*நடிகர் மம்முட்டி நடித்த ‘பலுங்கு’ திரைப்படம் 17ஆவது வருடத்தை நிறைவு செய்கிறது!*
நடிகர் மம்முட்டி நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான ’பலுங்கு’ திரைப்படம் 17 வருடங்கள் நிறைவு செய்திருக்கிறது என தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸ்ஸி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இப்படம், நுகர்வோர்களை ஈர்ப்பதற்கான உத்திகளையும், இந்த நகர வாழ்க்கை எப்படி ஒரு சாதாரண விவசாயியின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதையும் விளக்குகிறது. மக்களின் உண்மையான வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்தத் திரைப்படம் கட்டாயம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் பலருக்கும் பரிந்துரைக்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் மம்முட்டி சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதை வென்றார் மற்றும் மோனிசென் பாத்திரத்திற்காக தேசிய விருதுக்கான பரிந்துரையிலும் இந்தப்படம் இடம்பெற்றிருந்தது.
படத்தின் ஆழமான தாக்கம் மற்றும் கதைக்கான உத்வேகம் பற்றி இயக்குநர் பிளெஸ்ஸி பேசியதாவது, "பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு கொட்டாரக்கரையில், ஒரு கடையின் முன்பு இரண்டரை வயது குழந்தை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது. என் மனதை பாதித்த இந்த சோகமே ‘பலுங்கு’ திரைப்படத்திற்கான உத்வேகமாக அமைந்தது. இது போன்ற கொடுமைகளுக்கு எதிரான மோனிசெனின் கிளர்ச்சி மற்றும் அழுகைக்கு இப்போது பதினேழு வயது. துரதிர்ஷ்டவசமாக இன்றும், இந்த மாதிரியான சம்பவங்கள் அன்றாடம் தொடர்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் அழுகைகள் இழப்பையும் வலியையும் மட்டுமே எதிரொலிக்கின்றன” என்றார்.
இயக்குநர் பிளெஸ்ஸியின் இயக்கத்தில் அடுத்து, பிரித்விராஜ் சுகுமாறன் நடிப்பில் ‘தி கோட் லைஃப்’ திரைபப்டம் உலகம் முழுவதும் ஏப்ரல் 10, 2024 அன்று வெளியாக இருக்கிறது. ‘பலுங்கு’ திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.