Sunday, January 8, 2023

லாக்'திரைப்பட விழாவில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இரா.முத்தரசன் சொன்ன குட்டிக்கதை!

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்யராஜ் 
லாக்திரைப்பட விழாவில்

'லாக்'திரைப்பட விழாவில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இரா.முத்தரசன் சொன்ன குட்டிக்கதை!

பாக்யராஜ் செய்த ஒரே தவறு முருங்கைக்காய் மேட்டரை படத்தில் வைத்தது தான்:
 இயக்குநர் பேரரசு ஜாலி பேச்சு!

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் கூறிய  முருங்கைக்காய் அனுபவம்! 

நடிகை கல்பனாவுக்கு அல்வா கொடுத்தேன்:இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு!

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'.
இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர்.

'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தை  இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா பேசும்போது,

"இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எங்களது பக்க பலமாக இருந்த சக்திவேல் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மற்றும் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் இருவரும் திடீரென காலமானது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களுடைய கனவெல்லாம் இந்தப் படத்தின் மீதுதான் இருந்தது .அந்த இருவருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தால் இந்தப் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அவர்களது விருப்பம் இதுவாகத்தான் இருக்கும்.எங்களுடன் இணைந்து ராஜ்குமார் வேலுச்சாமி அவர்கள் பெரும் பக்கபலமாக இருந்து உதவினார்.

 அதுமட்டுமல்லாமல் எங்களது சிரமங்களையெல்லாம்  பார்த்துக் கொண்டு இது மாதிரி புதியதாக வருபவர்கள் சிரமப்படக்கூடாது அவர்களுக்கு நாம் ஒரு தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.அதன்படி அண்மையில் நாங்கள் ஒரு ஸ்டுடியோ தொடங்கியிருக்கிறோம். அது தான் பாம்பூ ட்ரீஸ் ஸ்டுடியோ .அது முழுக்க முழுக்க வளரும் கலைஞர்களை உயர்த்தி விடுவதற்காகவும், அவர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பக் கருவி வசதிகள் செய்து கொடுப்பதற்காகவும் என்ற நோக்கத்தில் தொடங்கி இருக்கிறோம்" என்றார்.

படத்தயாரிப்பில் இணைந்துள்ள அல்முரா நிறுவனத்தின் தலைவர் ராஜ்குமார் வேலுச்சாமி பேசும்போது,

 "நான் ஈராக், துபாய் என்று பரபரப்பாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன். நான் முதலில் 'அட்டு' படத்தைப் பார்த்த போது அது எனக்கு மிகவும் பிடித்தது. யார் இந்தப் படத்தை இயக்கியவர் என்று  விவரங்களைத் தேடிய போது ரத்தன்லிங்கா அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு ஒரு படம் கூட செய்யவில்லை என்று அறிந்தேன். பிறகு பேசி நண்பர்கள் ஆனோம். திறமை இருந்தாலும் அங்கீகாரம் இல்லாமல் பலரும் சினிமாவில் சிரமப்படுகிறார்கள் என்று அவரை வைத்து நான் அறிந்து கொண்டேன். இப்படி வருங்காலத்தில் இளைஞர்கள் திறமையோடு சிரமப்படக்கூடாது என்று  ஸ்டுடியோ ஒன்று நாங்கள் ஆரம்பித்துள்ளோம் . புதிய திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் அளிக்கும் தளமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இதைத் தொடங்கி உள்ளோம். இவர் அட்டு படத்திற்குப் பிறகு இந்த  இரண்டாவது படம் எடுப்பதற்குள் இடையில் ஐந்தாண்டுகள் ஓடி விட்டன. இனி ஆண்டிற்கு ஐந்து படங்கள் இவர் இயக்கும் அளவிற்கு அந்த வசதிகள் இவருக்குப் பக்கபலமாக இருக்கும். பல படங்கள் இந்த ஸ்டுடியோவில் பணியாற்றி வெளிவர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் ஸ்டுடியோவின்  நோக்கமே வளரும் இயக்குநர்கள் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான்.  அதன்படி ஒரு புது படத்தையும் தொடங்கி இருக்கிறோம். அட்டு படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரதாப் அந்த படத்தின் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் .இந்த லாக் படத்தில் போலீஸ் காவல்துறையில் பணியாற்றும் இளங்கோவனின் மகன் அர்ஜுன் நடிகராக அறிமுகம் ஆகிறார். எங்களது பயணம் தொடர்ந்து நடைபெறும்'' என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் விக்ரம் செல்வா பேசும் போது,

 "கோவிட் காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்திற்கு, கோவிட்டால் சற்று தேக்க நிலை ஏற்பட்டது .அப்போது இந்தப் படத்திற்காகப் பணியாற்றும் போது இரவு பகலாக இயக்குநர் பணியாற்றுவார். பின்னணி இசை சேர்ப்புக்கு ஐந்து மணிக்கு வருவீர்களா என்று கேட்டேன். அவர் மாலை 5 மணியா? என்றார். அதிகாலை ஐந்து மணி என்றேன். ஆனால் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தி தூங்காமல் அப்படியே காலை 5 மணிக்கு வந்து விடுவார். இவருடைய திரைப்படத்தின் உருவாக்கம் அசல் தன்மையோடு இருக்கும், அதுதான் இவரது பாணியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கடைசியில் 10 -15 நிமிடங்கள் எந்தவித வசனமும் இல்லாமல் காட்சிகள் நகரும். அந்த அளவிற்கு  காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பவர் இயக்குநர் ரத்தன் லிங்கா'' என்றார்.

கதாநாயகி மது ஸ்ரீ பேசும்போது, 

"நான் இவர் ஒரு குறும்படம் எடுத்த போது அதில் நான் ஒரு சின்ன பெண்ணாகத் தாவணியுடன் தோன்றியிருப்பேன். மதுபானக்கடையில் நடித்த பிறகு 10 ஆண்டுகளுக்குள் எனது எடை கூடி நான் குண்டாக இருந்தேன்.அட்டு படத்தில் நடிப்பதை நான் தவற விட்டு விட்டேன். அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். இன்று கூட அதை நினைத்து வருத்தப்படுகிறேன்.
அதனால்தான் அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. இரண்டாவது படத்தையும் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக இதில் நடித்து இந்தப் படம் வெளிவந்து பார்த்த பிறகு தான் அந்த படத்தைப் பார்ப்பதாக நான் இருக்கிறேன்.என்னைப் பார்த்து விட்டு எடை குறைத்து வருமாறு சொன்னார் .ஒரு மாதம் நான் அவகாசம் கேட்டேன். ஏனென்றால் இது ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படம்  ,ஆனால் இயக்குநர் என்னைப் பார்த்து எதுவும் சொல்லாமல் வேறு ஒருவரைத் தேடாமல் கால அவகாசம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். 30 நாட்களில் நான் குறைக்க முடியும் என்று நம்பினேன். அதன்படி எடை குறைந்து அவர்கள் முன் போய் நின்றேன் .என்னைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். இதில் எனது முயற்சியை விட அவர்கள் கொடுத்த நம்பிக்கை பெரிது. நம்பிக்கையால் எதையும் செய்ய முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன்.

 எனக்கு மட்டுமல்ல நடித்திருக்கும் அனைவருக்கும் பளிச்சிடக் கூடிய நடிப்பு வாய்ப்புகளை இயக்குநர் வழங்கி உள்ளார் "என்றார்.

இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் முத்தரசன் பேசும்போது,

"இந்த விழாவில் காவல்துறையினர், நீதி அரசர்கள் ,படத் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று பலரும் பங்கெடுத்துள்ளனர். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் ரத்தன் லிங்கா சாதாரணமாக வந்துவிடவில்லை. குறும்படங்கள் எடுத்துள்ளார். திரைப்படம் இயக்கியுள்ளார்.
திரைப்படம் தயாரித்துள்ளார்.இப்போது ஸ்டுடியோ தொடங்கி உள்ளார்.
 இப்படிப் படிப்படியாக முயற்சிகள் மூலம் வளர்ந்து அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.  
திரைப்படம் என்பது மக்களிடம் சரியான புரிதலை ஏற்படுத்துவது மட்டுமல்ல விழிப்புணர்வும் ஏற்படுத்தக் கூடியது. விடுதலைப் போராட்ட காலத்திலும் சரி விடுதலைக்குப் பின்பும் சரி  மாற்றங்களை மக்களிடம் ஏற்படுத்தியதில் அதன் பங்கு உண்டு.
வீரபாண்டிய கட்டபொம்மன் வந்த பிறகுதான்  அந்த வரலாறே நம் மக்களுக்குத் தெரிந்தது.

காவல் துறை பற்றி திரைப்படங்களில் இரண்டு விதமாகக் காட்டுவார்கள்.அவர்களை மிகவும் கொடூரமானவர்களாகக் காட்டுவார்கள் அதே நேரம் நல்லவர்கள் சிலரையும் காட்டுவார்கள்.  

இங்கு வந்திருக்கும் பாக்யராஜ் அவர்களுக்கு நானும் ரசிகன் தான். ஒரு முறை எங்கள் வீட்டில் இரவு மனைவி சாப்பாடு பரிமாறினார். அப்போது அருகில் இருந்த கொழுந்தியாள் எனக்கு மனைவி முருங்கைக்காய் துண்டுகளைப் போட்ட போது "போடு போடு நல்லா போடு" என்று கூறினார். எனக்கு அப்போது புரியவில்லை. பிறகு 'முந்தானை முடிச்சு 'படம் பார்த்த பிறகுதான் அன்று நிறைய போடு என்று சொன்னதன் அர்த்தம் புரிந்தது .முருங்கைக்காய்க்குள் ரகசியம் அப்படி இருக்கிறது என்று எனக்கு அப்போது தெரியாது.

 புதிதாக ஆரம்பித்துள்ள ஸ்டுடியோவில் ஆண்டுக்கு ஐந்து படம் செய்ப இருப்பதாகச் சொன்னார்கள். அதில் வியப்பொன்றும் இல்லை. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்றது தான் பெரிய மகிழ்ச்சி. நான் காவிரி பாயும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன். டெல்டா மாவட்டத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். மலைகள் இல்லாத சமவெளிப் பகுதி கொண்டது எங்கள் மண். அந்த இயற்கை அமைப்பு அப்படி. எங்கிருந்தோ நீர் வரும் யாரோ கொடுத்ததல்ல நாம் கேடடதும் இல்லை. இயற்கை தானாக வழங்கக்கூடியது. அதாவது நீர் பள்ளத்தை நோக்கிப் பாயக் கூடியது.

 தண்ணீர் என்றதும் இப்போது எனக்கு ஒரு கதை நினைவுவுக்கு வருகிறது . ஒரு வளமான மண் கொண்ட  ஒரு கிராமம் இருந்தது. பாடுபடுவதற்குப் மக்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் அங்கு நீர் இல்லை. ஆனால் அந்தக் கிராமத்தின் அருகே ஒரு ஆறு இருந்தது. அதில் நீர் நிறைய போய்க் கொண்டிருந்தது .ஆனால் அதன் இடையே ஒரு மலை இருந்தது.அந்த மலை உடைந்தால் அல்லது அகற்றினால்தான் அங்கு நீர்ப்பாசனம் கிடைக்கும்.அந்த ஆற்றின் நீர் வரத்தைத் தடுக்கும் அந்த மலையை உடைத்தால் தான் அந்த ஊர் செழிக்கும் என்பதால் ஒரே ஒருவர் மட்டும் ஒரு உளியும் சுத்தியலும் எடுத்துக்கொண்டுபோய் தினமும் அந்த மலையை உடைப்பார். எல்லோரும் அவரை வேடிக்கையாகப் பார்ப்பார்கள். இது நடக்கிற காரியமா? என்பார்கள். என்னால் முடிந்த வரை செய்வேன் .அதற்குப் பிறகு என் மகன் செய்வான் அவனால் முடியவில்லை என்றால் என் பேரன் செய்வான் என்றார். அவரது முயற்சியைப் பார்த்து தேவதைகள் வந்து அந்த மலையை அகற்றி அந்த ஆற்றின் நீரைப் பாசனத்திற்குத் திருப்பி விட்டதாக ஒரு கதை. அது கதை இல்லை .ஒரு கவிதை இது மாவோ எழுதியது. அதைத் தான் நான் கதையாகச் சொன்னேன். முயற்சிக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும் என்பது இதன் கருத்து. அது போல் இந்தப் பட முயற்சி வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்." என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

" இது காவல்துறை விழா போல் இருக்கிறது. அவ்வளவு காவல்துறையினர் கலந்து கொண்டுள்ளார்கள். காவல்துறையினருக்கும் திரைப்படத்துறைக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஒரு ராசியும் உண்டு. ஏனென்றால் காக்கி சட்டை போட்டு ஒரு பெரிய வெற்றிப் படம் கொடுத்த பிறகு தான் அந்த நடிகர்கள் நட்சத்திரங்களாக உயர்ந்து அவர்களுடைய மதிப்பு கூறியிருக்கிறது. 'தங்கப்பதக்கம் 'படத்தில் எஸ் பி சவுத்ரியாக நடிகர்திலகம் நடித்த போது அந்தக் கம்பீரத்தை உணர்ந்தோம். காவல்துறை மீது மதிப்பு வந்தது .அந்தப் பாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் யார் காக்கி சட்டை போட்டு நடித்தாலும் அந்த எஸ்பி சவுத்ரியின் பாதிப்பு இருக்கிற வகையில் அந்த பாத்திரமும் அமைந்திருந்தது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் 'மூன்று முகம் ' படத்தில் அலெக்ஸ் பாண்டியன் எஸ்பியாகத் தோன்றினார். அதுவும் இன்றளவும் பேசப்படுகிறது. புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் 'ஊமை விழிகள் 'படத்தில் காக்கி சட்டை போட்டு அனைவரையும் கவர்ந்தார். லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியும் 'வைஜெயந்தி ஐபிஎஸ்' படத்திற்குப் பிறகு பெரும் உயரத்திற்குப் போனார். அதன் பிறகு ஏராளமான போலீஸ் வேடங்களில் நடித்து புகழ் பெற்றார் .புரட்சித் தமிழன் சத்யராஜ் எவ்வளவு நடித்திருந்தாலும் 'வால்டர் வெற்றிவேல் 'மறக்க முடியாது
எம்ஜிஆர் அவர்களால தன் கலை வாரிசு என்று சொல்லப்பட்ட பாக்யராஜ் அவர்கள் 'அண்ணா என் தெய்வம் 'படத்தை ' அவசர போலீஸ் 'என்று முடித்தார். பாதியில் விடப்பட்ட படத்தை தான் நடித்து முடித்தார். அந்த வகையில் எம்ஜிஆரும் பாக்கியராஜ் சார் அவர்களும் சேர்ந்து நடித்த படம் அது. இப்படி காக்கி சட்டை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

பாக்யராஜ் எவ்வளவு நல்ல கருத்துக்களை  நல்ல கதைகளை சொல்லியிருக்கிறார். அவர் செய்த ஒரே தவறு  முருங்கைக்காய் மேட்டரைப் படத்தில் வைத்தது தான்.

 இந்த விழாவுக்கு வந்த பலரும் அதைப் பற்றி பேசும் போது அவர் செய்த பெரிய தவறு இது என்று தோன்றுகிறது.

ஒரு படத்தில் இடைவேளையில் வருவதை இன்டர்வெல் பிளாக் என்பார்கள்.இன்டர்வெல்  லாக்  என்பார்கள். சாதாரணமாக இருக்கிறது என்றால் இன்டர்வெல் பிளாக். அதில் ஒரு முடிச்சு போட்டுப் பிறகு அவிழ்த்து விடுவது தான் லாக்.  பாக்யராஜ் சார் அவர்களைத் திரைக்கதை மன்னன் என்பதை விட இடைவேளை மன்னன் என்று கூறலாம். ஏனென்றால் அவரது படங்களில் இடைவேளையில் அப்படி ஒரு முடிச்சு போட்டு விடுவார்.

அந்த முடிச்சை சரியாக அவிழ்த்தால் அந்த படம் வெற்றிப் படம். அவிழ்ப்பதற்குத் திணறினால் அது தோல்விப்படம்.

இயக்குநர் ரத்தன் லிங்காவைப் பார்க்கிறேன் ,20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயக்குநர் ஆவது என்பது சிரமம். சில ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்து, பிறகு இணை இயக்குநராகச் சில ஆண்டுகள் பணியாற்றி ,வெளியே வந்து கதை சொல்லி தயாரிப்பாளர் பிடித்து பிறகு தான் இயக்குநராக முடியும். ஆனால் இப்போதெல்லாம் எல்லாமே அவசரக்காலம். இரண்டு ஆண்டுகளுக்குள் படம் இயக்கி விட வேண்டும் என்று இன்று இருக்கிறார்கள். ஆனால் ரத்தன் லிங்கா  படிப்படியாகக் குறும்படம், திரைப்படம் என்று வளர்ந்துள்ளவர். அப்படி வளர்ந்து இப்போது இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அவரது குறும்பட காலத்திலேயே அவரை இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், பிரதாப் போத்தன், மதன் போன்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள் .அவர் நிதானமாகத்தான் படிப்படியாக முன்னேறியுள்ளார். அவசரத்தில் எதுவும் வெற்றி பெறாது .இந்தப் படத்தில் நமக்கு நாமே துணை என்று பெண்களுக்கு கருத்து சொல்லி உள்ளார். பெண்களைக் காப்பாற்ற எந்த கதாநாயகர்களும் வர மாட்டார்கள். அவர்கள் தான் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆண்களுக்கு நிகராகப் பல பணிகளைச் செய்யலாம் . ஆனால் ஆண்களைப் போலவே, ஆண்கள் மாதிரி வாழ நினைக்கக் கூடாது அங்கே தான் நிறைய பெண்களுக்கு பிரச்சினை வருகிறது. நிறைய தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
பெண்கள் ஆண் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தனது நண்பர்களைத் தைரியமாக அப்பா அம்மாவிடம் அறிமுகப்படுத்த வேண்டும் .அப்படி அறிமுகப்படுத்தாமல் மறைத்தால் பிரச்சினை வரும். குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தப்படும் நண்பன் எப்படிப்பட்டவன் என்று குடும்பத்தினர் கவனித்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் அனுபவசாலிகள் .

இருமல் தும்மல் போன்றது தான் காமமும் .நம்மை மீறி வந்து விடும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் தான்  பெண்களுக்குப் பெண்களே தான் பாதுகாப்பு என்று இந்தப் படத்தில் கூறி இருக்கிறார். இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்" என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும் போது ,

"இங்கே தயாரிப்பாளர் ராஜ்குமார் வேலுச்சாமி ஈராக், துபாய் என்று பரபரப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறார். அங்கேயும் தனியாக இருப்பதாகச் சொல்கிறார். தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நான் கேட்டேன்.

படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா  பேசும் போது பல்வேறு சிரமங்கள் இடைஞ்சல்களைக் சந்தித்துதான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டித் தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டி விட்டு திருடப்போவார்கள் ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படிப் பல நாள் எதுவும் கிடைக்கவில்லை. அன்று வேண்டும் போது  இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள் .அன்றும் ஒன்றுமே கிடைக்காது போகவே,  ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல்  வீசினார்கள்.  ஆனால் மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்து விட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்த கல்லைத் தூக்கி கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான் .அதே நேரத்தில் கண்வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார்,  தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே நான் கல்லை கோயிலைத்தாண்டித் தானே வீசினேன்? என்றான் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா ?என்றான். விநாயகர் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன்  என்றார் .அதுபோல இடையூறுகள் வருவது என்றாலும் எப்படியென்றாலும் வந்தே தீரும்.

இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால் . எந்த ஒரு  விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது
எனக்கு முருங்கக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார்.  இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்குப் போதும். இரண்டுக்குமேல் வேண்டாம் இது போதும்  என்பார் பாட்டி. எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது .
படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள  மதுஸ்ரீ இங்கே எடைக் குறைப்பு பற்றிப் பேசினார் .இப்படி சிரமப்பட்டு வெற்றி பெறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. நான் சின்ன வீடு படத்தில் கல்பனாவுக்கு தினசரி அல்வா கொடுத்தேன். ஏனென்றால் அவர் உடல் எடை கூட வேண்டும் என்பதற்காக.  சிரமப்பட்டு உழைத்தால் தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்.

நான் 'தூறல் நின்னு போச்சு' படத்தில் கம்பைச் சுற்றி  பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த கோபியில் 30 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு தான் அப்படி நடித்தேன் .அப்போது நான் ஒரு கையால் சுற்றி விளையாடுவது போல் இருக்கும் .இரண்டு கையாலும் சுற்றிப் பிடிப்பது போல் பயிற்சி பெற வேண்டும் என்று அழகிரிசாமி மாஸ்டரிடம் கேட்டேன்.அது முடியாது கஷ்டம் என்றார். அதன் நுட்பத்தைச் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டேன்.அவருக்கு நம்பிக்கை இல்லை ஆனாலும் நான் கற்றுக் கொண்டதைப் படத்தில் வைத்தேன். மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொண்டு படத்தில் சுற்றி இருப்பேன். படத்தை பார்த்து எம்ஜிஆர் எத்தனை  வருடமாக இதற்குப் பயிற்சி எடுத்தாய் என்று கேட்டார். நான் விசயத்தை சொன்னபோது அவர் நம்பவே இல்லை .பொய் சொல்லாதே என்றார்.அப்போது நான் சொன்னேன் மனது வைத்தால் எதுவும் முடியும் என்றேன் .

இங்கே தொழில்நுட்பக் கலைஞர்கள் பேசியபோது மன நிறைவோடு பேசினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

இங்கே காவல்துறையைச் சேர்ந்த இளங்கோவன் தன் மகனை நடிக்க வைத்துள்ளார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் எங்கள் காலத்தில் நான் நாடகம்  பார்க்கப் போகிறேன் என்றாலே வீட்டில் பெல்ட்அடி விழும்.

சத்யராஜ் மகன் சிபிராஜும் சரி என் மகன் சாந்தனுவும் சரி சினிமா கனவுடன் இருந்ததால் படிப்பில் பெரிதாக வர முடியவில்லை. அதனால் மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். அவர்கள் மனதில் உள்ள கனவை நிறைவேற்றவே பெரிதும் விரும்பினார்கள். எனவே மனம் வைத்தால் எதுவும் நடக்கும்.

படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் "என்று கூறினார்.

'லாக்' படக் குழுவினர் சார்பில் இந்த விழாவில் கேக் வெட்டி இயக்குநர் பாக்யராஜுக்கு  பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவில் நடிகர் விஜய் சூரிய பாலாஜி, மதன் ,படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன், காவல்துறை உயர் அதிகாரியான ராஜகோபால், தொழிலதிபர்கள் ரஜினிகாந்த் சண்முகம் ,ரஞ்சித் கருணாகரன், ஜூலியஸ் கிறிஸ்டோபர்,உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த் சண்முகம், சுண்டாட்டம் பட இயக்குநர் பிரம்மா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில், ரசிகர்களுக்கு விருந்தாக “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது

ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில்,  ரசிகர்களுக்கு விருந்தாக “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், அசத்தலான கிளி...