*குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை சேஷ்விதா கனிமொழி!*
புகழ்பெற்ற லெஜெண்ட்ரி நடிகைகள் ரேகா, நந்திதா தாஸ், அர்ச்சனா போன்ற நடிகைகள் தங்கள் அழகு மற்றும் நடிப்பு திறனுக்காக பெயர் பெற்றவர்கள். பல தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் இதயங்களை வென்றவர்கள். அந்த வரிசையில் தற்போது பக்கத்து வீட்டுப் பெண் போலவும் அதே சமயம் நம் வீட்டில் ஒருவராகவும் இருக்கும் திறமை வாய்ந்த நடிகைகளை தங்கள் படத்தில் நடிக்க வைப்பதில் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதில் நடிகை சேஷ்விதா கனிமொழியும் ஒருவர். தமிழ் சினிமாவில் அழுத்தமான எண்ட்ரி கொடுத்திருக்கும் இவர் மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து ஹிட் படங்களில் சவாலான கதாபாத்திரங்கள் நடித்து இயக்குநர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்திருக்கிறார்.
நடிகைகளுக்கு நடிப்புத் துறையில் ஆரம்ப காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதை சேஷ்விதா மிகவும் தன்னம்பிக்கையுடன் கடந்து வந்திருக்கிறார். நடிகர் விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்திலும், நடிகர் விமலின் 'பரமசிவன் பாத்திமா' படத்திலும் இவரது கதாபாத்திரமும் அசத்தலான நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அடுத்து வெளிவர இருக்கும் 'குற்றம் புதிது' படத்தில் தந்தையின் அன்புக்குரிய மகளாக இவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் நிச்சயம் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும்.
தனது பயணம் குறித்து சேஷ்விதா பகிர்ந்து கொண்டதாவது, "எனக்கு பவர்ஃபுல்லான கதாபாத்திரம் கொடுத்து ரசிகர்களிடம் அன்பும் அடையாளமும் பெற்று தந்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. லியோ ஜான் பால் சாருக்கும் எனது பணிவான நன்றி. யாரேனும் என்னை அடையாளம் கண்டுபிடித்து 'வெண்ணிலா' என அந்த கதாபாத்திர பெயரில் கூப்பிடும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அதேபோல், 'குற்றம் புதிது' மற்றும் 'பரமசிவன் பாத்திமா' படங்களிலும் எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி" என்றார்.
தனது நடிப்புத் திறனை நிரூபித்துள்ள சேஷ்விதாவிற்கு நிறைய வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. வரும் நாட்களில் வலுவான நல்ல கதாபாத்திரங்களில் அவரை ரசிகர்கள் பார்க்கலாம்.