*'வாழை' படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே*
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளில் இருந்து பெரும் பாராட்டுகளை பெற்ற 'வாழை' திரைப்படத்தில் வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து ஜொலித்து வரும் ஜே எஸ் கே.
இது குறித்து பேசிய அவர், "இந்த சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும், திரைப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களுக்கும் 'வாழை' படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
இந்த திரைப்படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் தங்களது விமர்சனங்களில் எனது நடிப்பை பற்றி குறிப்பிட்டு பாராட்டி இருந்தனர். அவர்களின் ஊக்கத்திற்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். திரையுலகில் எனது ஆரம்ப காலம் முதல் உறுதுணையாக இருந்து வரும் பத்திரிகையாளர்கள் தற்போது என்னுடைய நடிப்பு பயணத்திலும் ஆதரவாக இருப்பது மிக்க மகிழ்ச்சி. பெரும் ஆதரவளித்துள்ள ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
'வாழை' படத்தில் நடித்துள்ள நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், பொன்வேல், ராகுல், அம்மாவாக நடித்த ஜானகி, புரோக்கராக நடித்த பத்மன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள். பொன்வேலுக்கு தேசிய விருது கிடைப்பது உறுதி என்று நம்புகிறேன். படத்தின் பக்கபலமாக இருந்த ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் அவர்களுக்கும், சிறப்பான இசையை வழங்கிய சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும், ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள், குறிப்பாக உதவி, துணை இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
சிறந்த படைப்புகளுக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள் என்று கூற்றுக்கு உதாரணமாக 'வாழை' திரைப்படத்தின் வெற்றி அமைந்துள்ளது. சமூக பொறுப்புள்ள படங்களை தொடர்ந்து இயக்கி வரும் மாரி செல்வராஜ் அவர்கள் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். மாற்று சினிமாவை நோக்கி தமிழ் திரை உலகம் முன்னேறி வரும் சூழலில் இனிவரும் இளம் இயக்குநர்களும் பொறுப்புள்ள படங்களை இயக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தேசிய விருது பெற்ற வெற்றி படங்களை தயாரித்திருந்தாலும் நடிகனாக என்னை 'தரமணி' படத்தில் அறிமுகப்படுத்தியது இயக்குநர் ராம் அவர்கள். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து அவரது இயக்கத்தில் 'பேரன்பு' திரைப்படத்திலும் நடித்திருப்பது பெருமை. இதைத் தொடர்ந்து 'கபடதாரி' திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் சிபிராஜுடனும் தெலுங்கு பதிப்பில் சுமந்துடனும் நடித்திருந்தேன். ஜான் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் ஹர்பஜன் சிங் நடித்த 'ஃபிரெண்ட்ஷிப்', வசந்தபாலன் இயக்கத்தில் 'அநீதி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். இவை அனைத்திற்கும் பத்திரிகையாளர்கள் பாராட்டு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
எதிர்வரும் படங்களை பொறுத்தவரை, நவீன் இயக்கத்தில் அருண் விஜய்-விஜய் ஆண்டனி நடிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். 'புரியாத புதிர்' புகழ் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் 'யாருக்கும் அஞ்சேல்' திரைப்படத்தில் ஒரு முக்கிய எதிர்மறை வேடத்தில் நடிக்கிறேன். நட்டி, ஶ்ரீகாந்த் உடன் 'சம்பவம்' மற்றும் 'சேவியர்' உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறேன்.
இது தவிர, பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி, பத்மன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் 'ஃபயர்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்குகிறேன். இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது. இசை வெளியீட்டு விழா வெகு விரைவில் நடைபெற உள்ளது.
இவை மட்டுமில்லாது, 'குற்றம் கடிதல்' இரண்டாம் பாகத்தில் எஸ் கே ஜீவா (பார்த்திபன் நடித்த 'புதுமைப்பித்தன்' படத்தின் இயக்குநர், விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்' படத்தின் கதை வசனகர்த்தா, 'அநீதி' திரைப்படத்தின் வசனகர்த்தா) இயக்கத்தில் மைய கதாபாத்திரத்தில் 60 வயதை நெருங்கிய ஓய்வு பெறும் தருவாயில் உள்ள அரசு பள்ளி ஆசிரியராக நடிக்கிறேன். தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத படமாக சமூக அக்கறையோடு இது உருவாகிறது.
நடிப்பதற்காக நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் நல்ல இயக்குநர்களின் சிறந்த கதைகளில் சிறப்பான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளேன். மலையாள திரைத் தறையில் இருந்தும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல மாற்று சினிமாக்களுக்கான காலம் தமிழ் திரையுலகில் கனிந்துள்ள நிலையில் இத்தகைய முயற்சிகளை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நான் உளமார நம்புகிறேன்," என்று ஜே எஸ் கே கூறினார்.
***