Friday, June 30, 2023

போர் தொழில் திரைப்பட வெற்றி விழா!*

*போர் தொழில் திரைப்பட வெற்றி விழா!*

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்  சுனில் பேசுகையில், '' போர் தொழில் டிரெய்லர் வந்தபோது இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் எனச் சொன்னேன். 30 நாட்களைக் கடந்து இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. விக்னேஷ் ராஜா மிக அற்புதமான படத்தைத் தந்துள்ளார். அசோக் செல்வன், சரத்குமார் நல்ல நடிப்பைத் தந்துள்ளார்கள். இது தமிழில் எங்களுக்கு அறிமுகப்படம். ஒரு நல்ல தரமான படத்தைத் தந்தது மகிழ்ச்சி. உங்கள் ஆதரவால் தான் இந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.  தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. ''என்றார்.


சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், '' இந்தப் படம் எங்களுக்கான வெற்றி மட்டும் இல்லை, தமிழ் சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது, நல்ல படத்திற்கு ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். அது போல இந்த படத்திற்கும் ஆதரவு கொடுத்தீர்கள். நன்றி, படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது, இது ஒரு சாதாரண விஷயமில்லை, அது மட்டுமல்ல.. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் எங்களுக்கு நன்றி கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது , இயக்குநர் ஒரு அசாத்திய வெற்றியைக் கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்துள்ளார், இவர் கண்டிப்பாக ஒரு சிறந்த இயக்குநராக வருவார் என்பதில் ஆச்சரியம் இல்லை , தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நன்றி. அவருக்குத் தேவையான வெற்றியை இப்படம் கொடுத்துள்ளது, பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி.'' என்றார்.


தயாரிப்பாளர்களில் ஒருவரான E4 எக்ஸ்ப்ரிமெண்ட்ஸ் எல் எல் பி முகேஷ் R மேத்தா பேசுகையில், '' உங்கள் அனைவருக்கும் நன்றி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள் தான். அடுத்ததாக ரசிகர்கள் அவர்கள் படத்தின் டிவிஸ்ட்டை உடைக்காமல் படத்தைப் பாராட்டி, வரவேற்பு தந்தார்கள். அசோக் செல்வன், சரத்குமார் அவர்களின் கதாபாத்திரத்தைப் புரிந்து அட்டகாசமாக நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா மிக அற்புதமாக இப்படத்தை இயக்கியுள்ளார். ஓடிடி இருந்தாலும்  நல்ல கதைகள் கண்டிப்பாக ஓடும், மக்கள் திரையரங்கத்திற்கு வருவார்கள் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. தொடர்ந்து இது மாதிரி நல்ல படங்களைத் தருவோம் நன்றி'' என்றார் . 


ஒளிப்பதிவாளர் கலைச் செல்வன் பேசுகையில், '' நான் பாலு மகேந்திரா சாரின் கல்லூரியில் படித்தேன், அவர் எப்போதும் சொல்வது ஒரு வார்த்தை தான், 'படத்தின் ஸ்கிரிப்ட் தான் படத்தைத் தாங்கும்' என்று சொல்வார், அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, விக்னேஷ் தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருந்தார், அவரின் பார்வை தான் இந்தப்படம், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி'' என்றார் .


விநியோகஸ்தர் தீபா பேசுகையில், ''
எனக்கு முகேஷ், அசோக் செல்வனைப் பல காலமாகத் தெரியும். இந்தப்படம் எங்களிடம் வந்த போதே, இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் எனத் தெரியும். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தொடர்ந்து நல்ல படங்களைத் தந்து வருகிறார்கள். இந்தப்படத்தைச் சின்ன சின்ன நாடுகளில் கூட எங்களால் விநியோகம் செய்ய முடிந்தது. படத்திற்கான வரவேற்பு எல்லா நாடுகளிலும் இருந்தது. இப்படம் இன்னும் யூகே வில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. அசோக் செல்வன், சரத்குமார் இருவரும் தங்கள் முழு ஒத்துழைப்பைத் தந்தார்கள். தொடர்ந்து படத்தை புரமோட் செய்தார்கள். நீங்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. தொடர்ந்து  நல்ல படங்களைத் தருவோம் நன்றி'' என்றார்.


நடிகர் தேனப்பன் பேசுகையில், '' இந்த கம்பெனியை பற்றி நான் பெரிதும் கேள்விப் பட்டதில்லை. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு அனைவருக்கும் தெரியும், படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர், இயக்குநரின் மனைவி எங்கள் அனைவருக்கும் ஒரு வாழ்த்து கடிதம் எழுதினார். அது எனக்கு மறக்க முடியாத தருணம், இயக்குநர் தனக்குத் தேவையானது கிடைக்கும் வரை விட மாட்டார், அது தான் அவருக்கு இப்படி ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது, கண்டிப்பாக அவர் நல்ல நல்ல படங்களை எடுப்பார். அவருக்கு எனது வாழ்த்துகள், படக்குழு அனைவருக்கும் நன்றி'' என்றார்.

பாடலாசிரியர் & எழுத்தாளர் கார்த்திக் நேத்தா பேசுகையில், ''தயாரிப்பாளருக்கு நன்றி. இதை ஒரு வியாபாரமாகப் பார்க்காமல் ஒரு படமாக நம்பி இந்தப் படத்தை உருவாக்கியதற்கு நன்றி, இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடல்தான். அது படத்தின் இறுதியில் வரும். அதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி, இதை நான் நன்றி கூறும் மேடையாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி'' என்றார்.


எழுத்தாளர் ஆல்ஃபிரட் பிரகாஷ் பேசுகையில், '' நிறைய மீம்கள் போர் தொழில் சம்பந்தமாக இணையத்தில் வந்தது. படத்தை மிகப்பெரிய வெற்றி பெறச் செய்துள்ளீர்கள், இவ்வளவு பெரிய வரவேற்பைத் தந்த உங்கள் அனைவருக்கும், ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்'' என்றார்.


ஒலிக்கலவை பொறியாளர் ஹரி பேசுகையில், '' திரில்லர் படத்திற்குத் தேவை சவுண்ட் மிக்ஸிங் தான். இந்தப் படத்தில் இயக்குநருக்கு அதில் ஒரு தெளிவு இருந்தது. எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.


திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், '' ஒரு நாள் மிட் நைட் அசோக் செல்வன் போன் செய்தார். 'பிரதர் நான் போர் தொழில் என்று ஒரு படம் செய்கிறேன். படத்தில் ஒரே ஒரு பாடல் தான். ஆனால் நீங்கள் இந்தப்படத்துடன் இணைய வேண்டும்' என்றார். டிரெய்லர் பார்த்தவுடனே இந்தப்படம் நல்ல படமாக இருக்குமெனத் தோன்றியது. பொதுவாக அறிமுக இயக்குநர் படங்களுக்கு  நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம். இந்த வருடம்  'டாடா' , 'குட் நைட்' படங்களைத் தொடர்ந்து இந்தப்படத்திலும் இணைந்தது மகிழ்ச்சி. அசோக் செல்வனுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி'' என்றார்.


நடிகை லிசா சின்னு பேசுகையில், '' முதல் முறையாக நான் ஒரு மேடையில் நிற்கிறேன். மிகவும் பெருமையாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பல நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர், பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் தான் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள், இயக்குநர் விகனேஷ் ராஜா என்னைத் தேர்வு செய்யும்போதே சொன்னார். இது சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும், உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்குமென்று சொன்னார். அது நடந்து விட்டது, அதற்கு நன்றி , படக்குழு அனைவருக்கும் நன்றி'' என்றார்.


சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு பேசுகையில், '' தேனப்பன் சார், என்னைக் கஷ்டப்படுத்தி விட்டார்கள் என்றார். என்னையும் கடுமையாக கஷ்டப்படுத்தினார்கள். நான் வேலை பார்த்த மலையாள படத்தைப் பார்த்து என்னைக் கூப்பிட்டார்கள். இயக்குநர் பிழிந்தெடுத்துவிட்டார். ஆனால் படத்தை அற்புதமாக உருவாக்கினார். படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.


நடிகர் சுந்தர் பேசுகையில், '' விக்னேஷ் சார் என்னைக் கூப்பிட்டுப் பேசியபோது என்னை நடித்துக் காட்டச் சொன்னார். நான் நிறையப் படங்கள் செய்துள்ளேன் என்றேன். ஆனால் எனக்காகச் செய்து காட்டுங்கள் என்றார். அப்போதே என்னை பெண்டு நிமிர்த்த ஆரம்பித்து விட்டார். சரத்குமார் சார் சிரிக்காமல் நடித்த ஒரே படம் இது தான். அவரால் சிரிக்காமல் இருக்க முடியாது. இப்படத்தில் அவரை பார்த்து ரசித்தோம். படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றி'' என்றார்.


நடிகர் ஹரீஷ் பேசுகையில், '' படம் ரிலீஸுக்கு அப்புறம் என்னோட ஃப்ரண்ட்ஸ் என்னைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். நான் நடித்ததில் மிக வித்தியாசமான கேரக்டர் இது தான். என் பெற்றோருக்குப் பிடித்த படம் இது தான். என்னைப் போன்ற புதுமுகத்துக்கு திறமையை மதித்து இம்மாதிரி கேரக்டர் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த மாதிரி படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு நன்றி'' என்றார்.


நடிகை நிகிலா விமல் பேசுகையில், '' இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருந்தது, இந்தப் படத்தின் மூலம் பலருக்கு நான் அறிமுகமாகியுள்ளேன், படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி , இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்குத் தூக்கமே இல்லை. படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் இருந்தது, எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. அசோக் மற்றும் சரத்குமார் சாருக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள், இந்த கதாபாத்திரத்தை எழுதிய இயக்குநருக்கு நன்றி, E4 என்டர்டெயின்மென்ட் இன் முதல் படத்தில் நான் இருந்தேன். அதே போல் இந்தப் படமும் வெற்றி என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, 
ஊடக பத்திரிக்கையாளர் அனைவருக்கும் என் நன்றி'' என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ''இது சக்ஸஸ் மீட் என்பதை விட தேங்ஸ் மீட் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இப்படத்தை தங்கள் படமாகக் கொண்டாடினார்கள். ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தைப் போட்டுக்காட்டினோம். யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விடுவார்களோ..! என்ற பயம் இருந்தது. ஆனால் ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், பாஸிட்டிவான விமர்சனம் தந்தார்கள். உங்கள் எல்லோர்க்கும் நன்றி. கடந்த வருடம் நிறையப் படங்கள் செய்தேன். படம் நல்ல படமென்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகவில்லை. எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் செய்கிறோமா..? என கேள்வி வந்தது. அதற்கெல்லாம் பதிலாக இந்தப்படம் வந்துள்ளது. எல்லோரும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சரத்குமாருடன் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. விக்னேஷ் ராஜாவை அனைவரும் பாராட்டுவதைக் கேட்கும்போது, நண்பனாக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவனோடு குறும்பட காலத்திலிருந்து பழகி வருகிறேன், தான் என்ன எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பான். அவன் இன்னும் உயரம் செல்வான். தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு படம் எடுத்ததற்கு நன்றி. ஒரு வசனம் சொல்லி முடிக்கிறேன்,  இந்தப்படத்தில் ஒரு வசனம் வரும் “உன் வேலையைச் சரியா செஞ்சா மரியாதை தானா வரும்”  அனைவருக்கும் நன்றி'' என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ''விக்னேஷ் ஒரு நல்ல இயக்குநராக வருவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதை விடப் பெரிய இயக்குநராக வந்து விட்டார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இயக்குநர் அனைவரையும் செதுக்கி இருந்தார். தனக்குத் தேவையான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார். இயக்குநர் ஒரு ஹாலிவுட் தரத்தை இப்படத்திற்குக் கொடுத்துள்ளார். இந்தப் படமும் ஹாலிவுட் பட வெற்றி போலப் பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இன்றும் பல திரையரங்கில்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது ஒரு புதிய சாதனை படைக்கும். விக்னேஷ் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அசோக் ஒரு நல்ல நடிகர் மற்றும் நடிகை நிகிலா அருமையாகத் தனது கதாபாத்திரத்தை நடித்துள்ளார். படக்குழு அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை நம்பி படமாக்கியதற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் மிகவும் அற்புதமாகப் பணி செய்துள்ளார். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்குக் கிடைத்துள்ளது. படக்குழு அனைவருக்கும் நன்றி. இதையெல்லாம் தாண்டி பத்திரிக்கையாளர்கள் உங்களுக்குத்தான் மிகவும் நன்றி கூற வேண்டும். உங்களின் கருத்துதான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த வெற்றிக்கு நீங்கள் தான் காரணம் நன்றி'' என்றார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், '' என்னோட முதல் நன்றி தயாரிப்பாளர்களுக்கு  தான். இந்தகதையை கேட்டு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. அப்ளாஸ் படம் ஒப்பந்தமானவுடன் படத்தை கமர்ஷியல் ஆக்குகிறோம் என கெடுக்காமல், நீங்கள் நினைத்ததை..  எழுதியதை... எடுங்கள் என்றார்கள். அறிமுக இயக்குநருக்கு இது எவ்வளவு பெரிய வரமென்பது உங்களுக்கு புரியும். யுவராஜ் பம்பரமாக சுழன்று வேலை செய்தார். சக்திவேல் சார் ஒவ்வொரு படத்தையும் பக்காவாக டிசைன் செய்கிறார். அவருக்கு நன்றி. தீபா மேடமுக்கு நன்றி. எடிட்டர் ஶ்ரீஜித் சாரங் மிக அட்டகாசமாக செய்துள்ளார். இசையில் ஜேக்ஸ் பிஜாய் மிரட்டியிருந்தார். அவர் தான் அடம்பிடித்து படத்தின் கடைசியில் பாட்டு வைத்தார். இப்போது அந்த பாட்டில்லாமல் அந்தப்படத்தை நினைக்க முடியவில்லை. சவுண்டிங்கில் மிரட்டி விட்டார். படம் முழுக்க அதன் உணர்வை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது இசையும் சவுண்டும் தான். அதை மிகச்சிறப்பாக செய்தார்கள். இந்தப்படத்தில் உழைத்த அத்தனை பேரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை 2010 ல் நடப்பதாக எடுத்தோம். அதற்கான சிஜி படம் முழுக்க இருக்கிறது. உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் எல்லோருக்கும் நன்றி. ஆல்ஃபிரட்டையும் என்னையும் தனியாக மனதில் பிரித்து பார்க்க முடியவில்லை. நாங்கள் இருவருமே ஒரே ஆள் தான். இப்படி ஒரு ரைட்டர் கிடைப்பது வரம். நிகிலா விமல் கேரக்டர் அவர் கதையில் இல்லாத பலத்தை நடிப்பில் கொண்டு வந்தார்.  அசோக் செல்வன்  காலேஜ் படிக்கும் போதிருந்து தெரியும், அப்போதே யாராவது குறும்படம் எடுத்தால் ஓடிப்போய் நடிப்பான். அப்போது அவன் ஏற்படுத்திய நெட்வொர்க் இப்போது எல்லோரும் இயக்குநர்களாக இருக்கிறார்கள். இன்னும் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்துவான். சரத்குமார் சாரை நன்றாக நடிகை வைத்துள்ளேன் என்கிறார்கள். ஆனால் 150 படத்தில் நடித்தவருக்கு என்ன சொல்ல முடியும்... இந்தப்படத்தில் செய்தது எல்லாமே அவரே செயத்தது தான். என்னை விட அவருக்கு தான் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. சரத்பாபு சார் முதலில் நடிப்பாரா ?, அவருக்கு புரியுமா? என்று பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக அப்டேட்டாக இருந்தார். அவர் கேட்ட கேள்வியால் படத்தில் சில பகுதிகளை மாற்றி எழுதினோம். அவர் படம் பார்க்க முடியாதது வருத்தம். இறுதியாக ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தை போட்டுக்காட்டலாம் என்ற போது... யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விட்டால்..!  என்ற பயம் வந்தது. சக்தி சார் அப்படி செய்ய மாட்டார்கள் என்றார். அதேபோல்  ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், படம் பிரீமியர் ஆனவுடனே இணையத்தில் படத்தை பற்றி புகழ்ந்து எழுத ஆரம்பித்து விட்டார்கள். விளம்பரம் செய்யாத ஒரு படம், பத்திரிக்கை விமர்சனங்களால்.. ரசிகர்களால் ஓடும் என்பதற்கு இந்தப்படம் உதாரணம். அனைவருக்கும் நன்றி'' என்றார்.

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் !

 கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் ! பட முன் வெளியீட்டு நிகழ்வில், மா...