*“அறிவு திருக்கோயில் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது” ; ‘ஆனந்த வாழ்க்கை’ பட விழாவில் தமிழக செய்தித்த்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் பேச்சு*
*“மனவளக்கலை பயிற்சி சிறப்பாக வாழும் முறைய சொல்லித் தருகிறது” ; ‘ஆனந்த வாழ்க்கை’ பட விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ்*
*“மன அழுத்தத்தில் இருந்து என்னை மீட்டது மனவளக்கலை பயிற்சி தான்” ; ‘ஆனந்த வாழ்க்கை’ பட விழாவில் மனம் திறந்த இயக்குனர் எழில்*
*“வேதாத்திரி மகரிஷியை என்று கைப்பிடித்தேனோ அப்போது முதல் என் வாழ்க்கையில் துன்பம் போய்விட்டது” ; ‘ஆனந்த வாழ்க்கை’ பட விழாவில் இயக்குநர் கதிர் பளிச் பேச்சு*
*“இன்று நான் ஆனந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” ; ‘ஆனந்த வாழ்க்கை’ பட விழாவில் மகிழ்ச்சி ரகசியம் பகிர்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்*
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஆசியோடு, பத்மஸ்ரீ. திரு. SKM.மயிலானந்தம் வழிகாட்டுதலின்படி ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம் தயாரித்திருக்கும் படம் ‘ஆனந்த வாழ்க்கை’..
இத்திரைப்படத்தில், கே..பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடி கண்ணன், பிரியா, மாஸ்டர் ராமானுஜம் ஆகியோருடன் ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அன்பர்களும் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தை ஆர்.சுப்ரமணிய பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். இவர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், பெங்களூரு இன்னோவேடிவ் பிலிம் அகாடமியும் (INNOVATIVE FILM ACADEMY) இணைந்து நடத்திய தேசிய அளவிலான குறும்பட போட்டியில் "பாஞ்சாலி" என்ற குறும் படத்திற்காக முதல் பரிசு வென்றவர். இவர் தற்பொழுது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
கேங்கர்ஸ் மற்றும் பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்த சத்யா.C . இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை ஆழியாறு அருள்நிதி.CEO.திரு.P. முருகானந்தம் கவனிக்கிறார்.
ஊரில் உள்ளவர்களின் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் எளிதாக தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ள ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ் தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாமல் தவிக்கிறார் .
அப்போது தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆழியார் அறிவு திருக்கோயில் பற்றி கேள்விப்பட்டு தன் குடும்பத்தினரை அங்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மகரிஷி அவர்கள் உருவாக்கிய மனவளக்கலை என்ற எளிய முறை யோகப் பயிற்சிகளை கற்று, அதன் மூலம் எது உண்மையான ஆனந்த வாழ்க்கை என்ற சூட்சமத்தை உணர்ந்து அனைவரும் மகிழ்ச்சியான, மன அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இதுவே இந்த திரைப்படத்தின் கதை.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாண்புமிகு தமிழக செய்தித் துறை அமைச்சர் மு,பெ.சாமிநாதன், உலக சேவா சமுதாய சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்கேஎம் மயிலானந்தம், துணைத் தலைவர்கள் சின்னசாமி, கே.ஆர் நாகராஜன், இயக்குனர்கள் எஸ்.பி முத்துராமன், கே பாக்யராஜ், சமுத்திரக்கனி, கதிர், எழில் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில்,
*மாண்புமிகு தமிழக செய்தித்த்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் பேசும்போது,*
“வணிக ரீதியில் இல்லாமல் சமூகத்திற்கான ஒரு படைப்பாக இந்த ‘ஆனந்த வாழ்க்கை’ படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இது ஒரு நல்ல முயற்சி. எதிர்காலத்திலே உலகம் அமைதியாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் மனிதனும் நலமோடு வாழ வேண்டும் என்கிற நோக்கத்திலே இந்த படம் முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களுக்கு முன் நான் அமைச்சராக இருந்த பொழுது ஒரு முறை அணைகளை ஆய்வு செய்வதற்காக நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனுடன் சென்றபோது அறிவு திருக்கோயிலில் தங்கும் சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் முதன்முறையாக அங்கே சென்றேன். வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு அது. அப்போது வேதாத்திரி மகரிஷி முக்தி அடைந்திருந்த சூழ்நிலை. அந்த நிலையில் அதிகாலையில் அங்கே வேதாந்தர மகரிஷிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சிறிய யோகா பயிற்சி ஒன்றை செய்த போது எனக்கு சுகர் இருப்பதாக கண்டுபிடித்துக் கூறி சிகிச்சை எடுக்க வலியுறுத்தினார் உலக சேவா சமுதாய சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்கேஎம் மயிலானந்தம்.
அந்த சமயத்தில் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நீண்ட தூர பயணங்கள் நான் மேற்கொண்டு வந்ததால் இப்படி களைப்பு ஏற்பட்டதால் வந்த உடல் சோர்வு என்றுதான் நினைத்தேன்.. ஆனால் அதன்பிறகு தான் அது நீரிழிவு நோய் என தெரிய வந்தது. சென்னை வந்து பரிசோதித்த போது அது அதிக அளவில் இருந்தது. அதன்பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அன்று அவர் சொன்னதை நான் கவனிக்கவில்லை என்றால் அது வேறு விதமாக கூட மாறி இருக்கலாம். அந்த வகையில் அறிவு திருக்கோயில் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
திரைப்படங்கள், நாடகங்கள் மூலமாக மக்களுக்கு நல்ல விஷயங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் அன்று திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதினார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் மூலமாக தன் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார். அந்த வகையில் இந்த படம் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் செல்ல வேண்டும். மற்ற மொழிகளிலும் கூட இந்த படத்தை மொழிபெயர்த்து வெளியிட வேண்டிய சூழல் ஏற்படும் என்று நிச்சயமாக நான் கூறுகிறேன். கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் கூட இந்த படம் செல்லும் என நம்புகிறேன்” என்று கூறினார்
*இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது,*
“சொர்க்கம், நரகம் இரண்டும் இங்கே நம்மிடையே தான் இருக்கிறது. இரண்டிற்கும் வாசல் ஒன்றுதான். அது நம் வாய்தான். அதிலிருந்து வரும் வார்த்தைகளைப் பொறுத்துதான் சொர்க்கம், நரகம் இருக்கிறது. அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் மனவளக்கலை பயிற்சி என்பது அடுத்தவர்களுக்கு, உதவி செய்து வாழாவிட்டாலும் கூட தனக்கான வாழ்க்கையை சிறப்பாக வாழும் முறைய சொல்லித் தருகிறது. மனவளக்கலையை கற்றுக் கொண்டால் நம் உடல் சுத்தமாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்கும். நாம் சீராகி விட்டாலே நம்மை சுற்றி இருப்பவர்களையும் சீர்படுத்த முடியும்.
இந்த படத்தில் நடிக்க இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோது, முதலில் மனவளக்கலை பற்றி நன்கு தெரிந்து கொண்டு, பிறகு நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று கூறினேன். அதன் பிறகு இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எனக்கும் என் மனைவி பூர்ணிமாவிற்கும் சில நாட்கள் இதற்கான பயிற்சியை அளித்தனர். அதை ஓரளவாவது கற்றுக் கொண்ட பின் தான் இந்த படத்தில் நடித்தேன். இந்தப்படத்தின் மூலம் ஐயா வேதாத்திரி மகரிஷி அவர்களின் அன்பர்களே சினிமாவிற்கு வந்து எங்களை போல நடிகர்களாகி விட்டார்கள் என்பதே எங்களுக்கு சந்தோஷம் தான்.
இதன் பயன் எல்லா இடத்திற்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான் இந்த படத்தை அவர்கள் எடுத்ததன் நோக்கமாக இருந்தது. இந்த படத்தைப் பார்த்துவிட்டு ஒரு கிராமத்தை தத்து எடு’க்கிறார்களோ இல்லையோ, தங்களை சுற்றி உள்ளவர்களில் ஒரு சிலரையாவது ஒருவருக்கொருவர் கவனித்துக் கொண்டால் அதுவே ஒரு நல்ல மாற்றம் தான். இந்த படம் பார்க்கும்போது அந்த உணர்வு நிச்சயம் ஏற்படும். உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, அனைத்து மனிதர்களும் இந்த படத்தை பார்த்தார்கள் என்றால் அவர்களுக்கு பயன் கிடைக்கும். இந்த வகையில் இந்த மனவளக்கலை பயிற்சியின் நன்மைகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்” என்று கூறினார்.
*இயக்குநர் எழில் பேசும்போது,*
“எனக்கும் ஆழியாறு மனவளக்கலை பயிற்சிக்கு சென்று வந்த பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. இயக்குநர் இந்த படத்தில் சொந்த வந்த விஷயத்தை அடித்தட்டு மக்கள் வரை சென்று சேரும் விதமாக மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். 2011 காலகட்டத்தில் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருந்தேன். மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் எதை எதையோ யோசித்துக் கொண்டிருக்கும். அப்போது ஒரு நாள் ரங்கதுரை சுவாமியை சந்தித்தபோது இது பற்றி கூறினேன்.. அவர் என்னை அடையாறில் உள்ள மனவளக்கலை மன்றத்திற்கு அழைத்துச் சென்று ஒரு வார பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டார். அங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோரும் வந்திருந்தனர். இந்த ஒரு வார பயிற்சி வகுப்பில் எனக்கு மன அமைதி கிடைக்க ஆரம்பித்தது. அப்போதிருந்து மெடிடேசனை தொடர்ந்து செய்து வருகிறேன். சில நேரங்களில் நம்மை அறியாமல் ஏற்படும் சிறு கோபம் கூட நமது வளர்ச்சி, குணாதிசயங்களை கெடுத்து விடும். அதை இந்த பயிற்சி கட்டுப்படுத்துகிறது. அப்படி 2011ல் இந்த மனவளக்கலை மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் 2012ல் மனங்கொத்தி பறவை படத்தை துவக்கினேன். என்னுடைய வளர்ச்சிக்கு அது ரொம்பவே உதவிகரமாக இருந்தது. இது ஒரு அற்புதமான விஷயம். எல்லோருக்கும் சென்று சேர வேண்டும்” என்று கூறினார்.
*இயக்குநர் கதிர் பேசும்போது,*
வேதாத்திரி மகரிஷி சொல்லிய முக்கியமான ஒன்று வாழ்க்கையில் நன்றி உணர்வு என்பது வேண்டும். அந்த வகையில் இங்கே அமர்ந்திருக்கும் இயக்குநர் பாக்கியராஜ் எனது திரையுலக பயணத்தில் அடித்தளம் போட்டு கொடுத்தவர். எனது மானசீக குரு. அவருக்கு என் நன்றி. கவிஞர் வாலி என்னிடம் சொல்வார் நான் எப்போது எம்.எஸ் விஸ்வநாதனை சந்தித்தேனோ அப்போதே என் வாழ்க்கையில் வறுமை காணாமல் போனது என்பார். அதேபோல நான் வேதாத்திரி மகரிஷியை என்று கைப்பிடித்தேனோ அப்போது முதல் என் வாழ்க்கையில் துன்பம் போய்விட்டது.
நல்ல படங்களை இயக்கி பணமும் புகழும் சம்பாதித்தாலும் ஒரு கட்டத்தில், படங்களை தயாரித்து வெளியிட்டு நஷ்டத்தை சந்தித்தேன். அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகள் தானாகவே தேடி வந்தது. அந்த சமயத்தில் நடிகர் ராஜேஷை சந்திக்க சென்ற சமயத்தில்தான் வேதாத்திரி மகரிஷியின் மனவள கலை பயிற்சி பற்றி தெரியவந்தது. அதன் பிறகு முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். என் மனைவிக்கும் அதை கற்றுக் கொடுத்தேன். சமீபத்தில் தான் ஆழியாறு சென்று பிரம்ம ஞானம் கற்று முடித்தேன். முன்பு எல்லாம் துன்பம் என்றால் அதை எதிர் கொள்ள முடியாமல் தவித்தேன். இப்போது துன்பம் என்றாலே வேதாத்திரி மகரிஷியின் முகம் நினைவில் வந்து விடுகிறது. அது ஒரு எண்ணம் தானே என தெளிவாக கடந்து செல்ல முடிகிறது. உன்னை அறியாத வரை உண்மையான சந்தோசத்தை உன்னால் உணர முடியாது, உண்மையான சந்தோசம் என்ன என்பது நீ யார் என்பதை தெரிந்து கொள்வது தான் என வேதாத்திரி மகரிஷி கூறியதை நான் உணர்ந்து கொண்டேன். இந்த எண்ணம் தான் ஒருவனுடைய வாழ்க்கையை சீரமைக்கும் என்று மனவளக்கலையை ஒரு படிப்பு பயிற்சியாக கொடுத்து சமுதாயத்திற்கு அவர் கொடுத்திருக்கிற சேவையை, வெகு மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக இப்படி ஒரு அற்புதமான படத்தை சுப்பிரமணிய பாரதி இயக்கியுள்ளார்” என்று கூறினார்.
*இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது,*
“இந்த மாதிரி ஒரு படத்திற்குள் இருப்பதற்கு ஏதோ ஒரு அருள் கிடைக்க வேண்டும். இந்த படத்தில் நடித்து இருப்பவர்களுக்கு அது கிடைத்திருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் பொள்ளாச்சி படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென ஒரு நாள் ஆழியாறுக்கு வர சொன்னார்கள். அப்போது மகரிஷி அய்யாவின் வாழ்க்கையை படமாக பண்ண வேண்டும் என சொன்னார்கள். அவருடைய வாழ்க்கை வரலாற்றை முழுவதும் படிக்க வேண்டும் என்று சொல்லி படித்தேன். மிக பிரமிப்பாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அதை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. அனேகமாக அதையும் சுப்பிரமணிய பாரதி தான் இயக்குவார் என நினைக்கிறேன்.
பொதுவாக நான் ஒரே சமயத்தில் நான்கைந்து வேலைகளை பார்ப்பேன்.. எல்லாமே சரியாக நடக்கும். ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே போல அப்படி பார்க்கும் போது எல்லாமே தப்பு தப்பாக நடந்தது. ஒரே குழப்பமாக இருந்தது. அப்போதுதான் எடிட்டர் லெனினை சந்தித்தபோது அவர்தான் இந்த மனவளக்கலை வகுப்பில் சேர்த்துவிட்டார். ஏழு நாள் பயிற்சியில் அவரும் என்னுடன் இருந்தார். அதன் பிறகு பிரச்சனைகள் நீங்கி பழையபடி மாறினேன். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்புகள் வந்த போது கூட வேறு எங்கோ இருந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் என்னை இங்கே அழைத்து வந்துவிட்டது.
இந்த மணவளக்கலை பற்றி எல்லோரிடமும் கொண்டு செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். நாம் கொண்டு செல்ல தேவையில்லை. அதுவே தானாக எல்லாவற்றையும் இழுத்துக்கொள்ளும். அதற்கு தகுதியானவர்கள் தானாக வந்து சேர்ந்து விடுவார்கள். அவ்வளவு பெரிய சக்தி அது. நாமாக எல்லாம் தூக்கிக்கொண்டு நடக்க முடியாது. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து ஒரு விஷயம் செய்திருக்கிறோம். இந்த சமுதாயத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் இது ஒரு அருட்கொடையாக இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன். நீ நல்லது செய்ய வேண்டாம், நல்லது செய்ய வேண்டும் என நினை அது போதும் அதுவே நம்மை சரியாக்கும் என்று என் குருநாதர் சொல்வார். காசு, பணம் யாரையும் காப்பாற்றாது. இது போன்ற ஒரு சக்தி தான் காப்பாற்றும். இதை இறுக்கி பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
*இயக்குநர் எஸ்.பி முத்துராமன் பேசும்போது,*
“நான் 30 வருடங்களுக்கு வேதாத்திரி மகரிஷி அய்யாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, நான் அனுமிஷம் என்கிற நாடகத்தை எழுதி இருக்கிறேன் இதை நாடகமாக நடத்த முடியுமா என்று கேட்டார். சென்னைக்கு வந்து நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் நாடகக் குழுவுடன் இணைந்து மகரிஷி ஐயாவின் பிறந்த நாள் அன்று ஆழியாறிலே அவர் முன்னாலேயே அதை நாடகமாக நடத்தினோம்.. என்னுடைய பிறந்தநாளின் பெரும்பகுதி நான் ஆழியாறில் தான் இருப்பேன்.. அப்படி இல்லை என்றால் திருவொற்றியூரில் இருப்பேன்.
ஒருமுறை என்னை அப்படி ரஜினிகாந்த் தேடி சந்திக்க வந்து விட்டார். அப்போது அவர் என்னிடம் பேசும்போது இங்கே ஒரு அலை வீசுகிறது. நான் இங்கு உங்களை பார்க்க வந்தேன். ஆனால் அவரை (வேதாத்திரி மகரிஷி) பார்த்தபோது என் மனதில் உள்ள குழப்பம் எல்லாம் நீங்கியது என்று சொன்னார். அவரை ஆழியாறுக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவர் மனைவி லதா வந்து விட்டார். தானும் வருவதாக ரஜினிகாந்த் உறுதி அளித்திருக்கிறார். நிச்சயமாக அவரையும் ஒரு நாளைக்கு அங்கே அழைத்து வருவேன்.
பாக்யராஜை பொருத்தவரை காமெடியாக நடிப்பார். ஆனால் இந்த படத்தில் அய்யாவின் மறு உருவமாக தத்துவத்தை பேசியிருக்கிறார். நான் வேதாந்த மகரிஷிஅய்யாவை பற்றி சினிமா எடுக்க ஆசைப்பட்டேன். சிவாஜியை வைத்து மூன்று படம், உலகநாயகன் கமலை வைத்து 10 படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து 25 படங்களை இயக்கி இருக்கிறேன். மகரிஷி அய்யாவை பற்றி படம் இயக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் இந்த சுப்பிரமணிய பாரதி ஜெயித்து விட்டார்.. வேறு யார் மீதும் நான் பொறாமைப்பட மாட்டேன். ஆனால் இப்போது இவர் மீது பொறாமைப்படுகிறேன்.
இந்த படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இன்று நான் ஆனந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..உடற்பயிற்சி, உணவு பயிற்சி, மனவளக்கலை பயிற்,சி தியானம் இந்த நான்கையும் செய்தால் அய்யா சொன்ன அத்தனையும் உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும். சினிமா என்கிற என் லட்சிய கனவு நிறைவேறியது. ஆனால் குடும்பம் என்கிற என் வாழ்க்கை கனவு சரியாக நிறைவேறவில்லை. மனைவி, குழந்தைகளை சரியாக கவனித்ததில்லை. ஆனால் என் மனைவி, என் குடும்பத்தை அழகாக கவனித்துக் கொண்டார். அய்யாவின் அமைப்பில் தான் மனைவிக்கு நன்றி சொல்வதற்கான ஒரு விழா நடத்துவதை பார்க்க முடியும். நானும் அதில் கலந்து கொண்டிருக்கிறேன்.
பாண்டியன் படப்பிடிப்பில் இருந்தபோது என் மனைவி மாரடைப்பால் இறந்து விட்டார் என தகவல் வந்தது. அவர் தானாக இறக்கவில்லை. என்னுடைய வேலைப்பளுவையும் அவர் மீது சுமத்தி நான்தான் அவரை சென்று விட்டேனோ என்கிற குற்ற உணர்ச்சி மனதில் இருந்தது. அந்த சமயத்தில் தான் என் பிள்ளைகள் பொள்ளாச்சி ஆழியாறு பகுதிக்கு சென்று வாருங்கள், மன அமைதி கிடைக்கும் என்றார்கள். அப்போதுதான் அங்கே அறிவு திருக்கோயிலை பார்க்கும் வாய்ப்பு வேதாத்திரி மகரிஷி பற்றி கேள்விப்படும் வாய்ப்பு கிடைத்தது. மகரிஷி அய்யாவின் கையாலேயே பயிற்சி பெற்று பாடம் கற்று அவரே எனக்கு குருவாக அமைந்த பாக்கியமும் கிடைத்தது” என்று கூறினார்.
*இசையமைப்பாளர் சி சத்யா பேசும்போது,*
2009ல் தான் நான் மனவளக்கலை பயிற்சி வகுப்புக்கு சென்றேன். அதற்கு முன்னதாக நிறைய மன போராட்டங்கள் இருந்தது. அப்போது சீரியல்களில் இசையமைத்துக் கொண்டிருந்தேன். சில படங்களுக்கு ஒப்பந்தம் ஆனேன். ஆனால் எதுவுமே முன்னோக்கி நகராமல் நின்று விடும். பெரிய குழப்பமாக இருக்கும். அப்போது வடலூர் வள்ளலார் ஆசிரமத்திற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது ஒரு நண்பர் நீங்கள் அறிவு திருக்கோயில் சென்று வந்தால் உங்களுக்கு இருக்கும் குழப்பங்களுக்கெல்லாம் விடை கிடைக்கும், ஒரு தெளிவு கிடைக்கும் என்று கூறினார்..
அப்போது இசையமைப்பாளர் சிற்பியிடம் உதவியாளராக பணியாற்றி வந்தேன். அவரிடம் இது பற்றி சொல்லும்போது நாம் இருவருமே சென்று வரலாம் என்று கூற ஆழியாறு சென்று வந்தோம். பல்வேறு விதமாக பயிற்சிகள் கிடைத்தன. அந்த அனுபவங்களுடன் மெடிடேஷன், உடற்பயிற்சி எல்லாம் செய்யும்போது ஒரு தெளிவு கிடைத்தது. அந்த ஒரு மாதத்திலேயே என்னும் பெரிய அளவில் மாற்றம் தெரிந்தது. அதன் பிறகு தெளிவு கிடைத்தது. அப்படி தெளிவான நிலையில் இருக்கும்போது எனக்கு தானாகவே வாய்ப்புகள் தேடி வந்தது. அதன் பிறகு தான் எனக்கு எங்கேயும் எப்போதும் என்கிற படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது என்னுடைய நட்பில் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என அவர்களையும் கூட அங்கே அழைத்துச் சென்றேன். வேதாத்திரி மகரிஷி ஐயாவை பற்றி நிறைய பாடல்கள் பண்ணியிருக்கிறேன். அதெல்லாம் எனக்கு மிகப்பெரிய பாக்கியம். ஆனால் அவருடைய கொள்கைகள் ஒரு படமாக, என்னுடைய இசையில் வருகிறது என்பதை இன்னும் மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்” என்று கூறினார்.
*நடிகர் ஜீவா தங்கவேலு பேசும்போது,*
“2003ல் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியிடம் நேரடியாக பிரம்மஞானம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்படி ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதை இப்போதுதான் முதல் தடவையாக ஒரு மேடையில் சொல்கிறேன். அதற்கான சரியான மேடை இதுதான் என்று நினைக்கிறேன். திரையுலகில் இருக்கும் பல மேதைகளும் இதை பின்பற்றுகிறார்கள் என்பதை இந்த மேடையில் பார்க்கும் போது தான் தெரிகிறது. ஆனால் யாருமே இதை பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு விஷயம் லேட்டாக மக்களிடம் சென்று சேருகிறது என்றால் அதில் உண்மை இருக்கிறது என்று அர்த்தம்.
இந்த படத்தில் சொல்லி இருக்கும் விஷயங்களை போல எப்படி வேதாத்திரி மகரிஷியை, அவரது கொள்கைகளை பின்பற்ற ஆரம்பித்தோம் என்றும் தங்களது வாழ்க்கை மாறியது என்பதையும் எல்லோரும் தங்களது அனுபவங்களாக கூறினார்கள். எனக்குள்ளே இந்த தியானம் பண்ண வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். பாபா படம் ரிலீஸ் ஆன சமயம் அவர் பாபாவை தேடி செல்வார். இந்த சமயத்தில் தான் நானும் தியானத்தை விரும்ப ஆரம்பித்தேன். இந்த சமயத்தில் தான் எதேச்சையாக என்னை தேடி வந்த பெரியவர் ஒருவர், ஆவடியில் இருந்த அறிவு திருக்கோயிலில் அழைத்துச் சென்று சேர்த்து விட்டார் அதன் பிறகு ஒரு வருட காலத்தில் பிரம்மஞானம் பெற்று விட்டேன். ஆனால் என்னை சேர்த்து விட்ட அந்த பெரியவரை அதற்கு பின் நான் பார்க்கவே இல்லை. எல்லோரும் ஒருமுறை ஆழியாறு சென்று அந்த மணவளக்கலை பயிற்சியை எடுத்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும்” என்று கூறினார்.
*இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,*
“இந்த படத்தின் இயக்குநர் சுப்பிரமணிய பாரதி என்னுடைய ஆருயிர் தம்பி. அவர் இயக்கிய குறும்படத்தை எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்தான் தயாரித்தது. விருது கொடுத்தது. அவருக்கு இப்படி ஒரு படத்தை இயக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. நான் எடுத்த 17 படங்களில் 13 படங்கள் ஆழியாறு பகுதியில் தான் எடுத்திருக்கிறேன். அந்த மனவளக்கலை கட்டிடத்தையும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட உள்ளே சென்றது இல்லை. ஆனாலும் அந்த கட்டிடத்தை பார்த்ததாலேயே என்றும் ஒழுக்கமான ஒரு மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆசிரமத்தில் எல்லாவித அணுக்கிரகங்களும் அங்கே போகாமலேயே என்னை வந்து அடைந்ததாக கருதுகிறேன். ஒழுக்கமானவனாய் இருப்பதே ஒரு தியானம் தான். அது ரொம்ப சிரமம். ஒரு வழிகாட்டுதல் இருந்தால் கொஞ்சம் சுலபம்.
சினிமாவில் இயக்குநர்கள் மட்டும்தான் நரம்புகளிலும் வேலை செய்பவர்கள். அதில் ஒரு பிரச்சனை வரும் போது தான் தாங்கள் என்னென்ன விஷயங்களை செய்ய தவறி இருக்கிறோம் என்ன தெரிய வரும். இந்த பிரச்சனைகளுக்கு வேதாத்திரி மகரிஷி ஐயாவிடம் வழி இருக்கிறது. எஸ்பி முத்துராமன் சாருக்கு இதுபோன்று பிரச்சனை வந்த பிறகுதான் அவரே அங்கே சென்று இருக்கிறார். பள்ளிக்கூடத்தில் இருந்து இதுபோன்ற பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும்.. என்னை போன்றவர்களுக்கே இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பது நீண்ட நாள் கழித்துதான் தெரிகிறது. ஆனால் பள்ளி பருவத்தில் இருந்தே இதுபோன்ற ஒரு மனவளக்கலை பயிற்சியை கொடுத்தால் மாணவ பருவத்தில் இருந்தே அவர்கள் நல்ல குணாதிசயங்களுடன் வளருவார்கள் இல்லையா ? இதற்காக விளம்பரம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.
இப்படிப்பட்ட அனுபவத்தை சென்று அனுபவித்தவர்கள் பெரிதாக வெளியே அதை சொல்ல மாட்டேன் என்கிறார்கள். பரப்ப மாட்டேன் என்கிறார்கள். நமக்கு கிடைத்த இந்த பாக்கியம் நம்மோடு இருக்கட்டும் என்று நினைத்து விடக்கூடாது. அதை சொல்வதற்கு கூட சில கூச்சப்படுவார்கள். சொன்னால் அதை சரியாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் கூட பல மனிதர்களிடம் இல்லை என்பதும் உண்மை தான். இயக்குநர்கள் எழில், கதிர் போன்றவர்கள் கூட இந்த விஷயத்தை என்னிடம் சொல்லவில்லையே. என்னிடம் சொல்லி இருந்தால் இயக்குநர் சங்கத்தில் ஒரு மீட்டிங் போட்டு அனைவரிடமும் இது பற்றி சொல்லி இருப்பேன். அந்த வகையில் இந்த படத்தை இயக்குனர் சங்கத்திற்கே ஒரு முறை திரையிட்டு காட்டி விட்டால் மிக சரியாக இருக்கும்” என்று கூறினார்.
*உலக சேவா சமுதாய சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்.கே.எம் மயிலானந்தம் பேசும்போது,*
“இந்த படத்தை கதை வசனம் எழுதி இயக்கி உள்ள சுப்பிரமணிய பாரதி நன்கு பயிற்சி எடுத்தவர். அதனால் இந்த படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் சத்யாவும் ‘உலக நல வாழ்க்கை’யில் இருந்து எல்லா பாடல்களையும் அவர்தான் பண்ணி இருக்கிறார். நடிகர் பாக்யராஜ் உள்ளிட்ட கலைஞர்களும் மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சுவாமிஜியின் மறைவிற்குப் பிறகு சுமார் 300 மடங்கிற்கு மேல் நம் சங்கம் வளர்ந்திருக்கிறது. எங்களது கணக்குப்படி சுவாமிஜியின் மறைவுக்கு பிறகு 49 லட்சம் பேருக்கு இன்று தியானத்தை கற்றுக் கொடுத்திருக்கிறோம். எங்களது சிஇஓ முருகானந்தம் தலைமையில் இதுவரை 350 கிராமங்களை தத்தெடுத்து லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவசமாக இந்த பயிற்சியை கொடுத்து இருக்கிறோம். இந்த நிலையில் இந்த சினிமாவை கிராமத்தில் திரையிட்டால் இன்னும் நல்ல வளர்ச்சி கிடைக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த முயற்சியை எடுத்திருக்கிறோம். தமிழகமெங்கும் உள்ள கிராமங்கள், பட்டிதொட்டி எங்கிலும் இந்த சினிமா வெளியிடப்படும். அதற்கான திட்டம் தீட்டி கொண்டிருக்கிறோம்.
இந்த மனவளக்கலை பயிற்சியை மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல 17 மண்டலங்களாக பிரித்து அலுவலகங்களை நிர்மாணித்து செயல்பட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த திரைப்படமும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதுகிறேன். மக்களுடைய மனம் பண்பட்டால் குடும்பத்தில் அமைதி, அன்பு ஏற்படும். மனதிலே உயர்ந்த பண்புகளைக் கொண்டு வருவது என்பது வாழ்நாள் பயிற்சி. கெட்டவனாக இருந்தாலும் கூட அவனைக் கெட்ட விதமாக பேசுவது பாவம். இந்த மாதிரி நற்பண்புகளை அடைய குழந்தைகளிலிருந்து பயிற்சி கொடுக்க வேண்டும். தமிழக அரசின் அனுமதி பெற்று இதுவரை 10 லட்சம் குழந்தைகளுக்கு இலவசமாக இந்த பயிற்சியை கொடுத்திருக்கிறோம். அறிவில் சிறந்த குழந்தைகளோடு பண்புள்ள குழந்தைகளையும் நாம் உருவாக்க முடியும். அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறினார்.