*டீக்கடையில் உருவானதுதான் குடிமகான் படத்தின் கதை ; நடிகர் விஜய் சிவன்*
*குடிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் ; நடிகை கோமல் சர்மா*
*ஆண்களும் பெண்களும் சமம் அல்ல ; குடிமகான் விழாவில் நகைச்சுவை நடிகர் சதீஷ் அதிரடி பேச்சு*
*நிஜமாகவே மாடு வளர்த்து வாடிவாசலில் இறக்கிவிட்டுத்தான் வருகிறேன் ; ஆச்சர்யப்படுத்திய நடிகை ஷீலா ராஜ்குமார்*
*மன அழுத்தத்திற்கு ஆளானவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள் ; கோமல் சர்மா கோரிக்கை*
*குடிமகான் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் வருத்தம் தான் ; நடிகை ஷீலா ராஜ்குமார்*
*நரேஷ் ஐயர் என்னுடைய வழிகாட்டி ; குடிமகான் விழாவில் நெகிழ்ந்த இசையமைப்பாளர் தனுஜ் மேனன்*
சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். N இந்தப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார்
விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர நாளைய இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.
பாலுமகேந்திராவிடம் சீடராக பணியாற்றிய மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். ஷிபு நீல் BR படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் வெற்றிமாறன், அருண்ராஜா காமராஜ், பொன்ராம் உள்ளிட்ட பிரபல இயக்குனர்கள் வெளியிட்ட நிலையில், இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் திறந்தவெளி அரங்கில் பொதுமக்கள் மத்தியில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் நடிகர்கள் சதீஷ், ஷீலா ராஜ்குமார், கோமல் சர்மா, ஜிபி முத்து மற்றும் யூட்யூப் புகழ் இரட்டையர்களான அருண்-அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நடிகர் நமோ நாராயணன் பேசும்போது, “இதுவரை நான் பணியாற்றிய படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான படக்குழு என்று சொல்வேன். 20 நாட்கள் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தேன். கடைசி நாள் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பு என் பெயர் பொதித்த கேக் ஒன்றை வரவழைத்து என்னை அழைத்து வெட்ட செய்தார்கள். நிஜமாகவே கண் கலங்கி விட்டேன். அதேபோல தயாரிப்பாளரே நம்மை தேடி வந்து உங்களுக்கான சம்பளம் வந்து சரியாக வந்து சேர்ந்து விட்டதா என நேராக உறுதிப்படுத்திய அதிசயமும் இந்த படத்தில் தான் நடந்தது” என்று கூறினார்.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் பேசும்போது, “இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் பணி துவங்கியதில் இருந்து, நான் கூடவே இணைந்து பயணித்திருக்கிறேன். மனதுக்கு ரொம்பவே நெருக்கமான படமாக இது அமைந்து விட்டது. குடிமகான் என பெயர் வைத்திருந்தாலும் 100% இது கமர்சியல் படம் தான்” என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஷீலா ராஜ்குமார் பேசும்போது, “நான் நடித்த பேட்டக்காளி வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பார்த்தவர்கள் அனைவரும் என்னை அவர்கள் வீட்டில் ஒருவராக நினைத்து ஏற்றுக்கொண்டதை நான் மிகப்பெரிய பொறுப்பாக உணர்கிறேன். அதில் பேட்டக்காளி என்கிற ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நான், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நானே வளர்த்த என்னுடைய மாட்டை வாடிவாசலில் இறக்கினேன். அந்த மாட்டின் பெயர் பாஷா.
இந்த குடிமகன் படத்தில் நானும் நடித்திருக்க வேண்டியது. ஆனால் பேட்டக்காளி வெப் தொடருக்கு மொத்தமாக என்னுடைய கால்ஷீட்டை கொடுத்து விட்டதால் இதில் என்னால் நடிக்க முடியாமல் போனது,. அதற்காக இந்த இடத்தில் இயக்குனர் பிரகாஷிடம் எனது வருத்தத்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை கோமல் சர்மா பேசும்போது, “குடிமகன் என டைட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக இந்த நிகழ்வில் நான் குடிமகன்களுக்கு அறிவுரை எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் குடிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள். உங்களுக்கு நெருங்கியவர்கள், நண்பர்கள் அப்படி யாரேனும் இருந்தால் இதுபற்றி அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்து உயர்வது நல்ல விஷயம்.. அதை செய்து பாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பேசும்போது, “நான் தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன். அதிலும் நிறைய முதல் பட இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறேன். அந்த வகையில் இந்த படத்தில் இயக்குனர் பிரகாஷ் தான் விரும்பியபடி காட்சிகளை படமாக்கும் பிடிவாதக்காரர். எந்த அளவுக்கு என்றால் என்னுடைய காட்சிகளை தொடர்ந்து படமாக்கியவர், 48 மணி நேரம் கழித்து தான் எனக்கே பிரேக் விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த படத்தில் நடித்தபோது உடன் நடித்த நடிகர் நமோ நாராயணனுக்கு நான் ரசிகனாகவே ஆகி விட்டேன்” என்று கூறினார்.
இசையமைப்பாளர் தனுஜ் மேனன் பேசும்போது, “இயக்குனர் பிரகாஷும் நானும் 27 வருட நண்பர்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஜி பி முத்து வந்ததும் அவரை பார்த்துவிட்டு என்னை மறந்துவிட்டார் பாருங்கள்.. இந்த மேடையில் அழகான பாடலை பாடிய நரேஷ் ஐயரை என்னுடைய வழிகாட்டி என்று சொன்னால் சரியாக இருக்கும். எனக்காக நான் இசையமைத்துள்ள இரண்டு படங்களிலும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இந்த படத்தில் வினித் சீனிவாசனும் ஒரு பாடல் பாடியுள்ளார்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஜய் சிவன் பேசும்போது, “நாளைய இயக்குனர் மூலம் என்னை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பிரகாஷ். கொரோனா காலகட்டம் ஆரம்பித்த சமயத்தில் தான் இந்த படம் பற்றி பேச துவங்கினோம். லாக்டவுன் ஒரு பக்கம் இருந்தாலும் தினந்தோறும் தவறாமல் கதைபேசி இந்த ஸ்கிரிப்டை உருவாக்கினோம். குறிப்பாக டீக்கடையில் நாங்கள் மூவரும் சந்தித்து பேசி அப்படி உருவானது தான் இந்த குடிமகான் கதை” என்று கூறினார்.
யூட்யூப் மூலமாக புகழ்பெற்ற இரட்டையர்கள் அருண் அரவிந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களது நண்பரான இசையமைப்பாளர் தனுஜ் குறித்து பேசும்போது, “ஒரு காலத்தில் 300 ரூபாய் சம்பளத்தில் ஒரு ஆர்க்கெஸ்ட்ராவில் பணியாற்றிய தனுஜ், இப்போது ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் நீ என்ன சாதித்திருக்கிறாய் என தன்னை நோக்கி கேள்வி எழுப்பியவர்களுக்கு ஒரு சரியான பதிலடி கொடுத்துள்ளார்” என்று கூறினார்கள்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் சதீஷ் பேசும்போது, “தண்ணி, தம் அடிக்காத டீ-டோட்டலர் என்பதால் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதற்காக நானும் இங்கே அறிவுரை சொல்ல நினைத்தேன்.. ஆனால் ட்ரெய்லரில் அதை சரியாக சொல்லியிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் அந்த வயதில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் அதன்பின் அதை நாம் தொடவே மாட்டோம்.. நான் அப்படித்தான் இவற்றில் இருந்து ஒதுங்கினேன்.
இதுபற்றி சில கல்லூரி நிகழ்ச்சிகளில் நான் பேசியிருக்கிறேன். ஒரு பெண்கள் கல்லூரியில் கலந்து கொண்டபோது கூட இதே விஷயத்தை வலியுறுத்தி பேசும்படி அந்த கல்லூரியின் முதல்வர் கேட்டுக் கொண்டது தான் வேடிக்கை.. ஏன் என கேட்டதற்கு ஆண்களுக்கு சமமாக இந்த விஷயத்தில் பெண்களும் வளர்ந்து வருகிறார்கள் என கூறினார். ஆண்களும் பெண்களும் ஒருபோதும் சமமானவர்கள் அல்ல.. பெண்கள் ஆண்களைவிட இன்னும் கொஞ்சம் மேலானவர்கள் தான்.. சொல்லப்போனால் பெண்கள் தெய்வத்திற்கு சமம்” என்று கூறினார்.
இயக்குநர் பிரகாஷ்.N பேசும்போது, “நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. நாளைய இயக்குனர் சமயத்தில் என்னுடன் பணியாற்றிய குழு அப்படியே இந்த படத்திலும் பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். இந்த படத்தில் குடி என்பது ஒரு பகுதி மட்டும்தான். மற்றபடி கமர்சியல் அம்சங்கள் நிறைந்ததாக தான் இந்த படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினருடன் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்” என்று கூறினார்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பார்வதி (விஜே பாரு) சுவாரஸ்யம் குறையாமல் உற்சாகத்துடன் தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜி.பி முத்து பேசும்போது, “இந்த படத்தின் டிரைலரை பார்த்தேன். ரொம்பவே எதார்த்தமாக இருக்கிறது. அதனாலேயே இந்த படம் வெற்றி பெறும்” என்று கூறினார்.