*மிர்ச்சி சிவா நடிக்கும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*
செயற்கை நுண்ணறிவு கொண்ட பெண்ணின் காதலைச் சொல்லும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'
மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் மா கா பா ஆனந்த்,,பக்ஸ், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, 'மைக்செட்' அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் பிரம்மாண்டமாக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். ஆர்தர். ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். நடன காட்சிகளை நடன இயக்குனர் சாண்டி அமைக்க, சண்டை பயிற்சி போனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“இந்த படத்தில் உணவு விநியோகிக்கும் டெலிவரி பாய் ஷங்கர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சிவா நடிக்கிறார். செயற்கை நுண்ணறிவு கொண்ட சிம்ரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவரது தோற்றம், உடல்மொழி ஆகியவை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இளம்பெண் கதாப்பாத்திரத்தில் நடிகை அஞ்சுகுரியன் நடித்திருக்கிறார். இவர்களுக்கிடையே நடைபெறும் ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி தான் படத்தின் கதை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் மிர்ச்சி சிவாவின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இதற்கு இணையவாசிகளின் பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.