ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.
‘கே ஜி எஃப் 2’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, சண்டைப்பயிற்சி இயக்குநர் அறிவு, தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதிய வசனகர்த்தா அசோக், ஒளிப்பதிவாளர் புவன் கௌடா, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் கௌடா, நடிகை ஈஸ்வரி ராவ், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் சரண் இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் படத்தின் கதாநாயகனான ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வசனகர்த்தா அசோக் பேசுகையில், '' கே ஜி எஃப் 2 படத்தில் வசனம் எழுத வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் கடுமையாக உழைத்திருக்கிறோம். கே ஜி எஃப் 2 படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு டப்பிங் படம் என்ற உணர்வு ஏற்படாமல், முழுமையாகவே தமிழில் எழுதி பேசி நடித்திருக்கிறார்கள். எனவே இதற்கான சரியான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.
நடிகர் சரண் பேசுகையில்,'' தமிழில் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் பிரசாந்த் நீல் சார், ‘கேஜிஎப் 2’ படத்தில் வாய்ப்பளித்த போது உண்மையில் வியந்தேன். இது போன்ற பிரம்மாண்டமான படைப்புகளில் சிறிய பங்களிப்பை அளித்திருக்கிறோம் என்று மகிழ்ச்சி எனக்குள் இருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களின் எளிமையை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். மனிதநேய மிக்க மனிதர். வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.'' என்றார்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் அறிவு பேசுகையில், '' இயக்குநர் ,தயாரிப்பாளர் ,ஒளிப்பதிவாளர் , ராக்கிங் ஸ்டார் யஷ் ஆகியோர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆக்சன் காட்சிகளில் நாங்கள் நினைத்தவற்றை காட்சிப்படுத்த இவர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருந்தது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தியதை விட, ‘கே ஜி எஃப்’ என்ற கனவு உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்களின் கற்பனைக்காக ஒருங்கிணைந்து பணியாற்றினோம். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பிரம்மாண்டமான படைப்பாக கேஜிஎப் 2 அமைந்திருக்கிறது. பான் இந்தியா படம் என்றோ, டப்பிங் படம் என்றோ எந்த எண்ணமும் ஏற்படாது. இது முழுக்க முழுக்க தமிழ் படம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.'' என்றார்.
நடிகை ஈஸ்வரி ராவ் பேசுகையில்,'' இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு ஏராளமான புது நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் கடும் உழைப்பாளிகள். கே ஜி எஃப் 2 படத்திற்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி.'' என்றார்.
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், '' கடினமாகவும், அர்ப்பணிப்புடனும் உழைத்து கே ஜி எஃப் 2 படைப்பை உருவாக்கி இருக்கிறோம். படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளர் பிரபு அவர்களுக்கு படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் ராக்கிங் ஸ்டார் யஷ் நிஜ நட்சத்திர நாயகனைப் போல் எங்களிடம் அக்கறையும், அன்பும் காட்டினார். தயாரிப்பாளர், இயக்குநர், ராக்கிங் ஸ்டார் மூவரும் இணைந்து உருவாக்கிய கே ஜி எஃப் உலகத்தை காண ஏப்ரல் 14ஆம் தேதி வரை காத்திருக்க முடியாது. இந்த உலகை காண உற்சாகமாக வாருங்கள். கொண்டாடுங்கள். அற்புதமான அனுபவத்தை பெறுங்கள். வெற்றிபெற செய்யுங்கள்.” என்றார்.
படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில், '' கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்திலேயே இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல்வேறு சூழல் காரணமாக இணைந்து பணியாற்ற முடியவில்லை. கே ஜி எஃப் படத்தின் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய கலைஞர்கள் தெளிவான திட்டமிடலுடன் நேர்த்தியாக பணியாற்றியதால் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படைப்பாக இது உருவாகி இருக்கிறது.
எங்களுடைய நிறுவனத்திலிருந்து தயாராகும் திரைப்படங்களை மட்டுமே விநியோகித்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு ஏனைய தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களையும் வினியோகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.
இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், '' கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்திற்கு பேராதரவு வழங்கிய தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேஜிஎப் 2 படத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக அளித்துவரும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் மூலம் இரு மாநில மக்களுக்கு இடையே பரந்த மனப்பான்மை ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன். கே ஜி எஃப் 2 படத்தை வெளியிடுவதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் தயாரிப்பாளர் பிரபு அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அழகான நடிகர்களை வைத்துக்கொண்டு கே ஜி எஃப் போன்ற அற்புதமான கதையை சொல்லியதற்காக நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். கே ஜி எஃப் படத்தின் வெற்றிக்கு என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பு வழங்கினர். அதனால்தான் இந்தப் படத்தை பிரம்மாண்ட படைப்பாக உருவாக்க முடிந்தது. கே ஜி எஃப் என்ற கனவு உலகத்தை காட்சிகளாக நடிகர் யஷ்ஷால் உணர முடிந்தது. அதனால் அதனை அவர் தன்னுடைய தோள்களில் ஒற்றை ஆளாக சுமந்து பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கியிருக்கிறார். இதற்காக அவருக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.” என்றார்.
வசனகர்த்தா அசோக் கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார். சாதரணமாக இது ஒரு டப்பிங் படம் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் கேஜிஎப்பைப் பொருத்தவரை ஒவ்வொரு மொழிக்குரிய முக்கியத்துவத்தை அளித்திருக்கிறோம். ஏனெனில் மொழி என்பது மதிப்புமிக்கது அதற்குரிய மரியாதை தரவேண்டும். ஒட்டு மொத்த படக்குழுவினரும் அதற்கான மரியாதையை வழங்கியிருக்கிறோம். ஒவ்வொரு மொழிக்கேற்ற வகையில், அதன் நேட்டிவிட்டி மாறாமல் வசனங்களை எழுதியிருக்கிறார்கள். இதற்காக வசனகர்த்தாவிற்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேகர் என்ற கலைஞர் எனக்காக தமிழில் பின்னணி பேசி இருக்கிறார் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல் பாகத்திலேயே நான் தமிழில் பின்னணி பேச முயற்சித்தேன். ஆனால் முழுமையான தன்னம்பிக்கை இல்லாததால் பேசவில்லை. இனி வரும் படங்களில் தமிழில் பின்னணி பேச முயற்சிக்கிறேன்.
பாடலாசிரியர் மதுரகவியின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒளிப்பதிவாளர் புவனிடம்,‘ உனக்கு தான் கொஞ்சம் தமிழ் தெரியுமே.. பேசலாமே என்று கேட்டேன். அதற்கு அவர் மைக் முன் சென்றால், கன்னடமும் மறந்துவிடும்’ என்றார். மைக்கில் பேசவில்லை என்றாலும் அவர் திரையில் தன் திறமையை பேச வைத்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளரான கார்த்திக், பட உருவாக்கத்திலும், படப்பிடிப்பிற்கான திட்டமிடலும் தன்னுடைய பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரண் நல்ல திறமையான நடிகர். அவர் நடித்த காட்சி ஒன்றைப் பார்த்து வியந்தேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
நடிகை ஈஸ்வரி ராவ் அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்பொழுது மிகுந்த உற்சாகமாக இருப்பார். ஆனால் காட்சியின்போது க்ஷண நேரத்தில் சோக காட்சியில் நடித்துவிட்டு பிறகு மீண்டும் உற்சாகமாக பழகுவார். அவரின் இந்த மேஜிக்கான திறமை கண்டு வியந்திருக்கிறேன்.
கே ஜி எஃப்பை பொருத்தவரை இயக்குநர் பிரசாந்த் தான் பலம். தயாரிப்பாளர் விஜய் அவர்களும் இதற்கு பக்கபலமாக இருந்தார். இந்த இருவரும் தான் கே ஜி எஃப் உருவாக காரணமாக இருந்தனர். ஏப்ரல் 14ஆம் தேதியன்று கேஜிஎப் 2 வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.