Monday, June 26, 2023

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்! - லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்! - லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்



கல்யாணம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இனி லக்‌ஷிதா மூலமாகத்தான் அவருக்கு அறிமுகம் கிடைக்கும் - நடிகர் சிவக்குமார் பாராட்டு

லக்‌ஷிதாவின் பரதநாட்டிய திறன் கல்யாணத்திற்கு மட்டும் அல்ல தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும் - தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு

தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை,  அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது. அதனால், தான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், சூர்யா என்று பெரிய மனிதர்களுக்கு பிடித்த நபராக வலம் வருகிறார்.

கல்யாணம் அவர்களின் அன்பு பிடியில் சிக்காதவர்கள் இருக்க முடியாது, என்று சொல்லும் அளவுக்கு சினிமா மற்றும் பத்திரிகை வட்டாரத்தில் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கும் கல்யாணம் அவர்களின் மகள் வழி பேத்தி செல்வி.லக்‌ஷிதா மதனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி இன்று (ஜூன் 25) சென்னை தியாகராயா நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது.

இதில், நடிகர் சிவக்குமார், பிரபல பரதநாட்டிய கலைஞர் நிர்த்ய சூடாமணி டாக்டர்.ஸ்ரீனிதி சிதம்பரம்,  நீதிபதி வெங்கட்ராமன், நீதிபதி வைத்தியநாதன், நீதிபதி ஆதிகேசவலு, நீதிபதி கோவிந்தராஜ், நீதிபதி பாஸ்கரன், நீதிபதி விமலா, லக்‌ஷ்மி சிவக்குமார், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, ரஞ்சனி கார்த்தி, பிருந்தா சிவக்குமார், ஐ.ஏ.எஸ் பிரபாகர், வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் ரத்தினசாமி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் நாசர், சுஹாசினி மணிரத்னம், ரம்யா முருகதாஸ், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி பாண்டியன் ஐபிஎஸ், டாக்டர், பாலாஜி, டாக்டர்.குமரன், KNACK Studios நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமானுஜம், KNACK Studios தலைவர் மற்றும் இயக்குநர் ஹரிஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசுகையில் ,”என் நண்பன் கல்யாணத்தின் பேத்தியாக தான் லக்‌ஷிதா இருந்தாள். ஆனால், இன்று முதல் லக்‌ஷிதாவின் தாத்தா கல்யாணம் என்று மாறிவிட்டது. உலம் முழுவதும் லக்‌ஷிதா பேர் வாங்குவார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி இனி லக்‌ஷிதாவின் தாத்தா தான் கல்யாணம் என்று சொல்லும் அளவுக்கு அவள் பின்னிட்டாள்.

அதாவது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடனம் ஆடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல, லக்‌ஷிதா நடனம் ஆடவில்லை, மேடையில் பறந்துக்கொண்டிருந்தாள். பானை மீது ஏறி ஆடியபோது நான் சீட் நுணிக்கே வந்துவிட்டேன். என்ன மாதிரி நடனம். பத்து வருடமாக பரதநாட்டியம் ஆடி வருவதாக சொல்கிறார்கள். லக்‌ஷிதாவின் இத்தகைய சிறப்பான நடனத்திற்கு அவருடைய ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பரதநாட்டியம் எலோரிடமும் போய் சேரும் கலை இல்லை, அப்படி இருந்தும் இந்த கலையை இத்தனை வருடம் காப்பாற்றிய ஷீலா உன்னிகிருஷ்ணனை நான் கைகூப்பி வணங்குகிறேன். 

ஏற்கனவே லக்‌ஷிதாவின் இரண்டு அரங்கேற்ற நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொண்டேன். ஆனால், இப்போது நடந்தது ஒரு முழுமையான அரங்கேற்றம் என்று நினைக்கிறேன். ஜனனியின் பாட்டுக்கு லக்‌ஷிதா ஆடுகிறாரா அல்லது இவருடைய நடனத்திற்கு அவர் பாடுகிறாரா என்று தெரியாதவாறு இரண்டுமே ஒரே நேர்கோட்டில் பயணித்து அசத்திவிட்டது. வாத்தியக்குழுவுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடனக் கலைஞர்களுக்கு கண் மிகவும் முக்கியம், நான் ஒரு ஓவியன் என்பதால் கண்ணை பற்றி நன்றாக தெரியும். அந்த வகையில் லக்‌ஷிதாவின் கண்கள் மீனை விட அழகாக இருக்கிறது. அந்த கண்கள் மூலம் அபிநயங்களையும், பாவங்களையும் லக்‌ஷிதா வெளிப்படுத்திய விதம் மிக சிறப்பாக இருந்தது. பாடல்களில் வருவதை விட லக்‌ஷிதா நடனத்தில் காட்டிய நலினம் மிக அழகாக இருந்தது. 

இறுதியாக நான் ஒரு விஷயத்தை பாராட்டியாக வேண்டும். நான் நிறைய பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். பெரும்பாலும், அறிமுகப்படுத்தும் போது ஆங்கிலத்தில் தான் சொல்வார்கள். ஆனால், இங்கு அனைத்து பாடல்களையும் தமிழில் சொல்லி, தமிழில் விளக்கும் கொடுத்தது பிராமாதமாக இருந்தது. இப்படி தான் செய்ய வேண்டும். நிறைய பேருக்கு ஆங்கிலம் புரியாது, எனக்கு கூட தான், அதனால் இதுபோல் தமிழில் பாடல்களையும், அதன் விளக்கங்களையும் சொல்லும் போது என்னைப் போன்றவர்களாலும் ரசிக்க முடியும். மிக சிறப்பான முயற்சி இது, நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

சமீபத்தில் நான் பார்த்த பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக லக்‌ஷிதாவின் அரங்கேற்றம் அமைந்திருக்கிறது. இதை அரங்கேற்றம் என்று சொல்வதை விட ஒரு முழுமையான பரதநாட்டிய நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். மிக சிறப்பாக இருந்தது. லக்‌ஷிதாவின் ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு பேசுகையில், “உச்சியில் இருந்து கழுத்து வரை ஆடுவதை கதக்களி என்பார்கள். கழுத்தில் இருந்து இடுப்பு வரை ஆடுவதை மணிப்புரி என்பார்கள். இடிப்பில் இருந்து பாதம் வரை ஆடுவதை கதக் என்பார்கள். இது முகலாயர்கள் காலத்தில் இருந்து வந்தது. ஆனால், உச்சியில் இருந்து பாதம் வரை ஆடுவது தான் பரதநாட்டியம். இந்த பரதநாட்டியம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இதை முதலில் கூத்தர் என்றும், விரலியர் என்றும் கூறுவார்கள். பரத முனிவர் தான் பரதநாட்டியத்தை கண்டுபிடித்ததாக வட நாட்டவர் சொல்வார்கள். ஆனால் அது செவி வழி வந்த செய்தி, அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. 

ஆனால், முதல் முதலில் இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்தமிழ் உருவாகும் போது இந்த நடனத்தை கூத்தர் என்றும், விரலியர் என்றும் கூறுவார்கள். இறைவன் ஆடக்கூடிய நடனத்தை 108 கர்ணத்தை சிதம்பரத்தில் இருக்க கூடிய தில்லை நடராஜர் கோயிலில் இடது பாதத்தை தூக்கி வைத்தது போல் இருக்கும். ஆனால், மதுரையில் அதே இறைவன் வலது பாதத்தை தூக்கி ஆடுவது போல் இருக்கும். 108 கர்ணங்களுக்கு மேல் நடனத்தில் இல்லை, இந்த 108 கர்ணங்களும் தில்லை நடராஜர் கோயிலில் இருக்கிறது. ஆனால், தஞ்சை மன்னர் ராஜராஜ சோழன் 96 கர்ணங்களை வடித்தார், மீதமுள்ள கர்ணங்களை அவரால் வடிக்க முடியவில்லை, அதற்கு பல காரணங்கள் சொல்வதுண்டு. ஆனால், இப்போது லக்‌ஷிதா மேடையில் ஆடிய நடனத்தை பார்த்து மெய்சிலிர்த்து போனேன். அதை பாராட்ட வார்த்தையே இல்லை.

இப்படி ஒரு ஆபாரமான நடன திறன் கொண்ட லக்‌ஷிதாவின் ஆசிரியருக்கு என் வாழ்த்துகள். சங்ககால இலக்கியத்தில் ஒருதலை காதலை கைக்கிளை என்று சொல்வார்கள். அந்த கைக்கிளையில் அவர் பிடித்த அபிநயம் அற்புதம். ஒரு மடல் எழுதுகிறார், புறாவை அழைக்கிறார், புறா காலில் மடலை கட்டி பறக்க விடுகிறார், இப்படி ஒரு காட்சியை தனது நடனத்தில் மிக அழகாக உணர்த்தினார்கள். உண்மையிலேயே உலகத் தமிழர்கள் பாராட்டாக்கூடிய விதத்தில் நடனமும், பாடல்களும் அமைந்திருந்தது. 

என் உடன்பிறவா சகோதரர் கல்யாணம் அவர்களுக்கு இப்படி ஒரு பேத்தி இருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் என்றே சொல்ல வேண்டும். நாட்டிய பேரொளியை கண்டு நாம் மகிழ்ந்திருக்கிறோம், வைஜெயந்தி மாலாவை கண்டு மகிழ்ந்திருக்கிறோம்.  ஆனால், குழந்தை லக்‌ஷிதா தனது நடன திறமையால் உலக அளவில் பேரும், புகழும் பெருவார், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.

டாக்டர்.ஸ்ரீனிதி சிதம்பரம் பேசுகையில், “இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த ஷீலா மற்றும் லக்‌ஷிதாவின் பெற்றோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக சிறப்பான ஒரு நடன நிகழ்ச்சியாக இந்த அரங்கேற்றம் அமைந்திருந்தது. நான் நடனக் கலைஞர் என்பதால் சொல்கிறேன், லக்‌ஷிதாவின் நடனம் தனித்துவமாக இருந்தது. தன்னம்பிக்கை, புத்துணர்ச்சி, அழகு என அனைத்தையும் சேர்த்த ஒரு அழகான மற்றும் தனித்தன்மையுடன் கூடிய ஒரு நடனத்தை லக்‌ஷிதா இன்று அரங்கேற்றியிருக்கிறார்.

லக்‌ஷிதாவின் இந்த நடன திறனுக்கு அவருடைய ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணன் மிக முக்கியமானவர் என்பதை நான் அறிவேன். அவருடைய பள்ளியும், அதில் பயிலும் மாணவர்கள் பலர் சிறந்த நடனக் கலைஞராக உருவாகியிருக்கிறார்கள். அவர்களைப் போல் லக்‌ஷிதாவும் சிறப்பாக நடனம் ஆடியதோடு, அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகமாக இருந்தது. பக்தி, நாட்டுப்புற பாட்டு என பல வகையிலான பாடல்களுக்கு மிக அழகான நடனம் ஆடி இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டார்.

பரதநாட்டிய கலை ஒரு நடனம் மட்டும் அல்ல உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் மற்றும் வலிமை தரக்கூடிய ஒரு சிறந்த கலையாகும். இந்த கலையை பயின்று வரும் இளைஞர்களுக்கு கடவுளின் ஆசி எப்போதும் உண்டு. இன்று ஒரு சிறப்பான அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்திய லக்‌ஷிதாவுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. அவர் வாழ்வில் அனைவருடைய ஆசீர்வாதங்களை பெற்று மேலும் பல உயரங்களை தொடுவார், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

திருக்குறளுக்கு மெட்டு அமைத்து, அதற்கு ஏற்ப லக்‌ஷிதா நடனம் ஆடியது பரதநாட்டிய கலையில் இதுவரை யாரும் செய்திராத ஒன்றாகும். முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் மூலம் லக்‌ஷிதாவின் இந்த அரங்கேற்ற நிகழ்ச்சி பரதநாட்டிய கலையின் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விருந்தினர்கள், பத்திரிகையாளர்கள் என நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு லக்‌ஷிதாவை வாழ்த்திய அனைவருக்கும் KNACK Studios திரு.கல்யாணம் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் செல்வி.லக்‌ஷிதாவின் பெற்றோர் லதா மற்றும் மதன் இசைக் கலைஞர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கெளரவித்ததோடு, வந்திருந்து வாழ்த்திய சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்தனர்.

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் !

 கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் ! பட முன் வெளியீட்டு நிகழ்வில், மா...