*’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் பெட்ரோ பாஸ்கல்!*
'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ மூலம் அணியின் தலைவராக மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்/ ரீட் ரிச்சர்ட்ஸாக மார்வெல் உலகில் அறிமுகமாக உள்ளார் நடிகர் பெட்ரோ பாஸ்கல். MCU உலகில் ஆறாவது பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படம், ஜூலை 25 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது.
உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கான புரோமோஷனின் போது பெட்ரோ பாஸ்கல் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். வேனிட்டி ஃபேருடன் பேசிய பெட்ரோ, ”1960களில் கதை நடைபெறுகிறது எனும்போது அதற்கேற்றாற் போல எனது உச்சரிப்பும் இருக்க வேண்டும். அதற்காக தனது 100% பங்களிப்பையும் கொடுத்தேன். நான் அதைச் சிறப்பாகச் செய்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. அறுபதுகளின் முற்பகுதியில் அட்லாண்டிக் நடுப்பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து தொடங்க வேண்டும். அந்த பேச்சுவழக்கிற்கு உதவ எனக்கு பயிற்சியாளரும் உடன் இருந்தார்” என்றார்.
மேலும் பெட்ரோ பகிர்ந்து கொண்டதாவது, “நான் நன்றாக பயிற்சி எடுத்தேன். ஒருக்கட்டத்தில் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வந்து சகஜமாக பேசுங்கள் என்று படக்குழுவினர் கிண்டல் செய்யும் அளவிற்கு நான் அந்த பேச்சுவழக்கில் மூழ்கிப் போனேன். நாம் இதுவரை பார்க்காத உலகத்தை உங்கள் அனைவருக்கும் காட்ட இருக்கிறோம்” என்றார்.
மாட் ஷக்மேன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூ ஸ்டோர்மாக வனேசா கிர்பி, ஜானி ஸ்டோர்மாக ஜோசப் குயின், பென் கிரிம்மாக எபோன் மோஸ்-பக்ராச், கேலக்டஸாக ரால்ப் இனேசன் மற்றும் சில்வர் சர்ஃபராக ஜூலியா கார்னர் ஆகியோர் நடித்துள்ளனர்.