*சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த 'காளிதாஸ் 2'*
*பூஜையுடன் தொடங்கிய 'காளிதாஸ் 2'*
2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான 'காளிதாஸ்'. காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது 'காளிதாஸ் 2' படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, டி. சிவா - அம்மா கிரியேஷன்ஸ், கதிரேசன்- ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ், அருண் விஸ்வா- சாந்தி டாக்கீஸ், அம்பேத்குமார்- ஒலிம்பியா மூவிஸ், சினிஷ்- சோல்ஜர் ஃபேக்டரி, கருணா மூர்த்தி- ஐங்கரன் இன்டர்நேஷனல், குமார்- லார்க் ஸ்டுடியோஸ், தேவராஜு மற்றும் ஃபைவ் ஸ்டார் கல்யாண், விநியோகஸ்தர்கள் அழகர்சாமி, அரவிந்த் - ஆருத்ரா பிலிம்ஸ், 'டாடா' பட இயக்குநர் கணேஷ் பாபு, இயக்குநர் கே. கல்யாண், 'டார்க்' பட இயக்குநர் ஜெகன், ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், வேல்ராஜ், சக்தி, சண்டை பயிற்சி இயக்குநர் பாண்டியன், இணை இயக்குநர் ஆதிஷ்.. உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து 'காளிதாஸ் 2' படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார். இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். துரைராஜ் கலை இயக்கத்தையும், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளையும் கவனிக்கிறார்கள். நிர்வாக தயாரிப்பை பழனியப்பன் மேற்கொள்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்கை பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இவர் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற 'பார்க்கிங்', 'கருடன்', 'மகாராஜா' ஆகிய திரைப்படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறார். இவர் தயாரிப்பில் 'காளிதாஸ் 2' படம் உருவாகுவதால்.. திரைப் பட ரசிகர்களிடையேயும், திரை ஆர்வலர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் தொடக்க விழாவைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.