Thursday, April 7, 2022

பான் இந்தியா படம் அப்போதே இருந்தது அதை கெடுத்தது வியாபாரிகள் தான் சிட்தி " (SIDDY) இசை வெளியீட்டு விழா விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் பேச்சு..

பான் இந்தியா படம் அப்போதே இருந்தது அதை கெடுத்தது  வியாபாரிகள் தான்  சிட்தி " (SIDDY)  இசை வெளியீட்டு விழா விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் பேச்சு... !

சூப்பர் ஸ்டார் ரஜினி போன் செய்து என்ன உதவி வேண்டும் என்று கேட்டார் சிட்தி இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K.ராஜன் பேச்சு.

நலிந்த தயாரிப்பாளருக்கு இலவசமாக படம் நடித்து தருகிறேன் சிட்தி பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி வாக்குறுதி...


சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக  திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில்  தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம்  திரில்லராக  உருவாகியிருக்கும்  படம் 'சிட்தி' ( SIDDY )
இந்த படத்தை பயஸ் ராஜ்  (Pious Raj)  எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா  கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.

சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் " சிட்தி " தவிர்க்க முடியாத சூழ்நிலையில்  கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது ? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள்.
அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு,  இப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது. இந்நிலிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா, இன்று சென்னையில்  இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் ..
தயாரிப்பாளர் திரு.மகேஷ்வரன் நந்தகோபால் பேசியது…
 
சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் நன்றி. சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம்  தயாரிப்பில் முதல் படம் சிட்தி. இது ஒரு கூலான திரில்லர் படமாக இருக்கும். புதுமையான படமாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி அக்ஷயா உதயகுமார் பேசியதாவது…

முதல் முறை ஒரு மேடையில் தமிழ் பேசுகிறேன் எல்லோருடைய வாழ்க்கையிலும் முதன் முதலாக நடக்கும் சம்பங்கள் மிக சந்தோசமாக இருக்கும் அப்படிப்பட்ட கனவு தான் எனக்கு “சிட்தி” படம். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

இயக்குநர் சண்முகம் முத்துசாமி  பேசியதாவது…
சிட்தி டிரெய்லர் பாடல் எல்லாம் பார்க்க நன்றாக இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும். படத்தில் ஒளிப்பதிவு மிக நன்றாக இருந்தது. நான் எடுக்கும் படத்திற்காக போட் சீக்வென்ஸ் எடுக்க மிக கஷ்டப்பட்டேன் இப்படத்தில் மிக அழகாக எடுத்துள்ளார்கள். இசையில் நிறைய வித்தியாசம் இருந்தது கதையின் பரபரப்பை இசையில் தந்துள்ளார் ரமேஷ் நாராயணன். கதைக்கு ஏற்ற கதாநாயகனாக இருக்கிறார் ஹீரோ. நாயகியும் மிக அழகாக இருந்தார். டிரெய்லரில் சொல்ல வந்தது மிக எளிதாக புரிந்தது, இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும். சின்னப்படம் பெரிய படம் என ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டே இருக்கிறது இரண்டு படத்திற்கும் ஒரே உழைப்பு தான். ஒரு பெரிய நடிகர் சொன்னதை இங்கு சொல்கிறேன் படம் எடுக்கும் போது சின்ன படம், பெரிய படம் என எதுவும் இல்லை அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் இங்கு எல்லோரும் சின்னதாக இருந்து வந்தவர்களே படம் வெற்றி பெற  வாழ்த்துக்கள் என்றார்.

இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் பேசியதாவது..,

நான் 100 படங்களுக்கு மேல் பல மொழிகளில் வேலை செய்துள்ளேன். ஒரு படத்தில் மொத்த படக்குழுவினரும் நன்றாக இருந்தால் தான் படம் நன்றாக வரும். சிட்தி படத்தில் மிக அற்புதமான குழுவினர் இணைந்துள்ளார்கள். எல்லோருக்கும் படம் பற்றிய புரிதல் இருந்ததாலே தான் இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. இயக்குநர் ஒரு நாள் எனது இந்துஸ்தானி இசையை வேறு ஜானரில் கலந்து பயன்படுத்த போவதாக சொன்னார். அவரது தெளிவு பிரமிக்க வைத்தது. இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

நடிகை கன்னிகா பேசியதாவது…
நான் மனோகரி படத்தில் வேலை செய்துள்ளேன் இந்தப்படம் பற்றி தெரியும் படம் நன்றாக வந்துள்ளது. மிக நல்ல தயாரிப்பாளர் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி.

தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது…
சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் என்றவுடன் எனக்கு ஏ எம் ரத்னம் அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார். ஷங்கரை வைத்து, படமெடுத்து சம்பாதித்து அதே பணத்தை இங்கே படத்திலேயே விட்டுவிட்டு அதை அடைக்க தெலுங்கில் போய் படமெடுத்துகொண்டிருக்கிறார். சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ்  நல்ல பெயர் நன்றாக வரும். இந்த கடின காலத்திலும் தமிழில் படத்தை கொண்டு வரும் தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. மலையாள சினிமாவில் சினிமாவுக்கு உண்மையாக இருப்பார்கள். இப்போது நான் எல்லாம் மலையாளப்படம் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். தமிழ் சினிமாவில்  தயாரிப்பாளரை சிரமப்படுத்துகிறார்கள் அவர்களை காப்பாற்றுங்கள் என்று தான் கேட்கிறேன். கேரளாவில் எல்லா நடிகர்களும் உதவி செய்கிறார்கள். இங்கே யார் உதவி செய்கிறார்கள். கொரோனா காலத்தில் ரஜினி சார்  போன் செய்து என்ன உதவி வேண்டும் எனக்கேட்டு  100 மூட்டை அரிசி கொடுத்தார்.   ராம் சரண் படம் தோற்ற போது நான் ஹீரோ என்பதால் தான் படம் வாங்கினார்கள் என தயாரிப்பாளருக்கு 15 கோடியை திருப்பி கொடுத்தார். ராதே ஷ்யாம் படம் பெயிலர் பிரபாஸ் அந்த படத்திற்கு வாங்கிய பணத்தில் 50 கோடியை திருப்பி கொடுத்துவிட்டார். ராம் சரண், பிரபாஸை வணங்குகிறேன். வெற்றியில் பங்கு கொள்ளும் ஹீரோக்கள் தோல்வியிலும் பங்குகொள்ள வேண்டும். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் RV  உதயகுமார் பேசியதாவது,

படம் என்பது வேறு, குணாதிசியம் வேறு. ஒரு மென்மையானவன், வன்மையானவனாகிறான் என்பதை படமாக எடுக்கலாம். அது தான் இந்த படத்திலும் காட்டபட்டுள்ளது. அப்பாவி எப்படி சிக்கலுக்குள் மாட்டிகொள்கிறான் என்பது தான் கதை. ஹீரோக்களை ராஜன் அதிகமாக திட்டுகிறீர்கள், அது தவறு. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் போன்று சாப்பாடு போட்டவர் யாரும் இல்லை. என்னை கூட்டி போய் சாப்பாடு போட்டவர் விஜயகாந்த். யாரும் பசியுடன் இருப்பது பிடிக்காமல் சாப்பாட்டு போட்டவர் விஜயகாந்த். கொரோனா காலத்தில் இயக்குனர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் போன் செய்து, எவ்வளவு பேர் கஷ்டத்தில் இருக்கீறீர்கள் என கேட்டு உதவியவர்.  எழுத்தாளர் சங்கத்திற்கும் உதவினார். கேட்காமலயே உதவியவர் அஜித் குமார். தோல்வி படத்திற்கு பிறகு அதே நிறுவனத்திற்கு படம் செய்து கொடுப்பவர். வாழ்ந்து பார்த்தால் தான் இயக்குனராக முடியும். சில டூபாக்கூர் இயக்குனர்கள் உள்ளனர். சிவாஜி சார், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பிரபு என்னை அழைத்து சிவாஜி சாரிடம் கதை சொல்ல சொன்னார். நான் முதல் நாள் பார்த்த ஆங்கில படத்தின் கதையை கூறினேன். அதை கேட்ட அவர், இப்போதெல்லாம் பலர் சப்டில் ஆக்டிங், நேச்சுரல் ஆக்டிங் என சொல்கிறார்கள், நான் அதிகமாக நடித்துவிட்டேன், நான் மாற்றி நடிக்க வேண்டும் என்றார் சாகும் தருவாயிலும் நடிப்பில் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்த ஒப்பற்ற கலைஞன் அவர். சிலருக்கு தர்மம் பற்றி தெரியவில்லை. நமக்கு லாரன்ஸ், விஜய், சூர்யா என பலர் உதவினர். அவர்களை வாழ்த்த வேண்டும். இப்பொழுது சினிமாவை பிசினஸ் ஆக்கி விட்டீர்கள். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களை இயக்குனராக்காமல், பணம் கேட்பவருக்கு கொடுத்து கெடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இந்த படம் தமிழ் தயாரிப்பாளர், மலையாள குழு உடன் படம் எடுத்துள்ளார். முன்னர் எல்லா மொழியும் சென்னையில் தான் எடுக்கபட்டது. இப்பொழுது தான் பான் இந்தியா என்ற வார்த்தை உள்ளது. ஆனால் முன்னரே அப்படி தான் எடுக்க பட்டது. அதை மாற்றியவர்கள், வியாபாரிகள். இசையமைப்பாளர் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநரும் தான் கூற வேண்டும். இசையமைப்பாளர் பாடல்களை சிறப்பாக உருவாக்கியுள்ளார் வாழ்த்துக்கள். சமீபத்தில் நான் பார்த்த டிரெய்லர்களில் என்னை விஷுவலாக அசத்தியது இந்தப்படம் தான். படத்தில் எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள். ஹீரோயின் பெயரில் என் பெயரும் உள்ளது வாழ்த்துக்கள் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..,
தயாரிப்பாளர் எனக்கு அறிமுகமானது, மனோகரி படத்தின் மூலமாக தான். அப்பொழுது அவர் கூறியது, மலையாளத்தில் நான் ஒரு படம் முடித்துள்ளேன், ஒரு தமிழனாக நான் தமிழில் முதல் படம் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன். மலையாள திரையுலகம் மிகபெரிய திரையுலகமாக இருக்கும் போது, அவர் தமிழ் மேல் கொண்ட ஈர்ப்பு அளப்பறியது. அவர் இந்த படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று விரும்பினார். இயக்குநருடன் நான் பேசிய வார்தைகள் குறைவு தான். பின்னர் இசையமைப்பாளர் பற்றி கூறிய போது, அவர் ஒரு மெலடி கிங் என கூறினார். அவர் சிறப்பாக வேலை செய்துள்ளார். மொத்த குழுவும் அயராத உழைப்பை தந்துள்ளனர்.  படத்தின் நிகழ்வை சென்னையில் வைக்கும் போது, யாரையாவது அழைக்கலாம் என்றபோது ராஜன் சாரை அழையுங்கள், உதயகுமார் சாரை அழையுங்கள் என்றேன். எல்லா நிகழ்வுகளுக்கும் இருவரும் வருகிறார்கள் என்ற சோர்வு பத்திரிக்கையாளருக்கு இருக்கும். சினிமாவில் யாரும் தோற்றுவிட கூடாது என நினைப்பவர்கள் அவர்கள். அவர்கள் அருகில் அமர்வது எனக்கு மகிழ்ச்சி. படத்தின் ஒளிப்பதிவு மிகவும் கடினமானது. கடலில் எடுத்த காட்சிகள் மிகவும் கடினமாது. தயாரிப்பாளரிடம் நான் ஓடிடிக்கு போகலாம் என கூறிய போது, அவர் தியேட்டர் தான் என்று உறுதியுடன் கூறினார். காரணம் அவர் இயக்குனராக வேண்டும் என சென்னை வந்தவர். அதனால் நான் சாதிக்க முடியாததை நிகழ்த்தி காட்ட, தயாரிப்பாளராக மாறியவர். படம் கண்டிப்பாக வெற்றி பெறும். வாழ்த்துக்கள் நன்றி.


நடிகர் ஆரி பேசியதாவது…,
நான் உள்ளே வரும் போதே யாரார் வந்திருக்கிறார்கள் என  கேட்டேன் ராஜன் சார், உதயகுமார் சார் வந்திருக்கிறார்கள் என்றார்கள், அப்போ நான் போய்விடுகிறேன் அவர்களே எல்லாவற்றையும் பேசிவிடுவார்கள் என்றேன். சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் உதவாத போது, அப்படத்திற்கு ஜாமின் தரும் முதல் ஆட்களாக அண்ணன் ராஜன் அவர்கள் இருக்கிறார்கள். அண்ணன் ஏன் எல்லா பிரச்சனையும் பேசுகிறார் என்றால் அவருக்கு அவ்வளவு பிரச்சனை இருக்கிறது. அண்ணனும் நானும் பேசிக்கொண்டிருக்கும் போது ஒன்று ஞாபகம் வந்தது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும்,  ஒரு நலிந்த தயாரிப்பாளரை காட்டுங்கள் ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன். இதே உதவியை நான் நடிகர் சங்கத்திற்கும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த இயக்குனரும்  நானும் சேர்ந்து ஒரு படம் செய்வதாக இருந்தது ஆனால் அதை தடுத்தது மோடி தான், டிமானிடைசேசன் வந்தது அது படத்தை பாதித்து விட்டது. நீங்கள் கேஜிஎஃப் ரசிகராக இருந்தாலும் ஓகே பீஸ்ட் ரசிகராக இருந்தாலும் ஓகே ஆனால் படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். இந்தப்படம் டிரெய்லரே தரமாக இருக்கிறது. அதில் உழைப்பு தெரிகிறது.  தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பயஸ் ராஜ் பேசியதாவது…

இந்தப்படம் மிக சிறந்த திரில் அனுபவமாக இருக்கும். இசையமைப்பாளர் மிக சிறப்பான இசையை தந்திருக்கிறார். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.


இப்படத்தில் முக்கிய வேடத்தில் I. M. விஜயன்,  ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன்,  சிஜீ லால், வேணு மரியாபுரம்,  சொப்னா பிள்ளை,  மதுவிருத்தி,  திவ்யா கோபிநாத்,  தனுஜா கார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு : கார்த்திக் S. நாயர்

இசை : ரமேஷ் நாராயணன்

வசனம் : சீனிவாச மூர்த்தி

பாடல்கள் : சினேகன், மலர் வண்ணன்.

எடிட்டிங் : அஜித் உன்னிகிருஷ்ணன்

நடனம் : சாமி பிள்ளை

ஸ்டண்ட் : பவன் சங்கர்

கலை : பெனித் பத்தேரி

மக்கள் தொடர்பு : மணவை புவன்

தயாரிப்பு :மகேஷ்வரன் நந்தகோபால்

தயாரிப்பு நிறுவனம் : சூர்யா பிலிம் புரொடக் ஷன்ஸ்.

எழுத்து - இயக்கம் : பயஸ் ராஜ் (Pious Raj).

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...