நகைச்சுவையில் கலக்கும் பாட்டி சொல்லைத் தட்டாதே திரைப்படம்
விஷ்ணு பிரியா சஞ்சய் பிலிம்ஸ் சார்பாக சஞ்சய் பாபு தயாரிப்பில் வெளி வந்திருக்கும் திரைப்படம் பாட்டி சொல்லை தட்டாதே இயக்குனர் ஹேம சூர்யா என்பவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது. மிர்ச்சி விஜய் kpy பாலா,நளினி, பாண்டிய ராஜன், எம்.எஸ்.பாஸ்கர், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் ரசித்து மகிழும் வகையில் இதன் வசனத்தை சுகுண குமார் எழுதியிருக்கிறார். இவர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பல காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப்படம் குறித்து இயக்குனர் ஹேம சூர்யாவிடம் பேசினோம்.
உங்களுடைய திரையுலகப் பயணம் எப்படி அமைந்தது ?
எனக்கு சொந்த ஊர் விழுப்புரம். நான் பிறந்தது பாண்டிச்சேரியில். சினிமா ஆசையில் சென்னை வந்து இயக்குநர் ஆர்.கே.கலைமணி,இயக்குநர் விடுதலை, இயக்குனர் ஈ. ராம்தாஸ். சிவசக்தி பாண்டியன், ஆகியோரிடம் வேலை பார்த்தேன். தைபொறந்தாச்சு, சூப்பர் குடும்பம் போன்ற படங்களில் பணியாற்ற ஆரம்பித்து நிறைய படங்களில் வேலை பார்த்தேன். கன்னடம், தெலுங்கு திரைத்துறையில் தொடர்பு கிடைத்து அங்கும் நிறையப் படங்களில் வேலைபார்த்தேன். சிவான்ணா, உபேந்திரா, சுதீப் உட்படப் பல பெரிய ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணினேன். நிறைய அனுபவம் கிடைத்தது. தமிழில் யாரிந்த தேவதை என்ற படத்தை இயக்கியிருக்கிறேன். படம் நிறைவு பெற்று வெளியாக இருக்கிறது. கன்னடத்தில் ராஜவம்சம் என்ற படம் என் திரைக்கதையில் வெளியாகியிருக்கிறது. கத்தலு மனசன்னா என்ற படத்தை இயக்கி அதுவும் வெளியாகியிருக்கிறது.
பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற டைட்டில் வைக்க முக்கிய காரணம் என்ன ?
கதையின் அடி நாதம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த கதைக்கு சிறந்த டைட்டில் பாட்டி சொல்லை தட்டாதே என்பதை முடிவு செய்து ஏவி.எம் இடம் அனுமதி பெற்றோம், அன்பை தவிர,பணம் இல்லாமல் வாழும் பேரன்,பணத்தை தவிர, அன்பு இல்லாம ல் இருக்கிற பாட்டி, இவர்கள் இரூவருக்கு இடையே ஏற்படும் பாச போராட்டம் தான் கதை , அன்பைத்தேடி அலையும் கதாநாயகன், நிறைய பணம் இருந்தும் பாசத்திற்காக ஏங்கும் பாட்டியும் சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பதைப் படத்தில் சொல்லியிருக்கிறேன். பாட்டியாக நளினி நடித்திருக்கிறார். இதற்கு முன்பு வெளியான பாட்டி சொல்லைத் தட்டாதே திரைப்படத்தில் மனோரமா ஆச்சி நடித்திருப்பார். அந்த இடத்தில் நடிக்கச் சரியான நடிகையாக நளினி அவர்கள்தான் இருப்பார் என்பதால் அவரிடம் பேசினோம். கதையைக் கேட்டு விட்டு நடிக்கச் சம்மதித்தார். படத்தில் தனது முத்திரை நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த தலைப்பிற்கு எப்படி அனுமதி கிடைத்தது ?
இப்படி ஒரு கதை என்றவுடன் இதற்குச் சரியான டைட்டில் இதுதான் என்பதை முடிவு செய்து விட்டோம். இதற்காக ஏவி.எம். நிறுவனத்திடம் பேசியபோது ஒரு குழுவிடம் கதையைச் சொல்லச் சொன்னார்கள். அவர்களிடம் கதை சொல்லி விட்டுக் காத்திருந்தோம். சில நாட்கள் கழித்துக் கதை நன்றாக இருக்கிறது என்று கூறி ஏவி.எம். நிறுவனத்திலிருந்து எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்தார்கள். அவர்களின் சினிமா மீது வைத்திருக்கும் பக்தி வியக்க வைத்தது.
இதில் உங்களுடன் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிச் சொல்லுங்கள் ?
படத்திற்கு பலமாக இருப்பதே படத்தின் வசனங்கள்தான் இதை சுகுண குமார் எழுதியிருக்கிறார். கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தார். ஜன்னல் ஓரம் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர். அதே போலப் படத்தின் ஜீவனாக இருப்பது ஒளிப்பதிவும், இசையும் தான், கேமாரா கே.எஸ்.செல்வராஜ் தன்னுடைய அனுபவத்தைத் திரைப்படத்தில் காட்டியிருக்கிறார். அதே போல இசை. ரவி ஷங்கர் அருமையான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். கோலி சோடா ரம்ம கலக்கி குடிக்கிறான். என்ற அந்தப் பாடல் யூ டியூபில் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து பார்க்கப்பட்டிருக்கிறது. படத்தொகுப்பு வேலையை ஜி.சசிகுமார் செய்திருக்கிறார். அதே போல என்னுடைய இணை இயக்குனர் ரவி கணேஷின் உழைப்பு மறக்க முடியாதது. , இந்த இப்படி படத்தில் எல்லோரும் அனுபவம் வாய்ந்த திறமையானவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். சினிமாவில் மிகப்பெரிய நிறுவனமான ஏவி.எம்,. வாழ்த்து சொல்லியிருக்கும் இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றிருக்கிறது. இந்தப்படம் இவ்வளவு வெற்றியடைய முதல் காரணமாக இருந்தது தயாரிப்பாளர் சஞ்சய் பாபு அவர்கள் தான். அவர் எங்கள் குழுவுடன் இணைந்த பிறகு படத்திற்கு புதிய அடையாளம் கிடைத்து விட்டது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் ஆதரவு என்ன சொல்கிறது ?
இன்றைக்கு குடும்பத்துடன் திரையரங்கத்துக்கு வந்து படம் பார்க்கும் சூழல் இல்லாமல் இருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கதை முக்கியமாக இருக்கிறது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கதை இந்தப் படத்தில் இருப்பதால் குடும்பத்தினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நாயகன் மிர்ச்சி விஜய், நாயகி அனு ஷீலா, பாண்டிய ராஜன், நளினி எம்.எஸ்.பாஸ்கர் இவர்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இம்மாதிரியான நல்ல கதைகளுக்கு மக்கள் ஆதரவு கொடுத்திருப்பது நம்பிக்கையைக் கொடுக்கிறது என்றார் இயக்குனர் ஹேம சூர்யா.