மனதின் தூய்மையான காதலை கருவாகக் கொண்டு உருவாகியுள்ளது ’18 மைல்ஸ்’. எல்லைகளையும் பல தடைகளையும் தாண்டி காலம் கடந்த உணர்வுகளோடு உருவாகியுள்ள இந்தக் கதையில் தூய்மையான காதலை உணரலாம். நடிகர்கள் அசோக் செல்வன் - மிர்னா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்'-ல் இருந்து சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸில் கடினமான தருணங்கள், அன்பு, கண்ணைக் கவரும் காட்சிகள் எனப் பலவற்றை பார்க்க முடிந்தது. இதனை சதீஷ் செல்வகுமார் இயக்கி இருக்க சித்து குமார் இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியிருக்கிறார்.
ஒரு அகதிக்கும் கடலின் சட்டத்தை இயற்றுபவருக்கும் இடையிலான பிணைப்பு, தியாகம், அன்பு மற்றும் இன்னும் பேசப்படாத பல உணர்வுகளையும் ’18 மைல்ஸ்’ பேசுகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தனது திறமையை நிரூபித்த நடிகை மிர்னா ’18 மைல்ஸ்’ கதையில் மேலும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அன்புக்கும் அரவணைப்பிற்கும் ஏங்கும் மனதை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் மிர்னா. தனது கடமைக்கும் மனதிற்கும் இடையிலான அலைக்கழிப்பை தனது நடிப்பில் சரியாக பதிய வைத்திருக்கிறார் நடிகர் அசோக் செல்வன்.
இதில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மிர்னா பகிர்ந்திருப்பதாவது, “நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு உண்மையான அங்கீகாரம். அந்த வகையில், ஆழமான, இளகிய அதே சமயம் உண்மையான உணர்வுகளை நடிப்பில் கொண்டு வர வேண்டிய கதாபாத்திரம் ’18 மைல்ஸ்’-ல் எனக்கு கிடைத்திருக்கிறது. மெளனம், உணர்வுகள் மூலமே பெரும்பாலும் இந்தக் கதையில் நடித்திருக்கிறேன். வசனம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சதீஷூக்கு நன்றி” என்றார்.
நடிகர் அசோக் செல்வனுடன் பணிபுரிந்தது பற்றி பேசியதாவது, “தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் அசோக் தெளிவாக இருந்தார். அவருடைய டெடிகேஷன் எனக்கும் இன்ஸ்பையரிங்காக இருந்தது. வெறும் நடிப்பு மட்டுமே என்றில்லாமல் அன்பு மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டையும் கையாள வேண்டும் என்ற இடத்தில் இருக்கும் இரு நபர்களின் கதை. ’18 மைல்ஸ்’ கிளிம்ப்ஸூக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் கதையின் உணர்வை சரியாகப் புரிந்து கொண்டுள்ளனர். '18 மைல்ஸ்' வெளியாகும்போது ரசிகர்கள் எந்தளவிற்கு கதையின் உணர்வுகளுடன் தங்களைப் பொருத்தி பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்” என்றார்.
இந்தத் தலைமுறை நடிகர்களில் திறமையும் அழகும் கொண்ட வெகுசிலரில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை மிர்னா. அடுத்தடுத்து தனது நடிப்புத் திறனை மேலும் மெருகேற்றும் விதமாக படங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தப் படங்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.