Monday, February 17, 2025

கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள்: இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேச்சு!

கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள்:  இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேச்சு!

கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் என்று கூரன் பட விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.அது பற்றிய விவரம் வருமாறு
ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்
திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். 
மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். 
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.

'கூரன்'  திரைப்படத்தின்  ட்ரெய்லர் வெளியீட்டு விழா
சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் எஸ். . சந்திரசேகரன் பேசும்போது,

பொதுவாகவே ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கும் ஒரு வசனம். இது வித்தியாசமான படம் .இதுவரைக்கும் நீங்கள் பார்க்காத படம்.இந்த வார்த்தைகளை எல்லாருமே சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் என்னுடைய 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இது உண்மையிலேயே வித்தியாசமான படம்.நான் உண்மையிலேயே வித்தியாசமானது என்று சத்தியமாக சொல்லக் கூடிய கதை இது.
பலவகையில் இது வித்தியாசமான படம்.
இந்த படத்தில் நாய் தான் கதாநாயகன்.ஒரு ஈ பழிவாங்கி ஒரு படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒரு யானை பழி வாங்கிய வெற்றிப் படத்தை, ஒரு பாம்பு பழிவாங்கிய வெற்றிப் படத்தை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.இதில் மனிதர் மீது ஒரு நாய் பழிவாங்குகிறது.

தன்னுடைய போராட்டத்திற்கு நீதிமன்றம் வரை படியேறுகிறது.இது ஒரு வித்தியாசம்.

இரண்டாவது,
இந்தப் படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை டூயட் இல்லை.நடனம் இல்லை.

இதில் நடித்தவர்கள் எல்லாம் பார்த்தால் நாய், நான் ஒரு 80 வயதுக்காரன், ஒய்.ஜி. மகேந்திரன் என் வயதுதான்.இப்படி இதில் நடித்தவர்கள் முழுதும் வயதானவர்கள் .அது ஒரு வித்தியாசம்.

 என்னைப் பற்றி எல்லாரும் பேசினார்கள். அது கடவுள் கொடுத்த பரிசு. ஓடிக் கொண்டே இருக்கிறேன், இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். எதையும் பாரமாக தலையில் போட்டுக் கொள்வதில்லை .கடைசி வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.உடனிருப்பவர்கள் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் .நான் அலுவலக வரும்போது அனைவரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஒன்றும் வேலை இல்லை என்றால் கூட அனைவருடனும் பேசிக் கொண்டிருப்பேன். ஏதாவது செய்து கொண்டிருப்பேன்.
ஏனென்றால் வீட்டில் உட்காரக்கூடாது என்று நினைப்பேன்.சக்கர நாற்காலியில் உட்காரும் வாழ்க்கை எல்லாம் வேண்டாம் என்று காலையில் 9:00 மணிக்கு அலுவலகம் வந்து விடுவேன்.

இந்த விழாவில்  எங்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தான் மேடையில் இருக்கிறார்கள்.
 கொடைக்கானலில் ஜனவரி மாதக் குளிரில் நாங்கள் சென்றோம் .அதுவே ஒரு மறக்க முடியாத அனுபவம்.நடுங்கிக்கொண்டே சென்றோம் படப்பிடிப்பு ஆரம்பித்ததும், அதெல்லாம் போய்விடும்.

இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஜுரம் வந்ததே கிடையாது .அங்கே போனபோதுதான் வந்தது.ஆனால் படப்பிடிப்பு இடத்திற்குப் போனால் எனக்கு எல்லாமும் போய்விடும். அந்த நம்பிக்கையில் தான் அங்கே நான் சென்றேன்.சொன்ன மாதிரியே  என்னைத் தண்ணீரில் எல்லாம் குளிக்க வைத்தார்கள், ஜுரம் போய்விட்டது.
வியாதி என்பது நம் மனம் நினைப்பதுதான். 

 வாழ்க்கையைச் சுலபமாக எடுத்துக் கொண்டால் கடைசி வரை நன்றாக இருக்கலாம்.என் எல்லா படத்திலும் ஏதாவது ஒரு மெசேஜ்  இருக்கும். இந்தக் கதையை கேட்டவுடன் எனக்கு அது பிடித்திருந்தது.நாய் நீதிமன்றம் செல்கிறது. அதுவே புதிதாக இருந்தது.நான் எழுபது படங்களில் ஐம்பது படங்களில் மனிதன் நீதிமன்றம் சென்றது போல் தான் எடுத்திருக்கிறேன்.நாயோ பூனையோ போனது போல் எடுக்கவில்லை. அதுதான் புதிதாக இருந்தது.
இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் தங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.

இந்தப் படத்தை இயக்குநர்கள் அமீர், பார்த்திபன் போன்றவர்கள் பார்த்திருக்கிறார்கள். டெல்லியில் இருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார். அனைவரும் படத்தைப் பார்த்து விட்டு உடனே எழுந்திருக்கவில்லை,  கண்கலங்கினார்கள்.

திரைப்படங்களில் எழுத்தாளன்தான் கதாநாயகனின் குணச் சித்திரத்தையே படைக்கிறான்.இங்கே நாம் நடிகர்களைக்  கொண்டாடுகிறோம்.
.கதாநாயகன் அளவுக்கு இயக்குநர்களையும் கொண்டாட வேண்டும். அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்வு வேண்டும் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று.

சில படங்களைப் பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது.
எழுத்தாளன் படைக்கும் பாத்திரங்கள் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். இவனைப் போல வாழ வேண்டும் என்கிற மாதிரி முன்னுதாரணமாக அந்தப் பாத்திரம் இருக்க வேண்டும். கத்தி எடு தலையை வெட்டு என்று படம் பார்த்து விட்டு வெளியே செல்கிறவனும் கத்தி எடுத்து கையை வெட்டு, தலையை வெட்டு என்று செய்து கொண்டிருந்தால் இளைய சமுதாயம் என்ன ஆகிறது?
அந்த பொறுப்புணர்வு வேண்டும் .சினிமா என்பது சாதாரணமானதல்ல. இந்தப் படத்தில் கத்தி இல்லை; ரத்தம் இல்லை;துப்பாக்கி சத்தம் இல்லை; ஆனால் ஒரு சக்தி வாய்ந்த விஷயம் இருக்கிறது.அதை நாங்கள் சத்தமாகத் தீவிரமாகச் சொல்லாமல் உணர்வுபூர்வமாக எதார்த்தமாக சொல்லி இருக்கிறோம்.

சில நல்ல படங்கள் இப்போது செய்கிறார்கள். அதை நான் தவறு சொல்லவில்லை. ஆனால்  படம் பார்க்க நூறுபேர் வருகிற போது  ஒருவராவது மனமாற்றம் அடையும்படி படங்கள் இருக்க வேண்டும்.இது ஒரு வன்முறை இல்லாத படம். ஆனாலும் சக்தி வாய்ந்த படம்.வன்முறை இல்லாத முறையில் தானே நாம் சுதந்திரமே வாங்கினோம்?காந்தியடிகளின் அஹிம்சைதானே வெள்ளையனை விரட்டி அடித்தது.

ஒரு காலத்தில் வில்லன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று தெரியும். அவன் கற்பழிப்பான், கொலை செய்வான், 10 பேரை வெட்டுவான்.அப்படித்தான் இருந்தது. இப்போது அதையெல்லாம்  கதாநாயகர்கள் செய்கிறார்கள். யார் வில்லன் யார் கதாநாயகன் என்று தெரிவதில்லை.படம் பார்க்கும் இளைஞர்களை நாம் எப்படிக் கொண்டு போக வேண்டும்?

அம்மாவைப் பிள்ளை வெட்டுகிறான்.மாமியார் மருமகளும் சேர்ந்து கொண்டு பிள்ளையைக் கொல்கிறார்கள். அப்பாவைக் கொல்கிறார்கள்.சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை .அதை  நாம் சரியாகச் செய்தால் இந்த  சமுதாயத்தைத் திருத்த முடியும்.
இயக்குநர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அந்த பொறுப்புணர்வும் கடமையுணர்வும் சமூக உணர்வும் வேண்டும்.

நான் பத்து ஆண்டு காலமாகச் சில படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு திருப்திகரமாக அமைந்த படம் இது. நான் அனுபவித்துச் செய்து இருக்கிறேன்.
 இரண்டு மணி நேரம் அழகாக அமர்ந்து பார்க்க வைக்கும் படியான படம்.
மூன்று மணி நேரப் படமாக உருவானது அதை எடிட்டர் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஆக்கினார். லெனின் சார் படத்தைப் பார்த்தார் அதில்  பத்து காட்சிகளைத் தூக்கிவிட்டு இருபது நிமிடங்களைக் குறைத்து விட்டார். படம் இரண்டு மணி நேரம் தான்.அவ்வளவு நேர்த்தியாக உள்ளது.
ஒரு குடும்பம் மாதிரி இந்த படத்தை எடுத்திருக்கிறோம்.
இதில் நடித்திருக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் அந்த பைரவா நாய்தான் .நாங்கள் எல்லாரும் உதிரிப்பூக்கள்தான், துணை நடிகர்கள்தான். இதில் நடித்திருக்கும் நான் உள்பட அனைவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும்  ."இவ்வாறு இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசினார்.

விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.


FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal*

*FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal* FICCI FLO Chennai, the women’s wing of the Feder...