Tuesday, July 15, 2025

பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் - ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் - ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

எனது அடுத்தடுத்த படங்களில் விஜயின் ரெபரன்ஸ் இருக்கும் - ‘யாதும் அறியான் பட விழாவில் இயக்குநர் கோபி அறிவிப்பு

அரசியலும், கலையும் இல்லாமல் மனிதர்களின் வாழ்க்கை முழுமை அடையாது - ‘யாதும் அறியான்’ நிகழ்ச்சியில் செளந்தரராஜன் பேச்சு

உச்சத்திற்கு செல்லவில்லை என்றாலும் நல்ல நடிகராக பயணிப்பேன் - ‘யாதும் அறியான்’ பட நாயகன் தினேஷ் பேச்சு

அனைவரும் தளபதி விஜயின் ஆட்கள் தான் - ’யாதும் அறியான்’ பட நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேச்சு

‘யாதும் அறியான்’ திரைப்படத்தின் வெளியீட்டு முந்தைய நிகழ்ச்சி!


பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார்.  இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி ஜூலை 14 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், நடிகர் செளந்தரராஜன், படத்தொகுப்பாளர் பத்திரிகையாளர் டி.எஸ்.சுபாஷ், நடிகர் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு, நடிகர் சம்பத் ராம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் நடிகர் ஆனந்த் பாண்டி பேசுகையில், ”அனைவருக்கும் வணக்கம், கலக்கப்போவது யாரு, டான்ஸ் ஜோடி, ’பாவம் கணேசா’, ‘ராஜா ராணி’ சீரியல்கள் ஆகியவற்றில் நான் பணியாற்றியிருக்கிறேன்.  சாருஹாசன் சார் நடித்த ‘தாதா 87’ என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்போது ‘யாதும் அறியான்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஒரே ஒரு போன் கால் தான், இப்படி ஒரு படம் இருக்கு பண்றீங்களா? என்று கேட்டார். அண்ணே இப்படி கேட்கிறீங்களே நீங்க பண்ண சொன்ன பண்ண போறேன், என்று சென்று விட்டேன். நல்ல கதாபாத்திரம் எனக்கு கொடுத்திருக்கிறார். இந்த படத்தை நாம தான் புரோமோட் பண்ணனும் என்று சில வரிககளை எழுதியிருக்கிறேன், அதை இங்கே சொல்ல நினைக்கிறேன், “கரண்டுக்கு தேவை ஒயரு, லாரியா ஓட்ட வேண்டும் டயரு, யாதும் அறியான் படம்னாலே ஃபயரு..”, “பரீட்சை எழுதுனா போடுவாங்க பாஸ், யாதும் அறியான் படம் எப்பவுமே மாஸ்”, படம் நிச்சயம் கலக்கலாக இருக்கும். பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தாலும், 2016 ஆம் ஆண்டு தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது, அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் அண்ணன் தான். அவரோட வாய்ஸ் பேச ஆரம்பித்ததும் நான் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டேன், அதன் பிறகு தான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வர தொடங்கியது. இந்த படத்தையும், படக்குழுவையும் சிவகார்த்திகேயன் அண்ணா வாழ்த்தியிருக்கிறார். படம் சூப்பரா வந்திருக்கிறது. விஜய் சாரை வைத்து எங்க இயக்குநர் சூப்பரா ஒரு விசயம் பண்ணியிருக்காரு. அதுவும் இப்போது வைரலாக போய்ட்டு இருக்கு, படம் நிச்சயம் பெரிய அளவில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாங்கள் வாய்ப்பு தேடும் போது பூந்தமல்லியில் இருந்து சாலிகிராமம் வருவோம், தூரமாக இருப்பதால் சாலிகிராமத்தில் ரூம் எடுத்து தங்கி விடலாம் என்று நண்பர்கள் சொல்வார்கள். ஆனால், இப்போது சாலிகிராமத்தில் இருப்பவர்களை விட இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு தான் வாய்ப்பு தருகிறார்கள். சாலிகிராமத்தில் நிறைய பேர் வாய்ப்பு தேடிக்கொண்டு கஷ்ட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நன்றி.” என்றார்.

ஒளிப்பதிவாளர் எல்.டி பேசுகையில், “எங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. எனக்கு அதிகம் பேச தெரியாது, இந்த படத்தில் பணியாற்றியது சந்தோஷம். ஒரு நல்ல படம் பண்ணனும் என்று வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது இயக்குநர் இந்த கதையை சொன்னார், படம் நன்றாக வந்திருக்கிறது என்று நம்புகிறோம். நீங்க தான் பார்த்துவிட்டு சொல்லனும், நன்றி வணக்கம்.” என்றார்.

இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் பேசுகையில், “யாதும் அறியான் சிறிய அளவில் தொடங்கி, பெரிய அளவில் முடிந்திருக்கிறது. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. மூன்று பாடல்கள் இருக்கிறது, மூன்று பாடல்களும் சிறப்பாக இருக்கிறது. நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கஸாலி பேசுகையில், “யாதும் அறியான் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும் போது அனைத்தையும் தெரிந்து பண்ணியிருக்கிறார்கள். விளம்பரத்தில் விஜய் முதல்வர் என்ற போஸ்டர் பெரிய வைரலாகியுள்ளது. இப்போது கூட நாயகன் தினேஷ், கொலை செய்துவிட்டு அப்படியே வருவது போல் கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார். படத்தின் பெயர் யாதும் அறியான், ஆனால் இயக்குநர் அனைத்தையும் அறிவான். ஒரு படத்தை எப்படி எடுக்கணும், எடுத்த படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டும், என்பதை மிக தெளிவாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நான் வர காரணம், திருநெல்வேலி தினமலர் நிர்வாக இயக்குநர் தினேஷ் தான். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், கால்கள் தரையில் இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் தினேஷ், அவரது எளிமையும், பன்பும், இந்த படத்தை வெற்றியடைய வைக்கும், அவரை உயரத்திற்கு கொண்டு போகும். படம் நிச்சயம் வெற்றி பெறும், இந்த குழு அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுப்பார்கள், என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

இயக்குநர் நடிகர் இ.வி.கணேஷ் பாபு பேசுகையில், “தினமலர் குடும்பத்தில் இருந்து அம்பி, ரெமோ வருவார் என்று எதிர்பார்த்தால் அந்நியனே வந்திருக்கிறார். இன்று சைவத்தை விட அசைவம் தான் டிரெண்டாகி விட்டது. அதனால், அசைவமாகவும், கமர்ஷியலமாகவும் ஒரு படம் கொடுப்போம், என்று திட்டமிட்டு தினேஷ் சார் ஒரு படம் நடித்திருக்கிறார். இன்றைய சூழ்நிலைக்கு எப்படிப்பட்ட படம் ஜெயிக்கமோ அப்படி ஒரு படத்தை தினேஷ் சார் கொடுத்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள். நேரில் சில மனிதர்களை பார்ப்போம், அப்போ ரொம்ப அமைதியானவர்களாக இருப்பார்கள், ஆனால் திரையில் அப்படியே எதிர்மறையாக அதிரடியாக இருப்பார்கள். நடிகர் விஜய் சாரும் அப்படி தான், அவருடன் நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவர் ரொம்பவே அமைதியாக இருப்பார், சத்தமாக பேச மாட்டார், ஆனால் திரையில் அசத்திவிடுவார். அப்படிப்பட்டவராக தான் நான் தினேஷ் சாரை பார்க்கிறேன். அவரும் அமைதியாக இருப்பார், ஆனால் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது நடிப்பில் அசத்திவிட்டார்.  இந்த படத்தை பற்றி பல விசயங்களை தினேஷ் சார் என்னிடம் பகிர்ந்துக் கொள்வார், என்னையும் மற்றவர்களுக்கு பகிர சொல்வார், அவர் அப்படி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை, காரணம் இது எங்களது கடமை அவங்களுக்கு நாங்கள் செய்ய வேண்டியது.

இயக்குநர் கோபி படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார், அவருக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம், விஜய் சார் அடுத்து படம் நடிப்பார், அதனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இந்த படத்தை அதிகமான திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார், அவரது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன். நடிகர் விஜயை வைத்து படம் பண்ணும் வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கும், அதற்கான ஆரம்பமாக தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவர் நிறைய புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் பிரபலமானவர்களை இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் அவர் அதை செய்யாமல் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார், புதியவர்கள் வெற்றி பெற்றால் வாய்ப்பு கொடுத்த நமக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆனால், இன்று புதுமுகங்கள் என்றால் சினிமா வியாபாரத்தில் தயக்கம் காட்டுகிறார்கள், அது மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகர் சம்பத் ராம் பேசுகையில், “இந்த படத்தின் ஹீரோ தினேஷ் சார், பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் போலவே தெரியவில்லை, மிக சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பஞ்சம் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே தினேஷ் சார் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடிப்பார், என்று நம்புகிறேன். இயக்குநர் கோபி சார் சிறப்பாக இயக்கியிருக்கிறார், டிரைலர் மிக சுவாரஸ்யமாகவும், படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும்படி இருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது, இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள்.  அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்புகுட்டிக்கு வாழ்த்துகள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுபாஷ் பேசுகையில், “இயக்குநர் கோபி, இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கைதட்டல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இங்கு நிறைய பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள், என்றால் அது தினேஷுக்காக தான். நம்முடைய பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் அனைவருடனும் எளிமையாக பழக கூடியவர். அவரது எளிமை அவரை பெரிய உயரத்திற்கு கொண்டு போகும். இயக்குநருக்கு இந்த நேரத்தில் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும், காரணம் அப்புக்குட்டி உள்ளிட்ட பலருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அவர் யாரை வேண்டுமானாலும் நடிக்க வைத்திருக்கலாம், ஆனால் அப்படி செய்யாமல் புதியவர்களுக்கும், வளர்ந்து வருபவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இன்று விஜய் சாரை பற்றி அனைவரும் பேசுகிறார்கள், ஆனால் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் என்பது செளந்தர்ராஜன் சொன்னது தான், அது விஜய் சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் நடிகராகவதற்கு முன்பாகவே சிறந்த சமூக செயல்பாட்டாளராக இருந்தார். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த படத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பத்திரிகையாளர் சகோதரர்கள், யார் யாரோ முன்னேற உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். நம்ம குடும்பத்தைச் சேர்ந்த தினேஷுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசுகையில், “ஒரு படத்தின் டிரைலர் அந்த படத்தின் தரத்தை நிர்ணயிக்கும், அதுபோல் இந்த படத்தின் டிரைலர் இந்த படம் ஒரு சிறப்பான படமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. பல படங்களின் டிரைலரை நாம் பார்க்கிறோம், ஆனால் யாதும் அறியான் டிரைலர் மிக சிறப்பாக இருக்கிறது. 2026 பற்றி இயக்குநர் ஒரு விசயம் சொல்லியிருக்கிறார், அது அவரது நம்பிக்கை. விஜய் மீது இயக்குநருக்கு இருக்கும் பற்றால் அப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார். எனக்கும் அவர் மீது பற்று இருக்கிறது, அவருடன் 45 படங்கள் செய்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பதற்காக தினேஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார், அப்போது அவர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. பிறகு டிரைலரை அனுப்ப சொல்லி பார்த்தேன், வியந்து விட்டேன். மிக சிறப்பாக நடித்திருக்கிறார். டிரைலரும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக பின்னணி இசை மிக சிறப்பு. இங்கு வந்ததும் இசையமைப்பாளர் யார்? என்று கேட்டு அவரை பாராட்டினேன். அதேபோல் டிரைலரை எடிட்டர் நிரஞ்சன் சிறப்பாக கட் செய்திருக்கிறார். டிரைலரை பார்க்கும் போது படம் பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது. இந்த குழு பெரிய வெற்றியடைய வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், இயக்குநர் கோபி விஜய் சாரின் ரசிகர். அவர் முடிவு செய்துவிட்டார், நிகழ்ச்சிக்கு வருபவர்கள் விஜய் சாருடன் எதாவது தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்று. என்னையும் அந்த தகுதியால் தான் அழைத்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் விஜயின் ஆட்கள். விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை, அவர் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார். இரண்டு வாழ்க்கை கொடுத்தார். அது என் வாழ்நாள் முழுவதும் பெருமையாக நினைக்கும் விசயம். படத்தின் நாயகன் தினேஷ் பத்திரிகை துறையில் இருக்கிறார். பல்வேறு துறைகளில் இருந்து சினிமாவுக்கு வருவார்கள், அவர்கள் ஒரு ஆர்வத்தில், ஆசையில் வருவார்கள். அப்படி தான் தினேஷ் சாரையும் நினைத்தேன், ஆனால் தினேஷ் சாரிடம் முழுமையான நடிகருக்கான தகுதி இருக்கிறது. அவரிடம் கலை வெறி இருக்கிறது, அதற்காக தான் இப்போதும் கொலை வெறியோடு உட்கார்ந்து இருக்கிறார். காதல் மன்னன் ஜெமினி கணேசன் சார் இருந்தார், அவருக்குப் பிறகு காதல் இளவரசன் கமல்ஹாசன் வந்தார். அதன் பிறகு யாரும் இல்லை, இந்த டிரைலரை பார்த்த போது, அதில் வந்த பெட்ரூம் காட்சியில் மனுஷன் பூந்து விளையாடியிருக்கிறார். எல்லாமே செய்துவிட்டு லவ் என்று சொல்லும் இடம் செமையாக இருந்தது. அந்த காட்சிக்காக தான் அவர் கதையை ஒத்துக்கொண்டு இருப்பார் போல. கொஞ்சம் மூட் அவுட் ஆனவுடன், செல்போனை பார்த்து மூடை ஏத்திக்கிறாரு, பாக்யராஜ் சார் முருங்கைக்காய் பற்றி சொன்னார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் புது யோசனையை சொல்லியிருக்கிறார். செல்போனை பார்த்து மூட் ஏத்துறது. அந்த ஒரு காட்சியில் தினேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார், இந்த படத்திற்கு அந்த ஒரு காட்சி போதும். ஹீரோயின் வராததற்கு காரணமும், தினேஷ் இன்னும் அந்த மூட்ல இருந்து மாறாம இருப்பாரோ என்று பயந்து இருப்பாங்க. ஆனால், காதல் காட்சி, செண்டிமெண்ட் என அனைத்து இடங்களிலும் தினேஷ் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு அவர் பத்திரிகையாளர் என்பதை ஓரமாக வைத்துவிட்டு முழுநேர நடிகராகி விட வேண்டும், அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. 

இயக்குநர் கோபி விஜய் ரசிகர், விஜயின் விசயத்தை எங்கயாவது பதிவு செய்ய வேண்டும் ஒரு ரசிகராக, அதனால் தான் 2026 என்ற கான்சப்ட்டை வைத்திருக்கிறார். அவரது கனவு, ஆசை, நம்பிக்கை, விஜய் மீது உள்ள பற்று என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம். நான் விஜய் சாரிடம் ஒரு உதவி இயக்குநராக கதை சொன்னேன், அவர் கதையை ஓகே சொன்னதும் நான் இயக்குநராகி விட்டேன். படப்பிடிப்பு தொடங்கி விட்டது, அப்போது நான் அவரது ரசிகராகி விட்டேன். அப்படி மாறினால் தான் ரசிகர்களுக்கு ஏற்ற படத்தை கொடுக்க முடியும். திருப்பாச்சி கதையில், ஓபனிங் பாடல், பில்டப் ஆகியவை எதுவும் இல்லை. அவரது ரசிகரான பிறகு தான், அவரை ரசித்து, அவரது ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக பல விசயங்களை சேர்த்தேன். ஒரு ஆக்‌ஷன் படம், ஒரு மாஸ் ஹீரோவை வைத்து பண்ணும் போது, அந்த ஹீரோவை இயக்குநர் நேசிக்க வேண்டும், அப்போது தான் அந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக வரும். அதேபோல் காதல் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்றால் அந்த ஹீரோயினை காதலிக்க வேண்டும், மனதளவில் பீல் பண்ணி ரசிக்க வேண்டும், அப்போது தான் நாம் அந்த காட்சியை எடுத்தால் ஆடியன்ஸ் ரசிப்பார்கள். இதுல கோபி இரண்டையும் செய்துவிட்டார். கதாநாயகியையும் லவ் பண்ணிட்டாரு, ஹீரோவையும் லவ் பண்ணிட்டாரு. இசை சிறப்பாக இருக்கிறது, மிரட்டியிருக்கிறார்கள். படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்தும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் கோபி மிகப்பெரிய இயக்குநராவதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது. தினேஷ் சார் பெரிய ஹீரோவாகி விடுவார். இயக்குநர் கோபி பெரிய ஹிட் படம் கொடுத்துவிட்டு, விஜய் கட்சியில் இணைந்து விட வேண்டும். செளந்தர்ராஜனும் விஜய் சார் கட்சியில் சீட் வாங்கி எம்.எல்.ஏ ஆகி, மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது பண்ண வேண்டும், நன்றி.” என்றார்.

நடிகர் செளந்தரராஜன் பேசுகையில், “மண்ணுக்கும், மக்களுக்கும் வணக்கம். எனக்கு இந்த படத்தை பற்றி எதுவும் தெரியாது. பிறகு இந்த படத்தின் ஹீரோ எனக்கு போன் பண்ணார். ஒரு வருடத்திற்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் நிகழ்ச்சியில் தினேஷும் வந்திருந்தார். அங்கே அவர் எனக்கு அறிமுகமானார். தினேஷ் காதல் காட்சியில் சிறப்பாக நடித்திருந்தார். நான் பேச நினைத்தது அனைத்தையும் மற்றவர்கள் பேசி விட்டார்கள், அதை நான் வழிமொழிகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நான் இப்போது நிறைய படங்கள் பண்ணுவதில்லை, ஆனால் இந்த பிரசாத் லேபில் தான் நான் ஒரு நடிகராக உணர்கிறேன். பத்திரிகையாளர்களிடம் ஒரு நல்ல நடிகர் என்று பெயர் வாங்குவது தான் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு வந்தவர்கள் அனைவரும் அனைவரையும் பாராட்டுகிறார்கள், இந்த பாசிட்டிவான விசயம் படக்குழுவுக்கு ஆசீர்வாதமாக அமையும். அப்புக்குட்டி சார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

இந்த படம் எனக்கு எப்படி தெரிய வந்தது என்றால், விஜய் அண்ணா போஸ்டர் தான் நான் பார்த்தேன், இலவசம் இருக்க கூடாது, தமிழக முதல்வர் விஜய், என்று போஸ்டரில் போட்டு இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது தான் விசயம் இந்த படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தது. தளபதி விஜய் என்பது வெறும் பெயர் இல்லை, ஒருகோடி பேரின் உயிர், அதில் நானும் ஒருவன். நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். ஆனால், விஜய் அண்ணா பேசிய பிறகு தான் எனக்கு இவ்வளவு பெரிய வெளிச்சம் கிடைத்தது. என் பெயருக்கு உயிர் கொடுத்தது தளபதி விஜய் அண்ணா தான். அவருடன் பழகியதில் இருந்து சொல்கிறேன், நான் இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி வருகிறேன், உலகத்தமிழர்கள் மனதில் விஜய் அண்ணா வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.  இது நம்பிக்கை இல்லை, 2026-ல் அவர் முதல்வராவது உறுதி. இலவசம் என்பது எனக்கும் பிடிக்காது. அது ஊக்கத்தொகையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இலவசத்தை கொடுத்து நம்மை சோம்பேறிகளாக்கி விட்டார்கள். இயக்குநர் கோபி அதை சொன்னது சிறப்பாக இருந்தது. அப்போது என்றால் இளைஞர்கள் அந்த மாற்றத்தை நோக்கி வந்துவிட்டார்கள். நான் இதற்கு முன்பாகவே விஜய் அண்ணாவை முதல்வராக காலண்டர் அடித்துவிட்டேன், ஆனால் அதை வெளியிடவில்லை, என் உறவினர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டேன். இதில் நான் கோபியை விட சீனியர் என்பதில் பெருமை.

அரசியலும், கலையும் இல்லாத வாழ்க்கை முழுமையடையாது. இது இசை வெளியீட்டு விழா இதில் அரசியல் பேசக்கூடாது என்றால் எப்படி, பொது இடத்தில் கலைப்பற்றி பேசக்கூடாது என்றா எப்படி, ஒவ்வொரு மனிதரிடமும் இரண்டும் இருக்கிறது. லாக்கப் மரணமடைந்த அஜித்குமாருக்காக போராட்டம் நடத்த த.வெ.க அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதுவரை எந்த கட்சிக்கும் போடாத விதிகளை போட்டிருக்கிறார்கள். காவல்துறையை பார்க்கும் போது பாவமாக தான் இருக்கிறது. கலைஞர் ஐயா முதல்வராக இருந்தால் ஜெயலலிதா வஞ்சிக்கப்படுவார், ஜெயலலிதா முதல்வராக இருந்தால் கலைஞர் ஐயா வஞ்சிக்கப்படுவார். ஆனால் இரண்டுமே ஒரே காவல்துறை தான். எங்களுக்கு இதுபோல் எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும், நெருக்கடி கொடுத்தாலும், எங்கள் தலைவர் விஜயையும், தமிழக வெற்றிகழகத்தை ஒடுக்க முயற்சித்தாலும் நாங்கள் போராடி வெல்வோம், மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடுவோம். கம்யூனிசக் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மாற்றத்தை நோக்கி எங்களுடன் கைகொடுத்தால், எங்கள் தலைவர் விஜய் சிறப்பான ஆட்சியை கொடுப்பார் என்று கூறிக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.

படத்தின் நாயகன் தினேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், நான் இப்படி இரத்த கரை படிந்த சட்டையுடன் வருவதற்கு இயக்குநர் தான் காரணம், படம் வெளியாகும் வரை நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயக்குநர் சொல்லிவிட்டார். இந்த ஒரு நிமிஷத்துக்காக தான் இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். நானும் மீடியா ஃபேமிலியில் இருந்து தான் வந்திருக்கிறேன், நீங்கள் எனக்கு உத்துழைப்பு கொடுத்து இந்த படத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும். இந்த கதையை இயக்குநர் என்னிடம் பீல் பண்ணி சொன்னார், அதனால் தான் நான் ஒத்துக்கொண்டேன். விஜய் விசயம் பற்றி சொன்ன போது, வேண்டுமா என்று கேட்டேன். ஆனால், அவர் ஏற்கனவே செய்து வைத்தது என்று சொன்ன போது, நான் ஓகே சொல்லிவிட்டேன். நான் உங்க வீட்டுப்பிள்ளை, என்னை உச்சத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றாலும், ஒரு நல்ல நடிகர் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுகங்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் தான், அவர்களுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்க இங்கு வந்தது எனக்கு பூஸ்ட் போல் இருக்கிறது. மேடையில் அமர்ந்திருக்கும் பெரியவர்களுக்கு அன்பான வணக்கம், நன்றி.” என்றார்.

நடிகர் அப்புக்குட்டி பேசுகையில், “மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கும், வாழ்த்தியவர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் சிறந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் கோபி சாருக்கு நன்றி. எனக்கு காட்சியை சொல்லாமலேயே நடிக்க வைத்தார். ஹீரோ யார் என்று கேட்கும் போது, கண்ணாடி போட்டுக்கொண்டு தினேஷ் சார் வந்தார். அவர் பட்டைய கிளப்பிட்டாரு, செமயாக நடித்திருக்கிறார். அவர் தினமலர் குடும்பம் என்று தெரியாது, பிறகு தான் தெரிந்தது. தெரிந்த உடன் அவரிடம் நான் பயந்தால், அவர் என்னிடம் பனிவோடு அடக்கமாக பேசுகிறார்.  ஆனந்த் பாண்டி சிறப்பாக நடித்திருக்கிறார். அனைவரும் ஒரு குடும்பமாக ஜாலியாக நடித்தோம். சுற்றுலா போனது போல் தான் இருந்தது. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. விஜய் சாரை முதல்வர் என்று போட்டது எனக்கும் கொஞ்சம் ஷாக்காகதான் இருந்தது. எப்படி வருது என்று பார்ப்போம். ரசிகர்களை பயமுறுத்தும் வேடத்தில் நடித்திருக்கிறேன், வாழ்த்துகள் நன்றி.” என்றார்.

படத்தின் இயக்குநர் கோபி பேசுகையில், “எங்களை வாழ்த்த வந்திருக்கும் பெரியவர்களுக்கு நன்றி, அனைவருக்கும் தனி தனியாக நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், நேரம் இல்லாததால் ஒட்டுமொத்தமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெளிச்சத்தில் என்னை பேசவைத்த மற்ற டெக்னீஷியன்களுக்கு நன்றி. செளந்தரராஜன் பிரதர் பேசும் போது நிறைய எதிர்ப்புகள் வந்தது, நாம எதிர்ப்புகளையும், எதிர்மறைகளையும் கடந்து செல்வோம், நம்பிக்கையுடன் இருங்க. விஜய் சாரின் விசயம் எதற்காக வைத்தீர்ங்கள் என்று கேட்டார்கள், நிறைய மீம்ஸ் கூட வந்தது. இந்த காட்சிகள் படத்தில் இருக்காது, நீக்கிடுவாங்க என்று சொன்னாங்க. நீங்க டிரைலரில் என்னவெல்லாம் பார்த்தீர்களோ அது அனைத்தும் படத்தில் இருக்கும். என்னை பற்றியும், படம் பற்றியும் பேசும் போது எனக்கு பயமாக இருந்தது. அதனால், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க வாங்க. 

இந்த படத்தை குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் செய்ததால், ஒரு காட்சியில், ஒரு பேப்பர் போஸ்டரில் வைத்தேன், பெரிய பட்ஜெட்டாக இருந்தால் கிராபிக்ஸ், ஏஐ மூலம் அவரை காண்பித்திருப்பேன், பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன். அதனால், விஜய் சாரின் ரெபரன்ஸ் எனது அடுத்தடுத்த படங்களில் இருக்கும். எங்கள் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. சக்சஸ் மீட்டில் சந்திப்போம்.” என்றார்.

ஒளிப்பதிவு : எல்.டி
இசை : தர்ம பிரகாஷ்
கலை : நெல்லை லெனின்
பாடல்கள் : எஸ்.கே.சித்திக்
பி.ஆர்.ஓ : தர்மதுரை, சுரேஷ்சுகு

பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் - ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் - ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச...