின் ஆசிர்வாதம். இணைந்து பயணிப்போம். என்னை இந்தளவு வளர்த்தெடுத்தது என் தாய் தான். சின்ன வயதில் என் அம்மா, என்னை எம் ஜி ஆர் மாதிரி வளர்ப்பேன் என்றார். அப்போது எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் எம் ஜி ஆர் அளவு இல்லையென்றாலும் அவரில் சிறியளவிலாவது நான் செயல்படுவேன். நாளை என் அம்மாவின் பிறந்த நாள், நாளை முதல் இந்த மாற்றம் துவங்கும் நன்றி. 

செஃப் வினோத் பேசியதாவது…

லாரன்ஸ் மாஸ்டரை வளர்த்தெடுத்த தாய்க்கு நன்றி. லாரன்ஸ் அண்ணாவிற்கும் எனக்கும் பல வருட கால நட்பு இருக்கிறது. ஜல்லிகட்டு போராட்டத்தின் போது பீச்சில் தான்  அண்ணனை முதலில் பார்த்தேன். நான் ஒரு செஃப் சார் இதில் நான் பங்கெடுத்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றேன், அப்போது நம்பர் வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டார். பின் ஒரு நாள் என்னை அழைத்து ஒரு விழாவிற்கு  பெரிய கேக் செய்யச் சொன்னார். அப்போதிலிருந்து அவருடன் இணைந்து பயணித்து வருகிறேன். மாற்றம் தொடங்கிய போது, நானும் இதில் இணைந்து பயணிக்க ஆசைப்பட்டேன். நாம் எத்தனையோ அறுசுவை உணவை சாப்பிட்டிருப்போம், ஆனால் குக்கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதே உணவை இந்த பயணத்தின் மூலம்  கொண்டு சேர்ப்போம் என்றேன் உடனே சரி என்றார். இந்த பயணத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி. 

அறந்தாங்கி நிஷா  பேசியதாவது…

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராகவா லாரன்ஸ் அண்ணா முதலில் அழைத்த போது ஒரு நடிகராக நினைத்து தான் அவரை பார்க்கப் போனேன் ஆனால் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில், அண்ணணாக மாறிவிட்டார். என் அம்மா நான் பெற்ற பிள்ளை மாதிரி இருக்கிறார் என்றார், ஆனால் அவர் எல்லோரும் பெற்ற பிள்ளை போல் தான் இருக்கிறார். மாற்றம் ஒன்று தான் மாறாதது ஆனால் இந்த மாற்றம் அமைப்பு  மூலம் பல மாற்றங்கள் நடக்கவுள்ளது. லாரன்ஸ் மாஸ்டர் முதலில் விவசாயிகளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்றார். தேடித்தேடி செய்ய வேண்டும் என்றார். அதன் முதல் தொடக்கம் இந்த டிராக்டர் அளிக்கும் விழா. இந்த சிந்தனை அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. விவசாயம் மட்டுமல்ல, கல்வி, மருத்துவம் சார்ந்து பல விசயங்கள் செய்ய வேண்டும் என்றார். அவரின் சிந்தனை எனக்கு பிரமிப்பை தந்தது. முடியாதவர்களை தேடிதேடிப் போய் உதவி செய்யப் போகிறது இந்த மாற்றம் அமைப்பு என்றார். நம் மனதிற்கு உண்மையாய் இருந்து இதைச் செய்வோம் என்றார்.  இந்த பயணத்தில் அவருடன் இனைந்து மாற்றம் மூலம் செயல்படுவோம் நன்றி. 

எஸ் ஜே சூர்யா பேசியதாவது…

மாஸ்டரை பொறுத்தவரை ஒரு தாயின் வளர்ப்பில் பல போராட்டங்களை தாண்டி தான், இந்தளவு வளர்ந்து வந்திருக்கிறார். இத்தனை தடைகளை தாண்டி வளர்ந்து, வந்த பிறகு,  எல்லோருக்கும் உதவனும் எனும் எண்ணம் வருவது  மிகப்பெரியது. சிலருக்கு சரி நாமும் உதவனும் என எண்ணம் வரும். ஆனால் அதை எத்தனை நாளைக்கு செய்ய முடியும், ஆனால் இவர் 25 வருடங்களாக செய்து வருகிறார். ஊனமுற்ற குழந்தைகள் மீது உங்களுக்கு ஏன்  இத்தனை அன்பு என்று கேட்டேன், அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சொன்னார், அவர் அம்மா செய்த ஒரு  நிகழ்வைப் பற்றி சொன்னார். அதைக்கேட்டபோது தான் புரிந்தது. அவர் ஒரு லெஜெண்ட். ஒரு படம் முடிந்தால் பெரிதாக அந்த நடிகர்களோடு உறவு இருக்காது, பார்க்கும் போது பேசிக்கொள்வோம் அவ்வளவு தான், ஆனால்  இவருடன் இணைந்து பயணிக்கிறேன் என்றால் அவரின் அன்பு தான் காரணம். அவரின் சொந்த  முயற்சியில் சொந்தப் பணத்தில் தான் உதவிகள்  செய்து கொண்டிருக்கிறார். உதவி செய்ய வருபவர்களை கூட பணம் வாங்காமல்  நீங்களே இவர்களுக்கு செய்யுங்கள் என கை கட்டுகிறார். இது எத்தனை பாரட்டுக்குரிய விசயம். அவர் வளர்த்த குழந்தைகள் இன்று வளர்ந்து பலருக்கு உதவி செய்கிறார்கள். இது எத்தனை பெரிய விசயம். அவர் என்னை பல கோவில்களுக்கு அழைத்து செல்வார். என்னுள்ளேயே பல மாற்றங்களை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்த மாற்றத்தில் நானும் இணைந்து கொள்கிறேன் என்றேன் ரொம்ப சந்தோசப்பட்டார். முடியாதவர்கள் பலரின் வாழ்க்கைக்கு, பலருக்கு பல உதவிகளை செய்வதில் நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். முதல் கட்டமாக 10

லட்சம் அளிக்கிறேன்.  நீங்கள் செய்யுங்கள் என்றேன் ஆனால் நீங்களே உங்கள் கையால் செய்யுங்கள் என்றார்.  கண்டிப்பாக செய்கிறேன் என்றேன். இது மட்டுமல்லாமல் என்னால் முடிந்த அளவு தொடர்ந்து அவருடன் இணைந்து பணியாற்றுவேன். இந்த மாற்றம் மிகப்பெரிய அளவில் ஒரு மாற்றத்தை கொண்டு வரப்போகிறது அனைவருக்கும் நன்றி.   

தயார் கண்மணி அம்மாள் பேசியதாவது…

அனைவரும் நன்றாக இருக்க ராகவேந்திராவை வேண்டிக்கொள்கிறேன். இந்த மாற்றம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எனக்கு எப்போதும் சர்ப்ரைஸாக தான் சொல்வார். இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது இது மிகப்பெரிய மாற்றமாக உள்ளது. இந்த மக்கள் சேவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இன்னும் பல சேவைகள் என் மகன் செய்ய வேண்டும். அரசியலாக மட்டும் ஆக்கிவிடாதே தம்பி. தொடர்ந்து சேவையை செய். அனைவரும் இணைந்து உதவி செய்யுங்கள். கொரானா காலத்தில் பல உதவிகள் தடை பட்டது இப்போது மீண்டும் எல்லாம் ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி.  அனைவருக்கும் நன்றி.   

விழாவில் 1 டிராக்டர் அறந்தாங்கி நிஷா பொறுப்பில் அவர் ஊரில் உள்ள விவாசாயிகள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. 2வது டிராக்டர் விழுப்புரத்தை சேர்ந்த விவாசாயிக்கு வழங்கப்பட்டது. இன்னும் 8 டிராக்டர்கள் மாற்றம் அமைப்பில் சார்பில். தமிழகத்தில் தேவைப்படும் விவாசாயிகளின்  ஊர்களுக்கு தேடிச்சென்று வழங்கப்படவுள்ளது.

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட  'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்! 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகரா...