Saturday, July 20, 2024

44 நடிகர்களை வைத்து 41 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள படம் வாஸ்கோடகாமா : இயக்குநர் ஆர்ஜிகே பேச்சு!

நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு!

சினிமாவை அழித்து விடாதீர்கள் : நடிகர் நகுல் பேச்சு!

44 நடிகர்களை வைத்து 41 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள படம் வாஸ்கோடகாமா : இயக்குநர் ஆர்ஜிகே பேச்சு!


5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல்  நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார்.

வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த
' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள். 

விழாவில் நடிகை தேவயானி பேசும் போது,

"முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன். சுறுசுறுப்பாக, அழகாக, நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைந்திருக்கின்றன.

என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அவனை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.

எனக்கும் அவனுக்கும் நல்ல அன்பான உறவு இருக்கிறது.
நகுல் எங்கள் வீட்டுக் குட்டிப் பையன். அவன் எனக்குச் சின்னத்தம்பி.அவன் பல திறமைகள் உள்ளவன். நானே அவனுக்கு ஒரு விசிறி தான்.பாய்ஸ் படத்திற்குப் பிறகு அவனுடைய காதலில் விழுந்தேன் படத்தைப் பார்த்த போது அவனுக்குள் ஏற்பட்டிருந்த மாற்றம் ஆச்சரியமாக இருந்தது. நகுல் நல்ல திறமையான நடிகன். முழுப் படத்தையும் தன் தோளில் தாங்கி சுமப்பவன். அவனுக்கு ஒரு நல்ல கதை வேண்டும். நல்ல இயக்குநர் வேண்டும்.நல்ல ஒரு கதைக்காக, நல்ல ஒரு இயக்குநருக்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான்.எல்லாருக்கும் ஒரு நேரம் வரும் என்று சொல்வார்கள். அந்த நல்ல நேரத்திற்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன்.

அவன் எனது தம்பி என்பதற்காகச் சொல்லவில்லை .அவன் நல்ல திறமைசாலி. அவன் நல்ல நடிகன் மட்டுமல்ல, நன்றாகப் பாடுவான்; நன்றாக ஆடுவான்; இசை அமைப்பான். தன்னைச் சுற்றி உள்ளவர்களை உற்சாகமாக வைத்திருப்பான்..
 அப்படிப்பட்ட ஒரு தம்பியும் அக்காவும் இந்த சினிமாவில் இருப்பதே அபூர்வம் தான்.இப்படி வேறு எங்கே இருக்கிறது?

அவனுக்கு நான் முறையில் அக்கா என்றாலும் வயதில் சின்னவனாக இருப்பதால் அவனை நான் அம்மாவைப் போல் பார்த்துக் கொள்வேன்.அவனுக்கு நான் இன்றும் அம்மாதான்.சின்ன வயதில் இருந்து துறுதுறு என்று இருப்பான். நல்ல திறமைசாலி.

அவன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் பட  விழாவில் அக்காவாக நான் கலந்து கொள்வது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. இதை என்னால் நம்ப முடியவில்லை.

இப்படி ஒரு வாய்ப்பு எத்தனைப் பேருக்குக் கிடைக்கும்? எந்த அக்காவுக்கு கிடைக்கும்? 

இன்று என் அப்பாவும் அம்மாவும் இல்லை. ஆனால் இங்கே நாங்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் இங்கே இருப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசீர்வாதம் இங்கே நிரம்பி இருப்பதாக நினைக்கிறேன்.இங்கு நடப்பது ஒவ்வொன்றும் அவர்களைப் போய்ச் சேரும்.எப்போதும் அவனுக்கு ஆதரவாக இருந்த அவர்கள் இப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அவனைச் சூழ்ந்து இருந்த கரிய புகைமேகங்கள் விலகி விட்டன. இனி அவனுக்கு நல்ல காலம் தான். இனி நீ நல்ல நல்ல படங்கள் செய்ய வேண்டும்.நகுல் நீ எதற்கும் கவலைப்படாதே. மற்றவர்கள் அவனுக்கு ஆதரவு கொடுங்கள் "என்று கூறி வாழ்த்தினார் .

விழாவில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசும்போது,

"இந்த படத்தின் தயாரிப்பாளர் பெயர் சுபாஸ்கரன், எடிட்டர் பெயர் தமிழ்குமரன். இந்த பெயர்கள் எனக்கு லைகாவை நினைவூட்டுகின்றன. அந்த லைகா நிறுவனம் போல் இவர்களும் வளர வேண்டும். நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.படத்தை இயக்கியுள்ள ஆர் ஜி கே தன்னம்பிக்கை உள்ள இளைஞன். 'எ பிலிம் பை ஆர்ஜிகே 'என்று போடும்போது யாரும் எதுவும் சொல்வார்களோ என்று நினைக்காமல் தைரியமாகப் போட்ட அந்தத் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.
என்னிடம் வாஸ்கோடகாமா கதையைப் பற்றிச் சொல்லும் போது நல்லவர்கள் எல்லாம் ஜெயிலில் இருக்கிறார்கள், கெட்டவர்கள் எல்லாம் வெளியில் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட ஒரு கதை என்றார். அதுவே எனக்குப் பிடித்து விட்டது.
அவரிடம் எப்போதும் ஒரு தேடல் இருக்கும்.

படப்பிடிப்பில் அவர் அப்படித்தான் தனக்குத் தேவையானதைச் சமரசம் இல்லாமல் பெற்றுக் கொள்வார். இப்படிப்பட்ட நம்பிக்கைதான் ஒருவனுக்கு வெற்றியைத் தேடித் தரும்" என்று  வாழ்த்தினார்.

இயக்குநர் அறிவழகன் பேசும்போது,

''ஒரு படத்தில் இயக்குநர் பணியாற்றும் போது தயாரிப்பாளரின் பட்ஜெட்டின் சூழலுக்கு ஏற்ப தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டும். அது முக்கியம். சரியான பட்ஜெட் இருக்கிறதா வசதிகள் இருக்கிறதா என்பதை எல்லாம் பார்ப்பதை விட இந்த அடாப்டேஷன் முக்கியம்.

கே.எஸ்.ரவிகுமாரின் இணை இயக்குநரிடம் நான் பேசிக்கொண்டிருந்த போது படையப்பா வில் அந்த ஊஞ்சல் காட்சி எடுக்கப்பட்ட விதத்தைக் கூறினார். மாலை மூன்று மணிக்கு அப்போது அவ்வளவு பெரிய சீன் எடுக்க முடியாத அளவுக்கு சூழல் இருந்தாலும் கூட அந்த நேரத்தில் ஆன்த ஸ்பாட் முடிவு செய்து இயக்குநர் அந்தக் காட்சியை எடுத்தது பற்றி  அவர் கூறினார். ஒரு இயக்குநருக்கு படத்தின் கதையின் ஆன்மாவை எடுத்துச் செல்வது தான் முக்கியம் .அதுதான் வெற்றிக்கு வழி வகுக்கும். ஒரு படத்தின் டெக்னீஷன்கள் மனதார இதயபூர்வமாக அந்த படத்திற்காக உழைக்க வேண்டும். அது இந்தப் படத்திற்கு நடந்துள்ளது.
அந்த பாய்ஸ்  படக் குழு இங்கு இருப்பதாக நான் உணர்கிறேன். நகுல் ஒரு ஆற்றல் மிக்க நடிகர். சினிமாவில் ஏற்ற இறக்கம் இழுபறி நிலைமை சகஜம். அதையும் தாண்டி ஜெயிப்பது தான் முக்கியம்" என்று கூறினார்.

 இயக்குநர் ஆர்ஜிகே பேசும் போது ,

" சினிமாவில் எனக்குத் தெரிந்ததெல்லாம் ரஜினி ஒருவர் தான். அவர் மூலம் தான் நான் சினிமாவைக் கற்றுக் கொண்டேன். நன்றி தலைவா !

இந்தப் படத்தில் ஒரு 40 வயது குழந்தை நகுலை நான் நடிக்க வைத்துள்ளேன் . இந்தப் படத்தில் 44 நடிகர்களை நடிக்க வைத்து 41 நாட்களில்  படத்தை முடித்துள்ளேன். குறிப்பிட்ட பட்ஜெட்டில்,சொன்ன மாதிரி குறிப்பிட்ட நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம்.இந்தப் படத்தில் நாங்கள் எடுக்க நினைத்ததை எடுத்திருக்கிறோம். நிச்சயமாக அது உங்களுக்குப் பிடிக்கும். நல்ல என்டர்டெய்னராக இருக்கும். வேண்டாம் என்று தோன்றுகிற பல காட்சிகளை பாரபட்சம் பார்க்காமல் எடுத்து விட்டோம்.கஷ்டப்பட்டு எடுத்து விட்டோமே என்று வைக்காமல் தூக்கி இருக்கிறோம். படம் பார்ப்பவர்களின் உணர்வு தான் முக்கியம். இதை உணர்ந்து சரியானபடி எடுத்துள்ளோம் என்று நினைக்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு உள்ளது உள்ளபடி எழுதுங்கள் .நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று எழுதுங்கள்.  இல்லை என்றால் நன்றாக இல்லை என்று எழுதுங்கள்" என்றார்.

நாயகன் நகுல் பேசும் போது,

"முதலில் இங்கு வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நட்பு வட்டம் சிறியது தான். ஆனால் என்றும் நான் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன். அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன் முன்பெல்லாம் நான் புலம்புவதுண்டு. வாழ்க்கை இப்படியே போகிறது என்று.

எனது வாழ்க்கை எங்கே தொடங்கி எங்கே போகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. மும்பையில் பள்ளியில் படித்த போது  அக்கா இங்கே நடிக்க வந்து விட்டார். அவருக்காக, அவர் அழைத்ததால் இங்கு வந்து விட்டோம்.
நான் முதலில் பைலட் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்றேன் . பிறகு விஸ்காம் சேர்ந்தேன். அதுவும் ஒரு காதலுக்காக மாறினேன். அதுவும் நிறைவேறவில்லை. 
ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன் .அதற்காக எடையெல்லாம் குறைத்தேன்.அதுவும் நடக்கவில்லை .

ஏதோ ஒரு அதிர்ஷ்டம், ஏதோ ஒரு ஆசீர்வாதம் காரணமாக இங்கு வந்து சேர்ந்து விட்டேன்.

ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் தான் பாய்ஸ் படத்தில் நடிக்க  வந்தேன். பிறகு காதலில் விழுந்தேன் வந்தது. நான் ஒன்று நினைத்தால் எல்லோரும் இன்னொன்றை என்னிடம் ரசித்தார்கள். நான் பாடலாம் என்றால் அவர்கள் நகுல் நன்றாக ஆடுகிறார் என்றார்கள்.

படத்தில் எனது சண்டைக்காட்சிகள் இருந்தபோது நான் பயந்தேன். ஆனால் அவர்களோ என் நடனத்தை ரசித்தார்கள்.
 பல தடைகள் தாமதங்களுக்குப் பிறகு எப்படியோ அடுத்தடுத்த படங்கள். இப்படித்தான் மாசிலாமணி வந்தது, பிறகு வல்லினம் வந்தது.

சில மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் கூட இருந்தேன் .ஒரு கட்டத்தில் புலம்பதில் பயனில்லை என்று புரிந்தது. எதெது எப்போது நடக்குமோ அதது அப்போது நடக்கும் என்கிற தெளிவு வந்தது.

இரண்டு மணி நேரம் சிரிக்கச் சிரிக்க இந்த வாஸ்கோடகாமா படத்தின் கதையைச் சொன்னார் ஆர்ஜிகே.  அதேபோல் எடுத்துள்ளார். இதுவரை நான் நடிக்காத டார்க் ஹ்யூமர் கதை இது . இப்படத்தில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இயக்குநர் நம்பிக்கையை விடவில்லை .என்னை அவர் நம்பினார் ,அவரை நான் நம்பினேன் .தயாரிப்பாளர் எந்தக் குறையும் வைக்கவில்லை.

என்னுடைய வாழ்க்கை என்னுடைய வழி, இதுதான் எனது கொள்கை. இப்படித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன் .

நான் என்னென்னவெல்லாமோ கற்பனை செய்தேன்.
நான் எப்போதும் நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை எல்லாம் நல்ல நேரம் தான் என்று நினைக்கிறேன். நான் நினைத்துப் பார்க்கிறேன் அந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் எப்போதும் என்னைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன்.

சினிமாவில் விமர்சனம் கூடாது என்பது அல்ல ,அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சினிமா நூற்றாண்டு கண்டு விட்டது.  இதை நம்பி பலபேர் இருக்கிறார்கள். இங்கே யாரும் பர்பெக்ட் கிடையாது. எல்லோரிடமும் குறைகள் உள்ளன. விமர்சனம் என்கிற பெயரில் சினிமாவை அழித்து விடாதீர்கள்.

ஆகஸ்ட் இரண்டாம் தேதி என் மகளது பிறந்த நாள். அன்று இந்தப் படம் வெளியாக உள்ளது கூடுதல் மகிழ்ச்சி " என்றார்.

இவ்விழாவில்,படத்தைத் தயாரித்திருக்கும் டத்தோ. பா. சுபாஸ்கரன், நாயகி அர்த்தனா பினு,இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும்  பயில்வான் ரங்கநாதன்,பாய்ஸ் மணிகண்டன், வாழ்த்த வருகை தந்த  சாந்தனு, ஜெகன் ,படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் யுவராஜ், இசையமைப்பாளர் அருண் என்.வி ,ஒளிப்பதிவாளர் என். எஸ். சதீஷ்குமார், எடிட்டர் தமிழ்குமரன் , கலை இயக்குநர் ஏழுமலை ஆதிகேசவன், பாடகர் அந்தோணி தாஸ்,இணைத் தயாரிப்பாளர் கோபிநாத் நபராஜன்  ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.முன்னதாகத் தயாரிப்பாளர் டத்தோ பா. சுபாஸ்கரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

Sanghamitra 'Peace Walk' - Rotary International District 3234's United Efforts with Queen Mary's College to Combat Drug Addiction

Sanghamitra 'Peace Walk' - Rotary International District 3234's United Efforts with Queen Mary's College to Comb...